இந்திய அரசு நாடெங்கும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு ஜூலை 1 முதல் தடை விதித்திருக்கிறது. இதையடுத்து பாக்கெட்டில் குளிர்பானங்களை அடைத்துவைக்கும் நிறுவனங் கள் எல்லாம் இந்தத் தடைக்கான காலவரம்பை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன. முக்கியமாக அமுல், பார்லே அக்ரி நிறு வனங்கள், காகிதத்திலான ஸ்ட்ராக்கள் இந்தியாவில் குறைவு. அவற்றை போதுமான அளவு தயாரிக்க தற் போதிருக்கும் கால அவகாசம் போதாது. அமுல் நிறுவனத்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 லட்சம் ஸ்ட்ராக்கள் தேவையாம். வெளிநாட்டிலிருந்து தற்காலிகமாக இறக்குமதி செய்யலாம். ஆனால் அவை விலை அதிகம். எனவே நம் நாட்டிலேயே போதுமான அளவு காகித ஸ்ட்ராக்கள் தயாரித்துக் கொள்ள வசதியாக இந்தத் தடைக்கான தேதியை மாற்றி அறிவிக்கவேண்டும் என கேட்டுள்ளன. அறிவிப்பாச்சும் இரும்பாட்டம் உறுதியாயிருக்குமா!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் முகநூல் பதிவு உலகெங்கும் வைரலாகியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குப் பின் அங்கே போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜூன் 22-ஆம் தேதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அவரது வீட்டுமுன் ஐக்கிய மக்கள் சக்தி பெண்கள் அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது ஹிருணிகாவுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு ஹிருணிகாவின் மார்பகங்கள் குறித்து மோசமாகப் பதிவிட்டிருந்தனர். அதற்குப் பதிலளித்து வெளியிட்ட முகநூல் பதிவுதான் இப்போது பிரபலமாகியுள்ளது. "எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமையடைகிறேன். நான் எனது மூன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வளர்த்தேன். போலீசாருடனான மோதலில் எடுத்த புகைப்படங்களை வைத்து என்னை கிண்டல் செய்பவர்களும், தம் தாயிடம் முலைப்பால் அருந்தியவர்கள்தான்'’ என கேலிசெய்பவர்களுக்கு பதிலளித் துள்ளார். காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்!
கடந்த ஜூன் 17 முதல் 22 வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில், 3 தங்கப் பதக்கங்களையும் 1 வெள் ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி யிருக்கிறார் புதுச்சேரி மாணவி கிருத்திகா. புதுவை முதலியார் பேட்டை, திரு.வி.க. நகரைச் சேர்ந்த முருகானந்தம் மகள் கிருத்திகா. ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில், 69 கிலோ உடல் எடைகொண் டோருக்கான பிரிவில் 185 கிலோ எடை தூக்கும் பிரிவுப் போட்டியிலும், 85 கிலோ பெஞ்ச் பிரஸ் போட்டி ஆகியவற்றில் தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கம் வென்றார் கிருத்திகா. மேலும் டெட் லிப்டிங் போட்டியில் 145 கிலோ எடை தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். ஒட்டுமொத்தமாக இரு தங்கம், ஒரு வெள்ளி வென்று சாம்பியன்ஷிப் வென்றதற்கு ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் வைத்து புதுவை முதல்வர் ரங்கசாமியால் கௌரவிக்கப்பட்டார். ஆசியாவின் இரும்புப் பெண்மணி என்று போனசாக பட்டம் வேறு கிடைத்திருக்கிறது. இந்திய கௌரவத்தையும் சேர்த்து உயரத் தூக்கியிருக்காங்க!
ஆப்கானிஸ்தான் நாட்டை ஜூன் 22-ஆம் தேதி நள்ளிரவில் தாக்கிய பூகம்பம் நிலைகுலையச் செய்துள்ளது. ஏற்கெனவே தலிபான் ஆட்சியில் பொருளாதார நிலைகுலைவுடன் இருக்கும் ஆப்கானிஸ்தானை பூகம்பம் மேலும் சீர்கெடச் செய்துள்ளது. முக்கியமாக பக்திகா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிபாடுகளாக மாறியுள்ளன. தாராளமாக ஆயுதங்கள் கிடைக்கும் ஆப்கானிஸ்தானில், இடிபாடுகளை அகற்றி மக்களை மீட்பதற்கான இயந்திரங்கள், புல்டோசர்கள் உள்ளிட்டவை போதுமான அளவில் இல்லை. இதனால் இடிபாடுகளிலிருந்து தப்பியவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க வெறும் கைகளாலும், கடப்பாரை, மண்வெட்டிகளுடன் போராடிவருகின்றனர். இதுவரை இந்தப் பூகம்பத்தில் ஆயிரத்து இருநூறு பேர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம்பட்டுள்ளனர். பூகம்பம் நடந்த இரண்டு நாட்களில் இந்தியா, முதல் நாடாக நிவாரணப் பொருட்களை இரு தவணைகளாக அனுப்பி வைத்துள்ளது. மீண்டு எழுக!
உடல்நிலை சரியில்லையென்றால் அரசியல் பிரமுகர்கள், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று சிகிச்சைபெறுவர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் யானை பார்வதிக்கு தாய்லாந்திலிருந்து கால்நடை மருத்துவக் குழுவினர் வந்து சிகிச்சையளித்திருப்பதுதான் சமீபத்தைய கவன ஈர்ப்புச் செய்தி. பெரிய கோவில்களில் யானையை வைத்திருப்பது ஒரு கௌரவத்துக்குரிய விஷயமாகிவிட்டது. இந்த யானைகள் உடல்நலக்குறைவால் அவதிப்படும்போது, பக்தர்கள் மனம் வாடிவிடுகின்றனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில் யானை சிலகாலமாகவே கண்புரை நோயால் அவதிப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் மருத்துவர்கள் சிகிச்சையளித்துவந்த நிலையில், தாய்லாந்து நாட்டின் கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை மருத்துவர்கள் எட்டுப் பேர் காணொலிக் காட்சிமுறையில் யானையின் பிரச்சினையை பரிசோதனை செய்தனர். பின் ஜூன் 26-அன்று நேரில் வந்து சிகிச்சையளித்துள்ளனர். பார்வதிக்கு லேசர் சிகிச்சை தரணுமோ!
-நாடோடி