விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் நவ.-03-ஆம் தேதி கல்குவாரியில் நடந்த விபத்தில் ரங்கராவ், ஆறுமுகம் என்ற இருவர் படுகாயமைடந்தனர். இதில் சிகிச்சை பலனிக்காமல் ஆறுமுகம் மரண மடைந்தார். வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணியின் மகன் பிரபு பெயரில் உள்ள குவாரி என்பதால் போலீசின் ஆக்ஷனும் சீரியசாக இல்லை.

Advertisment

இந்த விவகாரத் தினைத் தான் கடந்த பத்து நாட்களுக்கு, கனிம வளத்துறைருக்கும் பொறுப்பு வகிக்கும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏ.வின் மகனுக்கு குவாரி லைசென்ஸ் கொடுத்ததால் வந்த வினை’ என கடுமையாக சாடியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

formerministers

இதற்கு பதிலடி கொடுத்த சிவி.சண்முகம், “சட்டத்திற்குட்பட்டு பொது ஏலத்தின் மூலம்தான் குவாரி எடுத்துள்ளார் பிரபு. திமுகவில் உள்ளவர்கள் மட்டும் யோக்கியர்களா? இதே விழுப்புரம் மாவட்டத்தின் பொன்முடி கனிமவளத்துறை மந்திரியாக இருந்த போது, தனது மகன் கௌதமசிகாமணிக்கு செம்மண் எடுக்க காண்ட்ராக்ட் வழங்கினார். அது சம்பந்தமான வழக்கும் இப்போது நடக்கிறது. அதே போல் அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு போன்றோரும் குவாரி எடுத்துள்ளார்கள். அவர்களையெல்லாம் கட்சியிலிருந்து நீக்குவாரா ஸ்டாலின்? என சீறினார்.

Advertisment

இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என களத்தில் குதித்த பொன்முடி, முறையான பட்டா நிலத்துலதான் செம்மண் எடுக்க அனுமதி கொடுத்தோம். ஆனால் அதிமுக ஆட்சி வந்த பின் வருவாய்த்துறையை மிரட்டி என்மீது வழக்குப் போட்டுள்ளனர் என எகிறியடித்தார்.

இரண்டு பேரும் மாறி மாறி உண்மையச் சொல்லி தெய்வத்துக்குச் சமமாகிவிட்டதால், அதிமுக திமுக இரண்டு ஏரியாவிலும் சூடம் காட்டுதல், சாம்பிராணி போடுதல், பூக்குழி இறக்குதல் போன்ற ஆன்மிக அரசியல் வைபவங்கள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன.

முதலில் திமுக ஏரியாவில் பொன்முடிக்கு எதிரான சூடம் காட்டுதல் பற்றி நம்மிடம் பேசினார் விழுப்புரம் உ.பி.ஒருவர். ""தன் பெண்டு தன் பிள்ளை என வாழ்ந்து பழக்கப்பட்டவர் பொன்முடி. இப்போது நவ.19-ஆம் தேதிகூட அந்த செம்மண் வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பொன்முடி, அவரது மனைவி, மகன் கௌதமசிகாமணி ஆகியோர் ஆஜராகததால் டிச.14-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.

Advertisment

formerministers

கட்சிக்காரனிடம் கருணையுடன் நடந்தாதானே அவருக்கு ஒண்ணுன்னா களத்துக்கு வருவான். அவர் மகன் கௌதமசிகாமணியின் எட்டு கோடி ரூபாய் சொத்தை அமலக்காத்துறை முடக்கிய போது யாரும் கவலைப்படலையே. இந்த மாவட்டத்தில் எங்க கட்சி, ஆளும் கட்சி ரெண்டு கட்சியிலும் இருக்கும் விஐபி.க்களுக்கு பினாமிகள் பேரில் குவாரிகள் இருக்கத்தான் செய்யுது. இந்த மாதிரியான மாவட்ட அக்கப்போர்களைப் பற்றி தீரவிசாரித்த பிறகே தளபதி ஸ்டாலின் அறிக்கைவிட வேண்டும்''’ என்றார்.

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக சாம்பிராணி போடும் வைபவம் குறித்து திண்டிவனம் ர.ர.ஒருவர் நம்மிடம், ""அங்கே பொன்முடின்னா இங்கே சண்முகம். ரெண்டு பேருக்கும் இடையில் என்ன வித்தியாசம்னா, வருங்கால வைப்புநிதியை யோசித்து நிகழ்காலத்தில் சில வேலைகளைச் செய்வார் சண்முகம். அப்படிப்பட்ட வேலைதான் சக்கரபாணியின் மகன் பிரபுவுக்கு குவாரி கொடுத்தது. வானூர் தொகுதி மீண்டும் சக்கரபாணிக்கே என வாக்குறுதி கொடுத்திருக்கார் சண்முகம். அதுக்கு ஆப்பு வைக்க, எங்க கட்சிக்காரர்களே குவாரி விவகாரத்தைக் கிளப்பிவிட்டார்கள்'' என்றார்.

-எஸ்.பி.எஸ்.

____________________

நக்கீரனால் கிடைத்த சாதி சான்றிதழ்! -நெகிழ்ச்சியில் மலைவாழ் மக்கள்!

caste

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 46 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களான மலையாளிப் பழங்குடியினருக்கு சான்றிதழ் தராமல் எனக்கேட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பது குறித்தும், அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பதையும் கடந்த நவம்பர் 21 -24 ந்தேதி இதழில் "பழங்குடி மக்களை அதிரவைக்கும் அதிகாரிகள்! வாழ்வுரிமை போராட்டம்' என்கிற தலைப்பில் பிரிவாக வெளியிட்டுயிருந்தோம்.

இது கோட்டை வரை எதிரொலித்தது. மாவட்ட நிர்வாகத்திடம் தலைமை செயலாளரும், பழங்குடியின நல செயலகமும் கேள்வி எழுப்பியது. புதிய சார் ஆட்சியர் வந்தனா கர்க்கிடம், ஆய்வு நடத்தி சான்றிதழ் வழங்குங்கள் என உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன்அருள். அதனை தொடர்ந்து புதூர்நாடு கிராமத்துக்கு சென்று அந்த நாடுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த சாதி சான்றிதழ் கேட்டு மனு செய்திருந்தவர்களின் மனுக்களை பரிசீலனை செய்து கடந்த நவம்பர் 23ந்தேதி 70 பழங்குடியின மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கினார். மற்ற மனுக்கள் மீதும், புதிய விண்ணப்பங்களுக்கும் உரிய ஆய்வு நடத்தி உடனடியாக சான்றிதழ் வழங்குகிறோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

சாதி சான்றிதழ் பெற்ற மலைவாழ் மக்கள் சிலர் நம்மை தொடர்பு கொண்டு நக்கீரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

-து. ராஜா