தமிழக சட்டமன்றத்தில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில சுயாட்சி குறித்த குரல் மீண்டும் ஒலித்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மாநில அரசுகளின் அதிகாரங்களையும், உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பறித்துக்கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கடிவாளம் போடும் வகையில், மாநில உரிமைகளைப் பாதுகாக்க, பாதுகாப்புக் குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மத்திய அரசின் அதிகாரக் குவிப்புகளுக்கு எதிராக முழங்கிய பேரறிஞர் அண்ணாவின் மாநில உரிமைக்குரலை சட்டப்பூர்வமாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் 1969-ல் ஒரு குழுவை அமைத்த அன்றைய முதல்வர் கலைஞர், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1974 ஏப்ரல் 26-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி எனும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார்.
அன்றைக்கு சட்டமன்றப் பேரவையிலும், மேலவை யிலும் பெரும் விவாதமே நடந்தது. அனைத்திற்கும் விளக்கமளித்தார் கலைஞர். பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததோடு நிற்காமல், இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசு களுக்கும் அனுப்பி வைத்தது தி.மு.க. அரசு.
அதன் தாக்கம் வீரியமாக இருந்தது. மாநில சுயாட்சி குறித்த விவாதங்கள், உரிமைக்குரல்கள் இந்தியா முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கின. மாநிலங்களில் நிலைகொண்டி ருந்த காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, மாநில கட்சிகள் ஆட்சி யைக் கைப்பற்றும் மாற்றம் உருவானது. ஆட்சியைக் கைப் பற்றிய மாநில கட்சிகள், மாநில சுயாட்சி குறித்த உரிமைக் குரலை தமிழகத்தைப் போலவே உயர்த்திப் பிடித்தன.
கலைஞரால் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் வழியாக தமிழகத்தில் பல்வேறு உரிமைகள் நிலைநிறுத்தப் பட்டன. ஆனால், மாநில சுயாட்சி முழுமையாக இன்னமும் மலரவில்லை. 51 ஆண்டுகள் கடந்தும் மாநில உரிமை களுக்காகவும், ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரங் களுக்கு எதிராகவும் இன்னமும் போராடத்தான் வேண்டியதிருக்கிறது.
அந்த வகையில்தான் மிகச்சரியாக 51 ஆண்டுகள் கழித்து தமிழக சட்ட மன்றத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி மாநில சுயாட்சிக்கான உரிமைக் குரலை முன்னெடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் அறிக்கை வாசித்த ஸ்டாலின், "மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மக்களுக்கான அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம். மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தொடர்ச்சியாக உரக்க முழங்கி வருகிறது தமிழ்நாடு.
மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதி காரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகிய வற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் பணிகள் இன்றைய ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. மாநில பட்டியலிலிருந்த கல்வியை ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசு மாற்றியதால், தேசிய கல்விக்கொள்கை 2020-ன் மூலம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை எனும் போர்வையில் இந்தி மொழியை திணிக்க முற்படுகிறது. மொழி, இனம், பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதி செய்ய, கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்,
பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியால், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால், மாநிலங்களின் வருவாய் ஈட்டும் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் வருவாயில் பெரும்பங்களிப்பை தமிழ்நாடு தரும்போது, நமக்கு 1 ரூபாயில் 29 பைசா மட்டுமே நிதிப்பகிர்வாக ஒன்றிய அரசு வழங்குகிறது. இது மிகமிகக் குறைவு''’என்று ஒன்றிய அரசால் பறிக்கப்படும் அதிகாரங்களையும், தமிழ்நாடு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளையும் அடுக்கடுக்காக பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த உரிமைகளையும் அதிகாரங்களையும் மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து பேசிய அவர், "மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் நாகநாதன் இருப்பார்கள். இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதியிலும், இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும்''’என்று அறிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதன்மூலம் மாநில சுயாட்சி குறித்த குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனை ஜீரணிக்க முடியாத அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்தன.
மாநில சுயாட்சியை முன்னெடுத்துள்ள முதல்வர் ஸ்டாலினின் இந்த முயற்சி குறித்து பேசிய பா.ஜ.க.வின் புதிய தலைவரான நயினார் நாகேந்திரன், "உண்மையில் மாநில உரிமைகளைப் பறித்தது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான். மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது என கூறும் முதல்வர், இதற்கு முன்பு அமைத்த குழுக்கள் என்னவானது என்பதை விளக்கவேண்டும். தனது ஆட்சியில் நடக்கும் தவறுகளை மறைக்க இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்ற நாடகங்களை அரங்கேற்றிய முதல்வர், தற்போது மாநில சுயாட்சி என்ற மடைமாற்றத்தை கையிலெடுத்துள்ளார். மாநில உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. ஆனால், மாநில சுயாட்சி என்பது பிரிவினை வாதத்தைத் தூண்டும், பிரிவினையை ஏற்படுத்தும் மாநில சுயாட்சி தேவையில்லை''’என்று கூறியிருக்கிறார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பதில் தி.மு.க.வை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "மாநில நலன், மாநில சுயாட்சி சார்ந்து அண்ணா காலத்திலிருந்து தி.மு.க. போராடியபோதெல்லாம், தி.மு.க. பிரிவினைவாதம் பேசுகிறது என அவதூறு பரப்பினர். அதே அவதூறை மோடி -அமித்ஷாவின் ஏஜெண்டான நயினார் நாகேந்திரனும் பேசியிருக்கிறார்.
மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக இருந்தால் தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும் என பேரவையில் விளக்கினார் முதல்வர் ஸ்டாலின். அவரின் பேச்சைக் கேட்டிருந்தாலே நயினாருக்கு புரிந்திருக்கும். ஆனால், டெல்லி எஜமானர்கள் கோபித்துக்கொண்டால் நம் பதவிக்கு ஆபத்து நேருமோ என்ற பதட்டத்தில் வெளிநடப்பு செய்துவிட்டு ஊடகங்கள் மூலமாக அவதூறை பரப்புவது கண்டிக்கத்தக்கது.
அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்ற கருவிற்கு கலைஞர் உருவம் கொடுத்தார். ஸ்டாலின் அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார். இந்த அடிப்படை அரசியல் நயினார் நாகேந்திரனுக்கு புரியவில்லை எனில் திராவிட கட்சியில் இருந்தார் என்பதற்கு அவர் வெட்கப்படவேண்டும். மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்காகவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்டக் குழு அமைக்கும் செயல் எப்படி பிரிவினை வாதமாகும்?
நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலும், குஜராத்தின் பா.ஜ.க. தலைமையும் ஏவும் பணிகளை பா.ஜ.க. மாநில அரசுகள் செய்வது போல, தமிழக முதலமைச்சரும் இருக்கவேண்டும் என நயினார் நாகேந்திரன் நினைப்பது அவரின் அரசியல் குறைபாட்டை காட்டுகிறது. ஒன்றிய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை. மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை முழக்கம், தமிழர்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தால் 2026 தேர்தலில் பா.ஜ.க. டெபாசிட் கூட வாங்காது என்பதை தனது எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது''’என்று காட்டமாக பதிலடி தருகிறார்.
மாநில சுயாட்சிக்காக ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சி, 50 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே தாக்கத்தை இப்போதும் கவனிக்க முடிகிறது. அந்த வகையில், தனது தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப், "ஆக்கப்பூர்வமான ஒரு முயற்சியை சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மத்திய -மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பது அடிக்கடி ஆராயப்பட வேண்டிய முக்கிய விசயம்.
குறிப்பாக நிர்வாகம், சட்டம், நிதி உள்ளிட்ட முக்கிய கூறுகளின் அனைத்து உறவுகளும் ஆராயப்பட வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அது உண்மையெனில் ஒற்றுமையை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதற்கு இந்த கமிட்டியின் ஆய்வு உதவும்''” என்கிறார் ஆழமாக.
மாநில சுயாட்சிக்காக எடுக்கப்படும் முயற்சிகள் காலம்கடந்தவை என்றும், தீர்மானம் நிறைவேற்றாமல் 110-விதியின் கீழ் கமிட்டி அமைப்பதினால் பெரிய நன்மை எதுவும் கிடைத்து விடாது என்றும் சர்ச்சைகளும், எதிர்மறை விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் எதிரொலித்தாலும் ஸ்டாலின் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, சரியான நேரத்தில் எடுக்கப் பட்டதாகவே உற்று நோக்கப்படுகிறது.