ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாடு சேலத்தில் ஆகஸ்டு 15-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடந்தது. "வெல்க ஜனநாயகம் எழுச்சி மாநாடு' என்ற பெயரில் நடந்த இந்த மாநாட்டிற்கு, மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் தலைமையில் செம்படையினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  

Advertisment

முதல்நாள் நிகழ்வில், சுதந்திர தினத்தை யொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்தார். தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மூர்த்தி மாநாட்டுக் கொடியை ஏற்றினார். தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் உரையுடன் மாநாடு தொடங்கியது. 

வி.சி.க. தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், "சனாதனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் ஜனநாயகம் வெற்றிபெற வேண்டும். வலதுசாரிகள் தாங்கள் விரும்பியதை எல்லாம் சட்டமாக்குகின்றனர். தேர்தல் ஆணையத்தை தம் விருப்பம்போல் வளைக்கிறார்கள். இதை எதிர்கொள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வலுவான கூட்டணி'' என்றார். 

இரண்டாம் நாள் (ஆக.16) அமர்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டதால், கூட்டணி கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். 

Advertisment

மு.க.ஸ்டாலின், மாலை 6:30 மணிக்கு, தனி விமானத்தில் சென்னையிலிருந்து சேலம் காமலாபுரம் விமானநிலையம் வந்துசேர்ந்தார். அமைச்சர்கள் ராஜேந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மதிவேந்தன், எம்.பி.,க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர் எ.வ.வேலுவும் வந்திருந்தார். 

முதல்வர் முன்னிலையில் தலைமை உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "1950-ஆம் ஆண்டு சேலம் சிறையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 22 கம்யூனிஸ்டுகளுக்கு சிறைமுன்பு நினைவுச் சின்னம் அமைக்கவேண்டும்'' என்று உரிமையுடன் கோரிக்கை வைத்தார். 

அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே, "சிறை தியாகிகள் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும். நிகழ்ச்சிக்கு வரும்போதே அதிகாரிகளுக்கு அதற்கான உத்தரவுகளை வழங்கிவிட்டுத்தான் வந்தேன்'' என்று அதிரடித்தார். தொடர்ந்து பேசியவர், "எல்லார்க்கும் எல்லாம் என்ற லட்சியத்தின் இரு முகங்கள்தான் திராவிட இயக்கங்களும் பொதுவுடைமை இயக்கங்களும். கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் தி.மு.க.  எங்களில் பாதி நீங்கள்'' என்றார். 

Advertisment

 “ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு அமைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று சொன்னேனோ அதெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்தி மொழி கட்டாயமாக்குதல்; பட்டப் படிப்பு படிக்காமலேயே பாரம்பரிய குருகுலத்தில் படித்தாலே மாதம் 75,000 ரூபாய் உதவித் தொகையுடன் ஐ.ஐ.டி.யில் படிக்கலாம் என்ற திட்டம் கொண்டுவந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முன்னிலைப்படுத்துவார்கள் என்று சொன்னோம். விடுதலை நாள் விழாவில் பிரதமரே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை புகழ்ந்து பேசி யிருக்கிறார். ஒன்றிய அரசு வெளியிடக்கூடிய விளம்பரங்களில் காந்திக்கு மேல் சாவர்க்கர் படம் இருக்கு. இதுதான் இன்றைய அவல நிலை'' என்றார் மு.க.ஸ்டாலின். 

cm1

கூட்டணிக் கட்சிகளுக்கு "ரெட் சல்யூட்' என்று சொல்லி வணக்கம் வைத்தார் முதல்வர். அப்போதும் கூட்டத்தில் கைத்தட்டல் பறந்தது. ஊடகத்தினர் புகைப்படத்திற்காக சல்யூட் வைக்கச் சொன்னபோது உற்சாகமாக சல்யூட் வைத்ததோடு, முத்தரசன், டி.ராஜா ஆகியோரையும் சல்யூட் வைக்கச் சொன்னார். 

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பேசும்போது, "கூட்டணிக்குள் கருத்து முரண்கள் இருந்தாலும், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்தான் தொடர்ந்து பயணிப்போம்'' என்று உறுதியளித்தனர். 

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாநாட்டின் பிரதிநிதிகளாக மொத்தம் 498 பேர் கலந்துகொண்டார்கள். 17-ஆம் தேதியே புதிய மாநிலக் குழு தேர்வு நடைபெறுவதாக இருந்தது ஆனால் 18-ஆம் தேதி மதியம்தான் புதிய மாநிலக் குழு உறுப்பினர்களாக 101 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டார்கள். 

முன்னதாக கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள் 9 பேர் தேசிய மாநாட்டு பிரதிநிதிகளாக 96 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். கட்சியின் துணைச் செயலாளராக உள்ள மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் க. சந்தானம் ஆகிய இருவரின் பெயர்கள் மாநிலச் செயலாளர் போட்டியிலிருந்தது. 

இந்நிலையில் "நேரம் கடந்துவிட்டது மாநாடு பேரணி தொடங்கவேண்டும், பொதுக்கூட்டம் நடைபெறவேண்டும். புதிய நிர்வாகக் குழு தேர்தல் நடந்தபிறகு மாநில செயலாளரைத் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே தோழர் நல்லகண்ணு பதவிக் காலம் முடிந்தபோது நடைபெற்ற மாநாட்டில் புதிய மாநிலச் செயலாளர் தேர்வினை அகில இந்திய மாநாட்டுக்கு பிறகு தேர்வு செய்யலாம் என முடிவுசெய்து அதன்படியே நடந்தது. இப்போதும் அதே நடைமுறையைப் பின்பற்றலாம். புதிய மாநில செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நான்தான் மாநிலச் செயலாளர் என முத்தரசன் அறிவித்து மாநாட்டை நிறைவுசெய்தார்.

தி.மு.க. கூட்டணியை எப்படியாவது சிதறடிக்கச் செய்யமுடியுமா என்று அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டுவரும் நிலையில், இந்திய கம்யூ     னிஸ்ட் கட்சி மாநில மாநாடு, மதச்சார்பற்ற கூட்டணியை மேலும் வலுவடையச் செய்திருப்பதாகவே அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.