தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை களை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு புதிய திட்டத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் முன்னெடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வெண்ணெய்மலை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பாலியல் சீண்ட லால் தற்கொலை செய்துகொள் வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார். "தன்னை பாலியல் ரீதியாகக் கொடுமைப் படுத்தியது யார் என்று சொல் வதற்குக்கூட பயமாக உள்ளது' என்ற தன்னுடைய இயலாமையை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தி யிருந்தார்.
இச்சம்பவத்தையடுத்து, பாலியல் சீண்டலால் இனி ஒரு உயிர்கூடப் பலியாகக்கூடாது என் பதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத் துள்ளது. மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இணைந்து, புதிய செயலியை அறிமுகப் படுத்தியுள்ளனர். அதோடு, அமைச்சரும் மாவட்ட ஆட்சியரும் இணைந்து நேரடியாகக் களத்திலிறங்கி மாணவிகளிடம் உரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். "மாணவிகள் விஷயத்தில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதால், இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செயல்படுகிறது.
முதற்கட்டமாக ஒரு பள்ளியிலுள்ள மாணவிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில், மனரீதியாக ஆலோசனை தேவைப்படுவதாக 19 மாணவிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ள னர். அதேபோல் பாலியல்ரீதியான பிரச்சனை தனக்கோ அல்லது தன்னுடைய தோழிக்கோ நடை பெற்றதாக 9 மாணவிகள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். குடும்ப நபர்களுக்கு மருத்துவ உதவி கேட்டு 2, அரசு பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும் பிரச்சினை உள்ளதாக 6 மாணவிகள் கூறியுள்ளனர். அதேபோல் குழந்தைத் திருமணம் நடத்தப்படுவதாக 1 மாணவி கருத்துரைத்துள்ளார்.
இந்த கருத்துக் கேட்பின் அடிப்படையில், கல்வி உதவி வழிகாட்டி மையத்திற்கு 14417 என்ற ஒரு அழைப்பு எண்ணும், குழந்தைகள் உதவிக்கு 1098 என்ற எண்ணும், மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்ஆப் எண் 8903331098 ஆக, 3 எண்களையும் கொண்ட ஒரு செயல் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம், "நிமிர்ந்து நில் துணிந்து சொல்' என்ற தலைப்பின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இணைந்து துவங்கியுள்ளனர். இந்தத் திட்டத்தில், கரூர் மாவட்டத்திலுள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 201 பள்ளிகளைச் சேர்ந்த 26,085 மாணவிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 20 மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு அதிகாரிக்கு 10 பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், முதலில் அதிகாரி நேரடியாகச் சென்று உடனடியாக விசாரணை நடத்துவார்.
இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு ட்ண் என்று ஒரு சமிக்ஞை கொடுத்தால், உடனடியாக மாணவியின் இடத்திற்கு அதிகாரிகள் வந்துவிடுவார்கள். இதுபோல் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதோடு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் அனைத்துப் பாடப் புத்தகங்களிலும், நோட்டுகளிலும் "நிமிர்ந்து நில் துணிந்து சொல்' என்று முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ்அப் செயலிக்கு இதுவரையில், வந்த 9 அழைப்புகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 114 அழைப்புகளைச் சோதனைக்காகச் செய்துள்ளனர். 10 அழைப்புகள் குடும்பப் பிரச்சனை காரணமாக வந்துள்ளது. அதேபோல் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவோரிடமிருந்தும் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திற னாளிக் குழந்தைகளை இழிவாகப் பேசுவது உள்ளிட்ட புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. பள்ளி சென்றுவரும் பாதையில் கிண்டல் செய்வோர்மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காக முதற்கட்டமாக, கரூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பயின்ற சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'இளந்தளிர் திட்டம்' துவங்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத் தடுப்புக்கான உறுதிமொழியை அவரவர் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தன்னுடைய மகள் யாழினியுடன் சேர்ந்து மரக்கன்று ஒன்றை நட்டு வைத்துள்ளார். இதைப் பார்க்கும்போதெல்லாம் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுமென்றார். இதேபோல் ஒவ்வொரு பெற்றோரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மரக்கன்றை நடவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். தனது மாவட்ட ஆட்சியர் இல்லமும் இளந்தளிர் இல்லமே என்று விழிப்புணர்வு வாசகங்களை முன்வைத்து, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அமைச்சர் செந்தில்பாலாஜியும், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரும் உறுதிபடுத்தியுள்ளனர்.