தன் பக்கம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எனத் தெரிந்திருந்தும், அடுத்தடுத்த அதிர்வலைகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார் மு.க.அழகிரி. இதை உற்றுக் கவனித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் உளவுத்துறையும், மாநில அ.தி.மு.க. அரசின் உளவுத்துறையும் தி.மு.க.வில் எப்படியாவது உடைப்பை ஏற்படுத்தி விடவேண்டும் என்பதில் படுதீவிரமாக செயல்படுகின்றன.
எடப்பாடியின் ஆர்வம்!
"அழகிரியின் திறமை பற்றி எங்களுக்குத் தெரியும்' என திருவாய் மலர்ந்தார் மதுரையைச் சேர்ந்த அமைச்சரான செல்லூர் ராஜூ. செல்லூராரின் இந்த சொல்லுக்குப் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் தடாலடி-அதிரடியாகப் பேசினாலும் தி.மு.க.வை உடைப்பதில் எந்த அம்சம் அழகிரிக்கு பலவீனமாக இருக்கிறதோ, அதை பலப்படுத்தும் வேலையை இரு உளவுத்துறைகளும் அசுர வேகத்தில் செய்து வருகின்றன.
அந்த வேகத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் ஸ்டாலினின் பலத்தைக் குறைக்கும் விதமாகவும் ஸ்டாலினைச் சுற்றி இருப்பவர்களுக்கு குறி வைத்திருப்பதாக உளவுத்துறையினரே அழகிரிக்கு தகவலை பாஸ் பண்ணி வருகின்றார்களாம்.
இதைக் கேள்விப்பட்ட சந்தோஷத்தில்தான், ""கட்சி நிதியை வெளியில் வட்டிக்கு விடுகிறார்கள். அந்த வட்டியும் முறையாக வந்து சேருவதில்லை. எங்கே போகிறது எனத் தெரியும்'' என ஆங்கில தினசரி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்
ஸ்டாலினுக்கு நெருக்கடி!
தி.மு.க. பொருளாளர் என்ற முறையில் கட்சி நிதியை நிர்வாகம் செய்யும் ஸ்டாலினைக் குறி வைத்து தாக்கினால்தான் அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என்பது அழகிரி பேட்டியின் சூட்சுமம். அழகிரி குறி வைத்துள்ள ஸ்டாலின் டீமில் உதயநிதியும் அடக்கம். இவரின் சினிமா தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு, தி.மு.க. அறக்கட்டளை நிதியிலிருந்தும், அவர் நிர்வாக இயக்குநராக இருக்கும் முரசொலி நாளேட்டின் அறக்கட்டளையின் நிதியும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பிரச்சினை கிளப்ப அழகிரி தரப்பு தயாராகி வருகிறது.
ஸ்டாலினின் மருமகனான சபரீசன் வழிநடத்தும் ஓ.எம்.ஜி. டீம்தான், சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது. அதன் செல்வாக்கு மீது கட்சி மட்டத்திலேயே விமர்சனங்கள் உள்ள நிலையில், அழகிரியும் சபரீசனை குறிவைக்கிறார். கட்சி நிதி வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த முதலீடுகளுக்கு முறையான கணக்கு இல்லை என்றும் சபரீசனுக்கு துணையாக ஸ்டாலினை சுற்றியிருக்கும் சீனியர்கள் இருப்பதாகவும் அழகிரி தரப்பு அஸ்திரத்தை குறி வைத்துள்ளது.
சபரீசனைத் தொடர்ந்து கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை அழகிரி தரப்பு கார்னர் செய்கிறது. இதில் எ.வ.வேலு மூலமாக உள்நாடு-வெளிநாடுகளில் முதலீடு நடந்திருப்பதாக பெயர் குறிப்பிடாமல் அழகிரி தரப்பு குறி வைக்கிறது.
தி.மு.க. அறக்கட்டளை நிதியான 3,000 கோடியும் முரசொலி அறக்கட்டளை நிதியான 250 கோடியும் பலவகை முதலீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக அழகிரி பகீர் கிளப்ப இருக்கிறார் என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள். மாஜி மந்திரி நத்தம் விஸ்வநாதன், இப்போதைய துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோருக்கு நெருக்கமான "கண்டெய்னர் புகழ்' கரூர் அன்புநாதனுடனும் தொடர்பு என பரபரப்பு கிளம்புகிறது.
எடப்பாடி அரசின் புரமோஷன்!
அழகிரியின் இந்த ஆவேச தாக்குதலுக்கு காரணம், "குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியல் ரீதியாக உயர் பதவிகளுக்கு வரவேண்டாம் என்பதில் உறுதியாக அவரு (ஸ்டாலின்) இருக்காரு. ஆனா அவரோட மகன் உதயநிதி முரசொலியின் நிர்வாக இயக்குநரா இருக்காரு. என்னோட மகன் துரை மட்டும் முரசொலி அறக்கட்டளைக்கோ, தி.மு.க. அறக்கட்டளைக்கோ வருவது மட்டும் அவருக்குப் பிடிக்கல' என்னும் அழகிரியின் மனநிலைதான். குடும்பத்தினர் சார்பாக இது குறித்து மேற்கொண்ட சமாதானம் எடுபடவில்லை.
இதனைப் புரிந்து கொண்ட உளவுத்துறை ஆட்கள், ஸ்டாலினுக்கு எதிரான அதிருப்தி மனநிலையில் இருக்கும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அழகிரி ஒருங்கிணைத்து வருகிறார் என்ற செய்தியை கட்சியினரிடையே பக்காவாக பரப்பி வருகிறார்கள். கட்சியின் செயற்குழுவுக்காக அறிவாலயத்திற்கு ஸ்டாலின் வந்தபோது அவரது காரில் எ.வ.வேலுவும் சேகர்பாபுவும் இல்லை. இருவரையும் ஸ்டாலின் ஓரங்கட்டிவிட்டார் என்ற தகவல் பரவிய நிலையில், அவர்கள் ஸ்டாலின் உத்தரவுப்படி, கலைஞர் நினைவிட பராமரிப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நினைவிடத்திற்கு வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்யும் வேலைகளை மா.செ. ஜெ.அன்பழகன் தரப்பு கச்சிதமாக மேற்கொண்டிருக்கிறது. எனினும், தி.மு.க.வில் அதிருப்திகளைத் தேடி அதனை பூதாகரமாக்கும் புரமோஷன் வேலைகளை எடப்பாடி அரசும் உளவுத்துறையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
கட்சி நிதியின் பின்னணி!
தலைமைச் செயலகத்தில் உயர் பதவியில் இருந்து ரிடையர்டான ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவரை நாம் சந்தித்த போது, “""சென்னை மேயராக இருந்த போதும் சரி, உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வராக இருந்த போதும் சரி, ஸ்டாலின் மீது எந்த ஒரு ஊழல் புகாரோ வழக்கோ கிடையாது. 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மீது போடப்பட்ட மேம்பால ஊழல் வழக்கில்கூட சரியான ஆதாரமில்லாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தடு மாறினார்'' என்றார். இந்நிலையில், தி.மு.க.அறக்கட்டளை-முரசொலி அறக்கட்டளை விவகாரத் தில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் நோக்கி வீசப்படும் அம்புகள் தனது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நெருக்கடியை உருவாக்கும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். அதனால், கலைஞரின் மரணத்திற்குப் பிறகு அவர் பொறுமையாகவே எல்லாவற்றையும் அணுகுகிறார்.
தி.மு.க.வின் சீனியர் உடன்பிறப்புகளோ, “""தலைவர் காலத்திலேயே கட்சி நிதியை பலப்படுத்த பல வழிகளிலும் பாடுபடும் அப்போதைய பொருளாளர் ஆற்காடு வீராசாமி கலைஞரின் மனதறிந்து செயல்படுவார். ஸ்டாலின் பொருளாளரானதும், தொழிலதிபரும் கட்சிப் பிரமுகருமான கரூர் கே.சி.பழனிச்சாமி, மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் மூலம் கட்சி நிதி பலப்படுத்தப்பட்டது. இதில் எ.வ.வேலு திறமைசாலி. ஸ்டாலினிடமும் நெருக்கமானார். அதன் மூலமாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை உட்பட சில வட மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களை கவனிக்க வைத்து, அதன் மூலம் அவர்களை ஜெயிக்க வைக்கவும் வேலுவால் முடிந்தது. கட்சி நிதி விஷயத்தில் தலைமை எப்போதும் கவனமாக இருக்கும். ஒருமுறை திருவண்ணாமலைக்கே சபரீசன் டீம் சென்றபோது வேலு எல்லாவற்றையும் க்ளியராக முன்வைத்திருக்கிறார்'' என்கிற நிலவரத்தையும் சொன்னார்கள்.
கட்சி நிதி பற்றிய அழகிரியின் பகிரங்க குற்றச்சாட்டு குறித்து அறிவாலய நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது, “""தேர்தல் நிதி என்றாலும் கட்சி நிதி என்றாலும் 100 ரூபாய் வாங்கினால் கூட முறையான ரசீது கொடுப்பதோடு, கொடுத்தவர்களின் பட்டியலும் முரசொலியில் வெளியிடப்படும். நிர்வாகச் செலவினங்களுக்கும் எடுக்கப்படும் தொகைக்கு கணக்கு காட்டப்பட்டு, மீதமுள்ள பெரும்பாலான தொகை பேங்கில் ஃபிக்செட் டெபாசிட்டாக்கப்பட்டு, பக்காவாக கையாளப்பட்டு வருகிறது. எனவே அழகிரி கூறுவது போல் கட்சி நிதி மோசடிக்கு வாய்ப்பே இல்லை'' என்கிறார்கள் திட்டவட்டமாக.
சவாலை சமாளிக்கும் ஸ்டாலின்!
இந்த சிக்கலுக்கெல்லாம் விடை காணும் விதமாகவும் நிதியைக் கையாள்வதில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை என்பதை ஆதாரத்தோடு தெரிவிக்கும் பொருட்டு ஆக.18, 19 ஆகிய இருநாட்களில் கட்சியின் நிதியை தணிக்கை செய்வதற்காக, அறிவாலயத்தில் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பொருளாளர் பதவியையும் வகிக்கின்ற செயல்தலைவர் ஸ்டாலின். கட்சி நிதி, அதிருப்தி நிர்வாகிகள், கலைஞருக்கான சிகிச்சை என அழகிரி தரப்பு எவற்றையெல்லாம் கையில் எடுக்கும் என்பதை உணர்ந்துள்ள ஸ்டாலின், எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை தேவை என்பதை பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அழகிரி சீண்டிய மறுநாள், ஆக.14-ஆம் தேதி நடந்த கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டத்திற்கு வரும்போது, காரில் உடனிருந்தவர்களிடம் ஸ்டாலின் எதுவும் பேசவில்லை. அவருடைய கனத்த மவுனம் உடன்வந்தோரின் மனதில் கேள்விகளை எழுப்ப, செயற்குழுவில் அழகிரியின் சீண்டலுக்கு பதில் எதுவும் கூறாமல், கலைஞருக்கு மெரினாவில் இட ஒதுக்கீடு சம்பந்தமாக நடந்த சட்டப் போராட்டத்தை உருக்கமாக நினைவுகூர்ந்தார் ஸ்டாலின். கூட்டத்தில் பேசிய சீனியர்கள் அனைவருமே ஸ்டாலின் கைகாட்டும் திசையில் பயணிக்கத் தயார் என உத்தரவாதத்தைத் தந்தனர். வெளியில் வந்த ஸ்டாலினை மைக்குடன் மீடியாக்கள் சூழ்ந்த போதும், அமைதியாகச் சென்றுவிட்டார். 16-ஆம் தேதி கட்சியினருக்கு எழுதிய கடிதத்திலும் ""கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்று காட்டுவேன்'' என சூளுரைத்திருக்கிறார் ஸ்டாலின். விமர்சனங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், அவற்றுக்கான பதில்களை செயல்கள் மூலம் வழங்குவது என்பதுதான் ஸ்டாலினின் இப்போதைய அணுகுமுறையாக உள்ளது.
""அழகிரியைத் தவிர மற்றவர்களை ஒருங்கிணைத்துச் செல்லும் அவர், கலைஞரின் புகழுக்கு வணக்கம் தெரிவிக்கும் நினைவேந்தல் கூட்டங்களில், திருச்சியில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை கே.என்.நேருவிடமும், கோவையில் திரைப்படத்துறையினர் கலந்து கொள்ளும் கூட்டத்தை எ.வ.வேலுவிடமும், மதுரையில் இலக்கியவாதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை கனிமொழி எம்.பி.யிடமும் நெல்லையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை ஐ.பெரியசாமியிடமும் வழங்கியிருக்கிறார்’’ என்கிறார் கொங்கு மண்டல மா.செ. ஒருவர்.
வைகோ வருகிறாரா?
தி.மு.க.வுக்குள் கலகம் உருவாக்க முயற்சிப்பதைப் பார்த்து கவலையடைந்துள்ளார் தாய்க்கழகமான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. கலைஞர் நினைவிடத்திற்கு தி.க.தோழர்களுடன் ஊர்வலமாக போய் மலர் தூவி மரியாதை செய்த பின், மீடியாக்களிடம் கருத்து தெரிவித்தார்.. தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து மட்டமாக விமர்சித்திருந்தார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. அழகிரியோ, கடந்த 16-ஆம் தேதி, கலைஞர் நற்பணி இயக்கம் என்ற பெயரில் புது இயக்கத்தை ஆரம்பிப்பது குறித்தும் அதற்கான அபிடவிட்டை தயார் செய்வது குறித்தும் தனது ஆதரவாளர்களான மன்னன், கவுஸ்பாட்சா, கோபிநாதன் ஆகியோருடன் போனில் தீவிர ஆலோசனை நடத்தி, செப்டம்பர் 5-ந் தேதி கலைஞர் நற்பணி இயக்கத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையிலிருந்து கலைஞர் நினைவிடத்துக்கு பேரணி நடத்துவது பற்றியும் பேசியுள்ளார்.
அழகிரி பேசிய அதே நாளில், தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்குச் சென்று தற்போதைய நிகழ்வுகள் குறித்து ஆலோசனை பெற்றுத் திரும்பியுள்ளார் ஸ்டாலின். இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகனுக்கு வயது முதிர்வு ஏற்பட்டுவிட்டதால், ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியைத் தரலாமா, அது இரு கட்சிகள் தரப்பிலும் ஏற்கப்படுமா என ஒரு ஆலோசனையும் நடந்துள்ளது.
தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்தபோது, தென்மண்டலத்தில் தி.மு.க.வுக்கு அரணாக இருந்தார் அழகிரி. இப்போது அழகிரி சிக்கல் ஏற்படுத்தும் நிலையில், தி.மு.க.வுக்கு அரணாக வைகோ உள்ளே வந்தாலும் வெளியில் இருந்து ஆதரவளித்தாலும் சரியாகத்தான் இருக்கும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. சோதனைகள் தி.மு.க.வுக்குப் புதிதல்ல. கலைஞர் இல்லாத நிலை யில், ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதில்தான் எல்லோரது கவனமும் குவிந்துள்ளது.
-கீரன், தாமோதரன் பிரகாஷ், ஈ.பா.பரமேஷ்வரன், து.ராஜா, அண்ணல்