ஆசியாவின் மிகப் பழமையான நூலகங் களுள் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால். கி.பி.1500-களில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டது இந்நூலகம். இங்கு முப்பதாயிரத்துக்கும் அதிகமான பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6,000-க்கும் அதிகமான அரிய வகை புத்தகங்களும் உள்ளன. ஐந்து நூற்றாண்டுக்கும் முந்தைய நூல்களை இழந்துவிடக்கூடாது என்பதற்காக 2015-ல் இவற்றை டிஜிட்டல்மயமாக்கும் வேலைகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏழரைக்கோடி ரூபாய் ஒதுக்கியது. இதுவரை 50 லட்சம் பக்கங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நிலையில், மிச்ச பக்கங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் வேலையை துரிதப்படுத்தும்படி அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். ஓலைச்சுவடி டிஜிட்டல் சுவடியாகுது!
சிலநேரங்களில் சில முதல் பெருமைகள் மகத்துவமானதாகவும் மறக்கமுடியாததாகவும் அமைந்துவிடும். ஸ்வேதா கட்டியின் சாதனை அத்தகைய ஒன்று. மும்பையின் பிரபலமான சிவப்புவிளக்கு பகுதிகளில் ஒன்று காமத்திபுரா. இங்கு வாழ்க்கைச் சூழலால் விலைமாதான பெண் ஒருவருக்கு மூத்த குழந்தையாகப் பிறந்தவர் ஸ்வேதா. “"நான் சிறுமியாக இருக்கையில் கல்விக்கும் பாதுகாப்பான சூழ்நிலைக்கும் போராட வேண்டியிருந்தது''’ எனச் சொல்லும் ஸ்வேதா, பெண் குழந்தைகளின் கல்வியில் அக்கறை காட்டு கிரந்தி எனும் தன்னார்வ அமைப்பில் 2012-ல் வேலைக்குச் சேர்ந்து, அதே சிவப்பு விளக்குப் பகுதி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தந்தார். இப்போது நியூயார்க்கிலுள்ள பார்டு கல்லூரி, ஸ்வேதாவுக்கு முழுமையான ஸ்காலர்ஷிப்பை அளிக்க முன்வந்திருக்கிறது. இந்தியாவின் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து, ஸ்காலர்ஷிப் பெற்று வெளிநாடு போய் படிக்கப்போகும் முதல் பெண் என்ற சிறப்பு ஸ்வேதாவுக்கு வாய்த்திருக்கிறது. வளமான எதிர்காலத்துக்கான ஒரு க்ரீன் சிக்னல்!
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு புதிய புதிய இக்கட்டுகளைக் கொண்டுவருகிறது. பூமியில் மனிதன் வாழ வேண்டுமானால் அதிகரித்து வரும் வெப்பநிலையிலும் வாழத் தயாராகவேண்டும் என ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அறிவியல் குழு எச்சரித்துள்ளது. பல்வேறு காரணங்களால் உலகில் பல விலங்குகள், தாவர வகைகள் அழிந்துவிட்டன. ஆஸ்திரேலிய தீவொன்றில் வசித்துவந்த எலி வகை ஒன்று 2018-ஆம் ஆண் டோடு முற்றும் அழிந்து விட்டது. பவளப் பாறைகள் உலகெங்கும் அழிவைச் சந்தித்துவருகின்றன. நாசாவின் ஆய்வொன்று பருவநிலை மாற்றத்தால், இந்தியாவின் 12 நகரங்கள் எதிர்காலத்தில் நீரில் மூழ்கி அழிவுக்குள்ளாகும் என எச்சரித்துள்ளது. இதில் சென்னையும் இடம்பெற் றிருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம். சென்னைவாசிகளே உஷார்!
உக்ரைனிலிருந்து தமிழக மாணவர்களை மீட்பதில் இந்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து செயல்பட்டது. இந்த மீட்புப் பணிக்கான சிறப்புக் குழுவைச் சேர்ந்தவரும் தி.மு.க. வின் அயலக அணிச் செயலாள ரும் எம்.பி.யுமான அப்துல்லா, உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவில் கார்மெண்ட் தொழில் செய்துவரும் கோகுலின் உதவியை நாடினார். தி.மு.க.வின் மருத்துவ அணி துணைச்செயலாளரான இவர் ருமேனியாவிலுள்ள தனது தொடர்புகள் மூலம் ருமேனிய எல்லைப் பகுதிகளை அடையும் தமிழ் மாணவர்களை ஒருங் கிணைத்து இந்தியா திரும்ப உதவினார். கோவையில் உள்ளாட்சித் தேர்தலின்போது, தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு மத்திய அரசால் திருப்பியனுப் பட்ட ஸ்டீபன் ருமேனியாவைச் சேர்ந்தவர். அவரும் தமிழக மாணவர்கள் மீட்புப் பணியில் தன்னாலான உதவிகளைச் செய்தார். ஊர்கூடித் தேரிழுக்கு றதுங்கிறது இதுதானா!
வழக்கமாக பாலங்கள், சாலைகள், சுரங்கப் பாதைகள் எல்லாம் மனிதர்களுக்காகக் கட்டப்படுவது. இந்தியாவிலே முதல்முறையாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விலங்குகளுக்காக ஒரு பாலம் கட்டப்பட்டிருக்கிறது. பால்சாகேப் தாக்கரே நெடுஞ்சாலை, மும்பையின் 10 மாவட்டங்களைக் கடந்துசெல் கிறது. 700 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தச் சாலையில், 117 கிலோமீட்டர் வனவிலங்குகள் அதிக நடமாட்டமுள்ள காடுகளின் வழியாக அமைந்துள்ளது.
இதனால் வனவிலங்குகள் சாலைப் போக்குவரத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படாமலிருக்க, விலங்குகள் கடந்துசெல்ல ஒரு மேம்பாலமும், எட்டு சுரங்கப் பாதைகளும் அமைக்கப் பட்டுள்ளன. இந்தப் பாதையில் சில விலங்குகள் சரணாலயங் களும் உள்ளன. விலங்குகள் மேல் பரிவு காட்டுவதுபோல் இருந்தாலும் இது விலங்குகளுக்கு எதிரான திட்டமென வனஉயிர் ஆர்வலர்கள், இந்த நெடுஞ் சாலைத் திட்டத்தை விமர் சிக்கவே செய்கின்றனர். ரோடு போடுறேன்னு கேடு பண்ணிடா தீங்க!
இணையவழி மோசடிப் பேர்வழிகளுக்கு, தனி நபராயிருந்தால் என்ன,…அரசு அமைப்பாயிருந்தால் என்ன?…சென்னை துறைமுகத் தின் வங்கிக் கணக்கிலிருந்து கோடிக்கணக்கில் ஆட்டையப் போட்டு அசரவைத்திருக் கிறார்கள். கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.100 கோடி வைத்திருந்தது சென்னை துறைமுகம். பணம் போட்ட 3 நாட்களில், சென்னை துறைமுக துணை இயக்குநர் கணேஷ் நடராஜன் என்று சொல்லிக்கொண்டு வந்தவர், அந்தப் பணத்தை நிரந்தர வைப்புக் கணக்கிலிருந்து, இரு நடப்புக் கணக்குகளுக்கு மாற்றினார். மாற்றியதுதான் தாமதம், அந்தப் பணம் உடனடியாக 34 கணக்குகளுக்கு மாற்றப்பட்டு கையாடல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. 11 பேரை கைது செய் திருக்கிறார்கள். துறைமுகத் தையே அலைக்கழிச்சுட் டாங்களே!
-நாடோடி