முதலமைச்சராக பொறுப்பேற்றதும் தேர் தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக, 5 முக்கிய கோப்பு களில் கையெழுத்திட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதன்படி, கொரோனா நிவாரணமான 4000/-ல் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்குதல், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, அரசின் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நோயாளிகளுக்கான தனியார் மருத்துவமனை கட்டணங்களை அரசே ஏற்கும், தேர்தல் பரப்புரையின்போது மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்பதற்காக தனித்துறை உருவாக்கு தல் ஆகிய 5 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

t

ஸ்டாலின் தலைமையிலான கேபினட்டில் அவரைத் தவிர 33 பேருக்கு அமைச்சர் வாய்ப்பு தரப்பட் டுள்ளது. இவர்களில் 15 பேர் புது முகங்கள். "புதுமுகங்களில் பெரும் பாலும் உதயநிதியின் சிபாரிசுக்கு முன் னுரிமை தரப்பட்டுள்ளது' என்கிறார்கள்.

Advertisment

அ.தி.மு.க.விலிருந்து பல்வேறு கால கட்டங்களில் விலகி, தி.மு.க.வில் ஐக்கியமான எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், முத்துச்சாமி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, சேகர்பாபு ஆகிய 8 பேருக்கு தனது அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார் ஸ்டாலின். அவர்களுக்கு வலிமையான துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சரவை குறித்து சில சர்ச்சைகளும் வெடிக்கவே செய்கின்றன.

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க. சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள், "கட்சியில் மிக சீனியரான துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக வேண்டும் என விரும்பினார். ஆனால், கட்சித் தலைமையோ அவரை சபாநாயகராக்க திட்டமிட்டது. இதனை துரைமுருகனிடம் பல்ஸ் பார்த்தபோது, "எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்; எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டுப் போகிறேன்' என சாதாரணமாகத் தெரிவித்திருக்கிறார்

அவர் வருத்தப்படுகிறார் என்பதை புரிந்துகொண்ட கட்சித் தலைமை, பொதுப் பணித் துறையை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க விரும்பாத நிலையில், அந்த துறையை உடைத்து நீர்வளத்துறை என புதிதாக உருவாக்கி அத்துறைக்கு துரைமுருகனை நியமித்திருக்கிறது. தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவு செய்வதற்கும் நீர்நிலைகளைப் பராமரிக்கவுமே இத்துறை பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பொ.ப.து. பிரிக்கப்பட்டதில் துரைமுருகனுக்கு அதிருப்தி என்பதால், கனிமம் மற்றும் சுரங்கத் துறைகளை கூடுதலாக அவருக்கு ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

Advertisment

t

இதேபோல கட்சியின் சீனியர் சிலருக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் மீது அதிருப்திகள் இருக்கிறது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொருமிக் கொண்டும் மன அழுத்தத்திலும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, முக்கிய துறைகள் அனைத்தும் அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டி ருப்பதில் புகைச்சல்கள் வெடிக் கின்றன.

குறிப்பாக, பொதுப்பணித் துறையும், நெடுஞ்சாலைத் துறையும் மிகப்பெரிய துறைகள். தனித்தனி அமைச்சர்கள் நியமிக்க வேண்டிய இலாகாக்கள். ஆனால், இவை இரண்டையும் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதையும், சில வருடங்களுக்கு முன்பு தி.மு.க.வுக்கு வந்த செந்தில்பாலாஜிக்கு பவர்ஃபுல் துறையான மின்சாரம், எரிசக்தி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை ஒதுக்கீடு செய்திருப் பதையும், ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப் பட்டிருப்பதையும் சீனியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

முக்கிய துறைகள் இவர்களுக்கு ஒதுக்கப் பட்டதில் உள்ள பின்னணிகளைச் சொல்லி சீனியர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்திகளை வெளிப்படுத்திக்கொண்டிருக் கிறார்கள். "இதுபோன்று பல விசயங்கள் இருக்கின்றன'‘என அமைச்சரவை குறித்த புகைச்சல்களைத் தெரிவிக்கிறார்கள்.

அமைச்சரவை பட்டியலை மேலும் நாம் ஆராய்ந்தபோது 10 மாவட்டங்களுக்கு தலா 2 அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி, செஞ்சி மஸ்தான், திருச்சி மாவட்டத்தில் கே.என்.நேரு, மகேஷ் அன்பில் பொய்யாமொழி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ப.மூர்த்தி, விருதுநகரில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ஆர்., தூத்துக்குடிக்கு அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், புதுக்கோட்டையில் ரகுபதி, மெய்யநாதன், திருப்பூர் மாவட்டத்துக்கு சாமிநாதன், கயல்விழி, கடலூர் மாவட்டத்தில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் என 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

கோவை மாவட்டத்துக்கு தி.மு.க.வில் எம்.எல்.ஏக்கள் இல்லாததால், கொங்கு வேளாளர் சமுகத்தைச் சேர்ந்த உணவு அமைச்சர் சக்கரபாணியிடம், "கோவையை சேர்த்து கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்படலாம்' என்றும் சொல்லப்படுகிறது. புதிய முகங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறையை (சுகாதாரத்துறை) மா.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். கொரோனாவின் முதல் அலையின்போது சிறப்பாக பணிபுரிந்ததற்காக இந்த துறை அவருக்கு ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதேபோல, பா.ஜ.க. தலைவர் முருகனை தோற்கடித்ததற்காக தாராபுரம் கயல்விழிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. உதயநிதியின் மனைவி வழி சொந்தத்துக்கு நெருக்கமானவர் கயல்விழி. சமூகரீதியாக அனைத்து தரப்புக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் அமைச்சர்களை உருவாக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

tn

அதேசமயம், நெல்லை மாவட்டத்துக்கும் சேலம் மாவட்டத்துக்கும் அமைச்சரவையில் இடமில்லை. நெல்லையில் அப்துல் வகாப், அப்பாவு ஆகிய இருவரில் ஒருவருக்கும், சேலம் மாவட்டத்தில் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் அமைச்ச ரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதனால் அப்பாவுவை சபாநாயகராகவும், ராஜேந்திரனை கொறடாவாகவும் நியமிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறது அறிவாலயத் தரப்பு.

இந்த நிலையில், ஸ்டாலினின் முதல் கேபி னட்டில் உதயநிதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட் டுள்ளது. தி.மு.க. இளைஞரணியினரால் இதனை ஏற்க முடியாவிட்டாலும், முதல் ரவுண்டில் உதயநிதிக்கு வாய்ப்பு தரப்படாதது பொதுவெளி யில் ஆரோக்கியமாகவே பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இளைஞரணி நிர்வாகிகள், "கலைஞர் ஆட்சிபோல அமைச்சரவை மாறாமல் இருக்கப்போவதில்லை. ஆட்சிக்கும் கட்சிக்கும் நிர்வாகத்துக்கும் கெட்ட பெயர் வருகிற மாதிரியான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக வரும் பட்சத்தில் அமைச்சரவையிலிருந்து சம்பந் தப்பட்டவர்களுக்கு உடனடியாக கல்தா கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூனியர் அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பை உதயநிதி ரகசியமாக ஏற்றுக்கொண்டி ருப்பதால்தான் அவருக்கு வாய்ப்பு தரப்பட வில்லை. அடுத்த ரவுண்டில் உதயநிதி அமைச்ச ராவார்'' என்கிறார்கள் உறுதியாக.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் படாமல் இருக்கிறது. கொரோனா பரவல் முற்றிலு மாக முறியடிக்கப்பட்ட பிறகு அந்த தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது சென்னையின் மேயராக உதயநிதியை கொண்டுவரும் அஜெண்டா ஸ்டாலினுக்கு இருப்பதாக இரண்டாம் நிலை தலை வர்களிடம் எதிரொலிக் கிறது. "1996-ல் தமிழக முதல்வ ராக கலைஞ ரும், சென்னை மேயராக ஸ்டாலினும் இருந்தது போல, தற்போது உதயநிதியை கொண்டு வரவும் சித்தரஞ்சன் சாலை ஆலோசித்துள்ளதாம்' என்கிறார்கள்.

கோட்டையில் முதல்வர் பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்ட ஸ்டாலின் தனது செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரி களை நியமித்திருக்கிறார். இவர்கள் கவனிக்கும் இலாகாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக, டம்மி போஸ்டிங்கிற்கு மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டிருக் கிறார். இதன்மூலம், அரசு நிர்வாகத்தில் கட்சிக் காரர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற் காகவே நேர்மையான அதிகாரிகளால் தன்னைச் சுற்றி ஒரு வளையத்தை ஸ்டாலின் உருவாக்கி யிருக்கிறார் என்று கோட்டையில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டிற்கான முழு பட்ஜெட் கூட்டம் குறித்தும், அரசின் நிதி நிலைமை குறித்தும் உயரதிகாரிகளுடன் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். அந்த வகையில் விரைவில் பட்ஜெட் கூட்டம் நடக்கவிருக்கிறது. அனைத்து துறைகளுக்கும் புதிய அமைச்சர்கள் வந்திருப்பதால் துறைரீதியான விவரங்களை அறிந்துகொள்ளவும், ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் குறைந்தபட்சம் 1 மாத கால அவகாச மாவது தேவை என்பதால் அடுத்த மாதத்தில் பட்ஜெட் கூட்டம் இருக்கும் என்கிறது நிதித்துறை வட்டாரம். இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கவிருக்கிறார் ஸ்டாலின்.

இதற்கிடையே, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் கோடிக்கணக்கில் சம்பாதித்த செய்தித்துறை அதிகாரிகள் பலர், நல்ல பதவியை வாங்குவதற்கு முயற்சித்துவருகிறார்கள். இந்த நிலையில், முந்தைய காலங்களில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை ஆட்சி அதிகார எல்லைக்குள் கொண்டுவரலாம் என்கிற யோசனை ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டிருக் கிறது. கலைவாணர் அரங்கத்தில் 11-ந் தேதி நடக் கும் சட்டமன்றக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவும், 12-ஆம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

-இரா.இளையசெல்வன்