பெருமூச்சு விடுகிறது தமிழகம்... ஆம், உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்களை மீட்பதில் தமிழக அரசு, அதற்கென தனிக்குழு அமைத்து, ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறையுடன் இணைந்து செயல்பட்டு அனைத்து மாணவர்களையும் பத்திரமாக மீட்டுள்ளதே இந்த பெருமூச்சுக்குக் காரணம்.
இரு வாரங்களுக்கு மேலாக உக்கிரமாக நடந்துவரும் ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையில், உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களில், தமிழகத்திலிருந்து சென்றவர்களே எண்ணிக்கையில் அதிகம். உக்ரைனில் ரஷ்ய விமானங்கள் சரமாரியாகக் குண்டுவீசும் போர்ச்சூழலில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு பாதுகாப்பு, வாகன வசதி, உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தன. இதற்கிடையே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குண்டுவீச்சில் பலியான செய்தி வந்ததும் மொத்த இந்தியாவும் பதறிப்போனது.
ஒன்றிய அரசு, மீட்புப் பணிக்காக "ஆபரேசன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனின் அண்டை நாடுகளுடன் களத்தில் இறங்கியது. இத்திட்டத்தின்படி, இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மாணவர்களை அழைத்துக் கொண்டு தாயகம் வருவதற்கான முயற்சியில் இந்தியா இறங்கியது.
இச்சூழலில், ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழக மாணவர்களைப் பத்திரமாக மீட்டு வரு வதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பாக, நாடாளு மன்ற உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன், நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அடங்கிய குழுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இவர்கள் உடனடியாக டெல்லி சென்று ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்துப்பேசி, ஒன்றிய அரசுடன் இணைந்து, தமிழக மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தியதோடு, மாணவர்களின் பெற்றோர்களுடனும் தொடர்பில் இருந்தபடி நம்பிக்கையூட்டி வந்தனர். தமிழக மாணவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது, மார்ச் 12-ம் தேதி காலையில் மாணவர்களின் இறுதிக்குழு தமிழகம் வந்தது. தமிழக அரசின் மீட்புக்குழுவின ரும் இணைந்து வந்தனர். அவர்களை விமான நிலையத்திற்கே சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற் றார். உடன் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் இருந்தனர். ஒன்றிய அரசுடன் இணைந்து மிகச்சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசை மாணவர்களும் அவர்களின் பெற் றோரும் வெகுவாக பாராட்டினார்கள். மாணவர்களை நன்கு ஓய்வெடுக்கும்படி முதலமைச் சர் அன்போடு கேட்டுக்கொண்டார்.
தமிழக மாணவர்களை மீட்பதில் தமிழக அரசு அமைத்த குழுவின் செயல்பாடு குறித்து குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், "உக்ரைனிலிருந்த இந்திய மாணவர்களில், தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 1921 ஆக இருந்தது. இவர்களில் 31 மாணவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். எனவே அவர்களைத் தவிர்த்து 1890 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளார்கள். உக்ரைனில் போர் தொடங்கியபோதே அங்குள்ள தமிழக மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இறங்கிவிட்டது. அதற்கென உதவி மையம் அமைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது. அதன்மூலம் உக்ரைனிலுள்ள மாணவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. அவர் களை மீட்பது குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசின் தகவல் பரிமாற்றத்துக்காக ராஜாராமன் என்ற அதிகாரியை வெளியுறவுத்துறை நியமித்திருந்தது.
தொடக்கத்தில் மீட்கப்பட்ட இந்திய மாண வர்களில், தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே தமிழக மாணவர்களை மீட்டுவருவதைத் துரிதப்படுத்து வதற்காக எனது தலைமையில் குழு ஒன்றை தமிழக முதல்வர் உரு வாக்கினார். எங்கள் குழுவினர், மறுநாளே வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து தமிழக மாணவர்களை மீட்பது குறித்து ஒரு மணி நேரத்துக்கு விவாதித் தோம். உக்ரைனில் மீட்புப்பணி நடக்கும் இடத் திற்கு நாங்கள் செல்கிறோமென்று அவரிடம் கூறி னோம். உடனே அவர், "அதெல்லாம் தேவையில்லை, நானே அதனைச் சரிசெய்கிறேன்' என்று கூறினார். தமிழக மாணவர்களிடம் பேசும் அதிகாரிகள், இந்தி யில் பேசுவது குறித்தும், மொழிச்சிக்கல் எழுவதை யும் குறிப்பிட்டோம். அதனையும் சரிசெய்வதாகக் கூறி உடனே அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்டார். நாங்கள் சந்தித்த பிறகு தமிழக மாணவர்களை மீட்கும் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது வெற்றிகரமாக மாணவர்கள் மீட்புப் பணி முடிவடைந்துள்ளது. மாணவர் களின் இறுதிக்குழுவினரை விமான நிலையத்துக்கே வந்து தமிழக முதல்வர் வரவேற்றுள்ளார். மாண வர்களை மீட்பதில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி கரமாக முடித்துள்ளார் தமிழக முதல்வர். இதே போல, மீட்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கல்வி குறித்த முயற்சியிலும் முதல்வர் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அவரது முயற்சி எதுவுமே வீண் போவதில்லை. எனவே மாணவர்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை'' என்றார்.