ஈரோடு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தினகர். இம்மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத் தைச் சேர்ந்த 50 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருவர். இந்நிலையில் தினகர் ஜூன் 20 அன்று மருத்துவம் படித்த அவரது மகன் அஸ்வினை சிகிச்சையளிக்க விட்டுவிட்டு மருத்துவமனை செவிலிகளுடன் ஒகேனக்கலுக் குச் சுற்றுலா சென்றுள்ளார்.
சிகிச்சைக்குவந்த முருகேசன், தலைமை டாக்டர் குறித்து விடாப் பிடியாக விசாரித்ததில் உண்மை வெளிப்பட்டி ருக்கிறது. கேள்விமேல் கேள்விகேட்டு பிரச்சனை செய்த முருகேசனை, சுற்று லாவிலிருந்து திரும்பிய தினகர் மருத்துவமனை வந்து மிரட்டியுள்ளார். முறையான விடுப்பில் செல்லாமல், மகனை சிகிச்சையளிக்க வைத்து சுற்றுலா சென்ற தினகர் குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விசாரணை நடத்தி அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். உப்பைத் தின்னவன் தண்ணிகுடிச்சாகணும்!
விமர்சனம் அவசியம்தான். ஆனால் அது அத்துமீறிவிடக்கூடாது. அதற்கு உதாரணம்தான் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுபோத்காந்த் சகாய். பா.ஜ.க. அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் பேசிய சுபோத், “"இது கொள்ளையடிப் பவர்களின் அரசாங்கம். மோடி ரிங்மாஸ்டரைப் போல் செயல்படுகிறார். ஒரு சர்வாதிகாரியின் பாத்திரத்தை ஏற்றுச்செய்கிறார். அவர் ஹிட்லரையும் மிஞ்சிவிட்ட தாக நான் உணர்கிறேன். ஹிட்லரின் பாதையைப் பின்பற்றினால், அவரைப்போலவே மோடியின் மரணம் இருக்கும்''’என விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. காங்கிரஸும், இத்தகைய அத்துமீறிய விமர்சனத்தைக் கண்டித்துள்ளது. தவளை தன் வாயால் கெடும்!
மியான்மர் எனப்படும் பர்மாவில் கலகம் மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி ஒருவருடத்துக்குமேல் ஆகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் நூற்றுக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட் டனர். ஐ.நா.வின் ஆதரவு டன் மனித உரிமை தொடர்பான பணி களில் ஈடுபட்டுவரும் டாம் ஆண்ட்ரூஸ், இந்த ஒடுக்குதலில் சிறுவர்கள் திட்டமிட்டு குறிவைக்கப் பட்டு கொல்லவோ ஊனமாக்கவோ படுகின்றனர் என ஐ.நா.வுக்கு அறிக்கையளித்துள்ளார். சண்டை, ஒடுக்குமுறை காரணமாக 2,50,000 குழந்தை கள் இடம்பெயர்ந்துள்ளனர். தவிரவும் 382 பேர் விமானத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு போன்ற வற்றால் மரணம், ஊனம் போன்றவற்றை அடைந்துள்ளதாக டாமின் அறிக்கை கூறுகிறது. 142 குழந்தைகள் போர் வீரர்கள், காவலர்கள், ராணுவ வீரர்களால் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் டாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். உக்ரைனைப் போலவே மியான்மரும் உலக நாடுகளால் அக்கறை யுடன் கவனிக்கப்படவேண்டும் என அவர் கோரிக்கை வைக்கிறார். லாபமில்லைன்னா வல்லரசு நாடுகள் தலையிடாதே!
ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமித்ரி முரடோவ். 2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இவரது செயல்பாடு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரஷ்யா, உக்ரைன் மீது போர்தொடுத்து பேரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருமிகிறது. நோபல் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த ரூ 3.80 கோடி தொகையை டிமிட்ரி, மாஸ்கோவிலுள்ள முதுகெலும்புப் பிரச்சனையால் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவுக் காகக் கொடுத்தார். ரஷ்யப் போரால் பெற்றோரை இழந்த அகதிக் குழந்தை களுக்கு உதவ நினைத்த டிமிட்ரி, தனக்குக் கிடைத்த நோபல் தங்கப் பதக்கத்தை ஏலம்விடப் போவதாக அறிவித்தார். நியூயார்க் மாகாணத்தின் ஹெரிடேஜ் எனும் நிறுவனம் ஏலம்விட்டதில் அவருடைய பதக்கம் 808 கோடிக்கு ஏலம் போனது. இந்தத் தொகை முழுவதையும் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். தங்க மனசுக் காரர்!
இவ்வளவுதான் வாழ்க்கை என்கிறார் கேதாரேஸ்வர் ராவ். எவ்வளவு என்கிறீர்களா? ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் பழைய பட்டினம்நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ் வர் ராவ். 1998-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற ராவுக்கு, பிரச்சினை ஒரு நீதிமன்ற வழக்கின் வடிவில் வந்தது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் வழக்கால் ஆசிரியராக முடிய வில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு சைக்கிளில் துணி விற்கத் தொடங்கினார். இடையில் பெற்றோர் இறந்தனர். ஏழ்மையால் துணி விற்கும் தொழிலை விட்டு அவ்வப்போது பிச்சையெடுக்கவும் செய்தார். கிட்டத்தட்ட வாழ்வில் முழுமையாகத் தோற்ற மனநிலைக்கு வந்தார் ராவ். திடீரென நீதிமன்றம் 1998 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கச்சொல்லி உத்தரவிட்டது. இதனால் இவர் வசிக்கும் கிராமத்து மக்கள், ராவின் நிலையை எண்ணி பரிதாபப்பட்டு அவருக்கு புத்தாடையும், புதிய செல்போனும் வாங்கித் தந்திருக்கின்றனர். தன்னை முழுதாகக் கைவிட்ட அதிர்ஷ்டம் திடீ ரென தன் 55 வயதில் திரும்பி வந்ததில் திக்கு முக்காடிப் போயிருக்கிறார் கேதாரேஸ்வர் ராவ். லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கு லக்!
-நாடோடி