"இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதும் சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்துவருவதால் இலங்கை அர சிடமிருந்து கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்; இதற்காக இந்தியா -இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெற வேண்டும்' என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் ஏப்ரல் 2-ந் தேதி ஒருமனதாக நிறைவேறியது.

ss

தீர்மானத்துக்கு அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. கச்சத்தீவு விசயத்தில் அரசியல் ரீதியாக கடந்தகால நிகழ்வுகளை எடப்பாடி முன்வைக்க, "பழைய காலங்களைப் பேசினால் நாங்களும் பேச முடியும். ஆனால், தமிழ்நாட்டின் உரிமையான கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற விரும்புகிறேன் என்று பதிலடி தந்தார் முதல்வர் ஸ்டாலின். ஒரு கட்டத் தில் தீர்மானத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி முழு மையாக ஆதரவு தெரிவிக்க, ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. தீர்மானம் நிறைவேறியதும் சட்டசபையை விட்டு வெளியேறினார் எடப்பாடி. கச்சத்தீவு மீட்பு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது நான்காவது முறை.

இந்திய அரசால் இலங்கைக்குத் தாரைவார்க் கப்பட்ட கச்சத்தீவு மீட்பு விவகாரம் தமிழக சட்ட மன்றத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கும் சூழலில், தமிழகத்தின் முதல்வராக கலைஞர் இருந்தபோது தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன ? இதன் வரலாறு மிக நீண்டது.

Advertisment

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் தென்பகுதியில் கடற்படை பயிற்சித் தளம் ஒன்றை அமைக்கத் தீவிரமானது இந்திய கடற்படை. அப் போது அந்த பயிற்சித்தளத்தை அமைக்க தமிழகத் தின் ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை தேர்வு செய்தது இந்தியா. இதற்கு இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1956-ல் மீண்டும் இதே பிரச்சனை எழ, கச்சத்தீவை இந்திய விமானப்படையின் பயிற்சித்தளமாக மாற்றுவோம் என இந்திய அரசு குரல் கொடுத்த சூழலில், கச்சத்தீவு எங்களுக்கே சொந்தம் என முதன்முதலாக உரிமைக்குரல் எழுப்பியது இலங்கை. இதில் ஏற்பட்ட பல்வேறு விவாதங் களால், பயிற்சித் தளம் அமைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இந்தியா.

ss

Advertisment

பல வருடங்கள் இதே நிலை நீடிக்க, இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1973-ல் இலங்கைக்கு பயணப்பட்டார். இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவும் இந்திராவும் சந்தித்தனர். கச்சத்தீவு விவகாரம் விவாதிக்கப்பட்டது. அந்த சந்திப்பின்போதே, இலங்கைக்கு ஆதரவாக இந்திரா முடிவெடுத் தார் என்கிற தகவல்களும் பரவியிருந்தன.

அதற்கேற்ப 1974 ஜனவரியில் டெல்லிக்கு வந்த பண்டாரநாயகா, இந்திராவை சந்தித்தார். பேச்சுவார்த்தை நடந்தது. கச்சத்தீவை, இலங்கைக்கு கொடுப் பது என்கிற உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண் டார் இந்திரா. இதனை தங்களின் டெல்லி சோர்ஸ் மூலம் அறிந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர், "கச்சத்தீவு தமிழ்நாட் டிற்கே சொந்தமானது. இலங்கைக்கு தாரை வார்க்கக்கூடாது' என்றார்.

உடனே சட்ட அமைச்சர் மாதவனுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் இந்திராவை சந்தித்து, கச்சத்தீவு தமிழ்நாட்டிற்கு சொந்த மானது என்பதற்கான பல்வேறு சரித்திர ஆதாரங்கள், ஆவணங்கள் பலவற்றை இந்திராவிடம் காண்பித்து, இலங்கைக்குத் தாரைவார்க்கக்கூடாது என வாதாடினார்; எதிர்ப்பு தெரிவித்தார் கலைஞர்.

ஆனால், 28-06-1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் இந்திரா. டெல்லியில் இருந்தபடி இந்திரா கையெழுத் திட, அதேநாளில் அதே நேரத்தில் இலங்கை யில் கையெழுத்திட்டார் பண்டாரநாயகே. இரண்டு பிரதமர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்திட இந்த ஏற்பாடு செய்யப் பட்டது. இந்திரா கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கேவல்சிங், டெல்லியிலிருந்து இலங்கைக்கு சென்று பண்டார நாயகேவிடம் ஒப்படைத்தார். அதேபோல, பண்டாரநாயகே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயசிங்கே டெல்லிக்கு வந்து இந்திராவிடம் ஒப்படைத்தார்.

தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. முதல்வர் கலைஞரை சந்தித்து இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னை சந்தித்த வெளியுறவுத்துறை செயலாளர் கேவல்சிங், இலங்கை அகதிகள் விவகாரத்தைத்தான் பேசினார். கச்சத்தீவு குறித்து பேசவில்லை. ஆனால், கச்சத்தீவு குறித்து தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத் தியதுடன், கச்சத்தீவு ஒப்பந்தத்தை தமிழர்கள் ஏற்கமாட் டார்கள் எனச் சொன்னேன்''’என்றிருக்கிறார் கலைஞர்.

ss

கச்சத்தீவு ஒப்பந்தம் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களும் சிங்கள பேரினவாத சக்திகளும் கொண்டாடித் தீர்த்தன. ஸ்ரீமாவோ பண்டாரநாயகே வின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் ஆனந்தக் கூச்சலிட்டது இலங்கை. ஆனால், தமிழகம் இதனை ஜீரணிக்க முடியாமல் தவித்தது.

அதேசமயம், ஜனவரி மாதம் இலங்கைக்குச் சென்ற இந்திரா, பண்டார நாயகேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கச்சத்தீவு தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் சொந்தம் என ஆதாரப்பூர்வமாக இந்திராகாந்திக்கு கடிதம் எழுதியிருந்தார் கலைஞர்.

அந்த கடிதத்தின் முழு விபரங்களையும், கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டாவது நாள் அதாவது 30-06-1974ல் வெளியிட்டார் கலைஞர். அதில், இலங்கைக்கு உட்பட்ட தீவாக கச்சத்தீவு ஒரு காலத்திலும் இருந்ததில்லை. அதனை நிரூபிக்க ஏராளமான சர்வதேச ஆதாரங்கள் இருக்கின்றன. நம்மிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை எந்த ஒரு அகில உலக நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். அதேபோல, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்போது இந்த ஆதாரங்களையெல்லாம் காட்டி கச்சத்தீவு நமக்கு சொந்தமானது என நிரூபிக்க முடியும் என்று ஏகப்பட்ட விபரங்களை எழுதியிருந்தார் கலைஞர். இந்திரா காந்திக்கு கலைஞர் எழுதிய அந்த கடிதத்திற்கு இப்போது வரை பதில் சொல்லவில்லை ஒன்றிய அரசு.

கடிதத்தை வெளியிட்ட அதேநாளில் தமிழக சட்டப்பேரவையின் சட்டசபை மற்றும் மேலவையை சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் கலைஞர். ஆலோசனையின் முடிவில், ‘’இந்தியாவுக்குச் சொந்தமான தும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு இந்த கூட்டம் வருத்தத்தை தெரிவித்துக்கொள் கிறது. மத்திய அரசு, இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மாற்றி யமைக்க வேண்டும். கச்சத்தீவில் இந்தியா வுக்கான உரிமையை நிலைநிறுத்த வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன. அ.தி.மு.க. சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட அரங்கநாயகம், தீர்மானத்தை எதிர்த்து கையெழுத்திடாமல் வெளியேறினார்.

அதன்பிறகு, கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிராக 1974, ஆகஸ்டில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் கலைஞர். இந்த தீர்மானத்தின் மீது பாராமுகம் கொண்டிருந்தார் இந்திரா. இதனால் இப்பிரச்சனையைக் கிடப்பில் போட்டது இந்தியா.

இந்த நிலையில், 1976-ல் கச்சத்தீவு சம்பந்தமாக இரண்டாவது முறை ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டார் இந்திரா. அதில், முதல் ஒப்பந்தத்தில் (1974) இருந்த தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க இருந்த உரிமை பறிக்கப் பட்டிருந்தது. இதற்கும் தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பினைக் காட்டியது. ஆனால், இந்திராகாந்தி அசைந்து கொடுக்கவில்லை. v கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதுமல்லாமல், அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதால் அப்போதிலிருந்து இப்போதுவரை தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தியபடியே இருக்கிறது இலங்கை கப்பல்படை. தமிழக மீனவர்களால் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. தாக்குதல்களும் கொல்லப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா ஆட்சியில் இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது.

இதற்கிடையே, கலைஞர் தலைமையில் 15-04-2013ல் தேதி நடந்த டெசோ மாநாட்டில், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என பிரகடனப்படுத்த உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்து, கலைஞர் சார்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் இப்போதும் நிலுவையில் இருந்து வருகின்றன. கலைஞர் மறைந்துவிட்ட நிலையில், அவர் தாக்கல் செய்திருந்த வழக்கில் கலைஞருக்குப் பதிலாக தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு, சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக மீனவர்களின் உயிர் காக்கவும், கச்சத்தீவில் தமிழகத்தின் உரிமை மீண்டும் நிலைபெறவும், கச்சத்தீவை மீட்க நான்காவது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.