தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார். ஆகஸ்ட் 27-ந்தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர், 17 நாட்கள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தங்கியிருந்து 18 தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டுவந்திருக்கிறார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தியாவின் சான்பிரான்சிஸ்கோ துணை தூதர் ஸ்ரீகர்ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமெரிக்கவாழ் தமிழர்கள் என பலரும் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
செம்மொழியாம் தமிழ் மொழியாம், ஸ்டா லின் தான் வர்றாரு ஆகிய பாடல்களை இசைத்தும் நடனமாடியும் தமிழர்கள் வரவேற்றது உணர்வுபூர்வமாக இருந்தது. சிகாகோ தமிழ் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த அமெரிக்கவாழ் தமிழர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு அவர்களுடன் தமிழகத்தின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார் ஸ்டாலின்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர். இன -மொழி உணர்வுடன் அவர்களிடம் அளவளாவிய ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் நோக்கங்களையும், சாதனைகளையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
அதேபோல, தி.மு.க. ஆட்சியின் திட்டங் களைப் பாராட்டி ஸ்டாலினை மகிழ்ச்சிப் படுத்தினர் தமிழர்கள்.
பயணம் குறித்துப் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல் முழுமையான செயல்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களின் ஒத்துழைப்பை வழங்கு வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
உலகின் முன்னணி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறை யினருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட வழிவகுக்கின்றன''’என்கிறார்.
அமெரிக்க பயணத்தில், பிரபல தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை செயல் அலுவலர்கள் உள்ளிட்டவர்களோடு தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை விளக்கும் வகையில் விவாதித்த ஸ்டா லின், நிலையான வளர்ச்சி, சீரான வளர்ச்சி, பரவலான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக வைத்து தி.மு.க. அரசு செயலாற்றிவரும் தொழில் கொள்கைகளை விவரித்தார்.
முதல்வரின் இந்த பயணத்தினால் நோக்கியா, பேபால், மைக்ரோசிப் டெக்னாலஜி, ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம், இன்பிங்ஸ் ஹெல்த்ஹேர், அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஓமியம் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டி ருக்கின்றன. இதன்மூலம் 7,616 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைத் திருக்கிறது.
ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங் களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை தமிழகத்தில் உருவாக்கும் ஒப்பந்தமும் கையெழுத் தாகியிருக்கிறது.
ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியலில் முக்கிய இடம்பிடித்திருந்த கார் நிறுவனமான ஃபோர்ட் கம்பெனி தமிழகத்திற்கு வருகிறது.
சென்னை மறைமலை நகரில் இருக்கும் ஃபோர்ட் நிறுவன வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியை, முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் கடந்த ஓராண்டு காலமாக எடுத்துவந்தார் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
இதற்காக 2023, ஜூலையில் அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் ராஜா, ஃபோர்டு யு.எஸ்.ஏ. நிறுவன உயரதிகாரிகளை சந்தித்து விவாதித்தார். இதன் பலனாக, மீண்டும் தொழில் தொடங்க ஃபோர்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு அமைச்சர் ராஜாவை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். அமைச்சர் ராஜா, நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த சந்திப்பில், தமிழகத்தில் அதிவேகமாக அதிகரித்துவரும் மின்வாகனங்கள் தேவைகளையும், 2021-க்கு பிறகு ஆட்டோமொபைல்ஸ் இண்டஸ்ட்ரியில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியையும், சூழல்களையும் விவரித்தார் ராஜா.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் மீண்டும் தொழில் தொடங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம்.
7,616 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ள முதல்வரின் 17 நாள் அமெரிக்க பயணத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், குறிப்பிடத்தக்க தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு கிடைக்க வழிவகை செய்திருக்கிறது என்கின்றனர் தமிழகத் தொழில்துறையினர்.
சென்னை திரும்பியதும் பயணம் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "முதலீடுகளை ஈர்க்க எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றபோது 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானம்'' என்றார்.