டல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மருத்துவனையிலிருந்தபடியே அரசுப்பணிகளை கவனித்தார். ஓரிரு நாளில் முதல்வர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த திங்கள்கிழமை, வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு கிளம்பினார் ஸ்டாலின். ஒவ்வொரு நாளும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தை எளிதாக  நடப்பதை வழக்கமாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், திங்கள்கிழமை நடக்கும்போது ஒன்னரை கிலோமீட்டர் தூரம் நடந்த நிலையிலேயே டயர்டாக இருப்பதை உணர்ந்துள்ளார். லேசாக தலைசுற்றலும் இருந்துள்ளது. 

இதனையடுத்து உடனடியாக வீட்டுக்குத் திரும்பினார் ஸ்டாலின். களைப்பாக இருந்ததால் வாக்கிங் போகவில்லை என்று தனது மனைவி துர்காவிடம்  ஸ்டாலின் தெரிவிக்கவும், "ஹாஸ்பிட லுக்குப் போகலாம்' என துர்கா சொல்ல, ”"இப்போது பரவாயில்லை, அறிவாலயம் போகணும். போயிட்டு வந்த பிறகு ஹாஸ்பிட லுக்குப் போகலாம்''’என்றிருக்கிறார் ஸ்டாலின். 

Advertisment

அதன்பிறகு காலை அறிவாலயம் சென்றார். அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்வர்ராஜா, ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், துர்காவிடம் உறுதி தந்தபடி மருத்துவப் பரிசோதனைகளுக்காக அப்போலோ ஹாஸ் பிட்டலில் அட்மிட்டானார். அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன. எல்லாம் நார்மலாகவே இருந்தன. இதயத்துடிப்பில் மட்டும் சற்று ஏற்ற இறக்கம் இருந்தது. மருத்துவர்கள் தந்த சிகிச்சையில் அந்த ஏற்ற இறக்கமும் நார்மல் நிலைக்கு வந்தது.  

மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அட்மிட் என்கிற செய்தி, காட்டுத் தீ மாதிரி பரவியது. வழக்கமான பரிசோதனை என்பதால் தி.மு.க.வில் யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஆனால், திங்கள்கிழமை மாலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ”"முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். மருத் துவர்கள் கண்காணிப்பில் 3 நாட்கள் இருப்பார்'” என்று சொல்லப்பட்டதை அறிந்துதான் தி.மு.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டது.  

"முதல்வருக்கு என்னாச்சு?' என்கிற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எதிரொலித்தது. அதற்கேற்ப, பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஜினிகாந்த் என வி.வி.ஐ.பி.க்கள் பலரும் முதல்வரிடம் நலம் விசாரிக்கத் தொடங்கியதும், முதல்வருக்கு என்னாச்சு? என்கிற கேள்வி அதிகரித்தது. தி.மு.க. உடன்பிறப்புகளிடம் ஒருவித கவலையும் தெரிந்தது. 

Advertisment

stalin1

தி.மு.க. மா.செ.க்கள் சிலரிடம் பேசியபோது, "மருத்துவப் பரிசோதனைகளுக்காக தலைவர் சென்றாரெனில், 5 மணி நேரத்தில் மீண்டும் வீடு திரும்பிவிடுவார். பொதுவாக, ஹாஸ்பிட்டலில் அட்மிட்டாவதை தலைவர் விரும்பியதில்லை. இப்படிப்பட்ட நிலையில், வழக்கம்போல மாலை யில் வீடு திரும்பிவிடுவார் என நாங்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், "மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் ஹாஸ்பிடலில் இருப்பார்; இங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனிப்பார்' என்கிற தகவல்தான் திடீர் கவலையை ஏற்படுத்தியது. அதேசமயம், மருத்துவ பரிசோதனைகளுக்குப்பிறகு தலைவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி எங்களின் கவலையைப் போக்கிவிட்டது. இனி உடன்பிறப்புகள் தெம்பாகி விடுவோம்''’என்றனர். 

இந்த நிலையில், "அரசுப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நான் ஆலோசிக்க வேண்டும்' என்று டாக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொல்ல, "தாராளமாக ஆலோசிக்கலாம்; அரசுப் பணிகளை கவனிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என அனுமதித்தனர். இதனையடுத்து, தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், சண்முகம் ஆகியோரிடம் ஆலோசித்தார் ஸ்டாலின். 

"உங்களுடன் ஸ்டாலின்' எனும் திட்டத்தை கடந்த 15-ந் தேதி தொடங்கிவைத்தார் முதல்வர். அந்த திட்டம் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதற்காக தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. இந்த திட்டத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளரிடம் விவாதித்த முதல்வர், "இதுவரை எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளன?'' என்று கேட்க, "இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 5,74,614 மனுக்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அவைகள் அனுப்பி வைக்கப்பட்டு உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிய முதல்வர்,’"திட்டமிடப்பட்டிருந்தபடி அட்டவணை யில் குறிப்பிட்ட நாட்களில் இந்த திட்டத்தின் முகாம்கள் நடக்க வேண்டும். அதில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது. முகாம்களைத் தேடிவரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதுடன், அரசின் சேவை முழுமை யாகக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். மேலும், மனுக்களுக்கு தீர்வு காண்பதில் கால தாமதம் ஏற்படக் கூடாது” என்று அறிவுறுத்தினார். 

இதனைத் தொடர்ந்து, சில கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டதை அடுத்து, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலிக் காட்சி வழியாக முதல்வர் விசாரிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.  அதன்படி, மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்களான கலைச்செல்வி மோகன், பவன்குமார், அழகுமீனா ஆகியோரிடம் விவாதித்தார் ஸ்டாலின். 

உங்கள் மாவட்டங்களில் எத்தனை முகாம்கள் நடந்திருக்கிறது? இன்னும் எத்தனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும்? முகாம்களை பயன்படுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமாக வருகிறார்களா? எத்தனை மனுக்கள் பெறப்பட்டன ? அந்த மனுக்கள் மீது தீர்வுகாண ஆட்சியர் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதிகமாக எப்படிப்பட்ட மனுக்கள் வருகின்றன? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அதற்குரிய பதில்களைப் பெற்றார் ஸ்டாலின். 

குறிப்பாக, பட்டா மாறுதல், அதிலுள்ள சிக்கல்கள், மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்வு, சாதி சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், ரேசன் அட்டையில் பெயர் நீக்கம், சேர்த்தல் குறித்த கோரிக்கைகள் நிறைய வருகின்றன என்றும், அவை உரிய முறையில் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்கள்தான் அதிகம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். 

மேலும், "மனுக்களை தீர்ப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று அவைகளை தீர்ப்பதில் சீரியஸாக இருக்கவேண்டும். சிக்கல் இருக்கிறது என அவைகளை கிடப்பில் போட்டுவிடக்கூடாது. மக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதில் அதீத கவனம் இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும்''’என்று அட்வைஸ் செய்தார் ஸ்டாலின். 

இந்த ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனுக்கள் கொடுக்க வந்த மக்களிடமும் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அவர்களிடம், "இப்படி முகாம் நடப்பது உங்களுக்கு எப்படி தெரியவந்தது? உங்க கோரிக்கை என்ன? என்ன கோரிக்கைக்காக இங்கு வந்துள்ளீர்கள்? உங்க கோரிக்கைகள் தீர்க்கப் பட்டனவா?'' என்றெல்லாம் இயல்பாகக் கேட்டார் ஸ்டாலின். அதற்கு, தங்களின் கோரிக்கை சரி செய்யப்பட்டது என்பதை முதல்வரிடம் தெரிவித்தனர்.   

உயரதிகாரிகளிடம் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்களிடம் ஆய்வு, பொதுமக்களிடம் குறைகள் கேட்பது என அப்பல்லோ மருத்துவமனையை தலைமைச் செயலகம் போல் மாற்றிவிட்டார் ஸ்டாலின். அவரது உடல் நலமும், குரலும் எப்போதும் போல் தெம்பாக இருந்ததை கவனித்து உடன் பிறப்புகளுக்கு ஏக உற்சாகம். ஓரிரு நாளில் வீடு திரும்பி, ஆட்சி மற்றும் கட்சிப் பணிகளை வழக்கம்போல கவனிப்பார் என்கிறார்கள் அரசின் உயரதிகாரிகள். 

__________
இறுதிச்சுற்று!


தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர் களை வியாழக்கிழமை (24-7-2025) சந்தித்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராம தாஸ், "பா.ம.க.வின் தலைமை யகம் சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. சென்னை யைத் தவிர, வேறு  இடத்தில் இல்லை. அன்புமணி, செயல் தலைவர் மட்டும்தான். தேர்தல் ஆணையத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. பா.ம.க.வின் தலைவர் என அன்புமணி கூறிக்கொள்வதும், பா.ம.க. நிர்வாகிகளை   தாமாக நியமிப்பதும்  சட்ட விரோதம். அன்புமணி தமது பெயருக்கு பின்னால் என் பெயரை போடக் கூடாது. பா.ம.க.வின்  தலைமைக்கு கட்டுப்படா தவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். செயல்தலைவரான அன்புமணி, அவரது சுற்றுப் பயணத்திற்கு நிறுவனர் தலைவரான என்னிடம் அனுமதி பெறவில்லை. தலைவர் என சொல்லிக் கொண்டு கட்சிப் பெயரையும் கொடியையும் அவர் பயன்படுத்தக்கூடாது'' என்றிருக்கிறார். 
-இளையர்