2022-ல், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்துக்கு, தி.மு.க. கவுன் சிலர்களும், கட்சியினரும் கடும் எதிர்ப்பை தெரி வித்து, மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சூழலில், அமைச்சர் நேரு தலை யிட்டு பஞ்சாயத்து செய்தது குறித்து நம் நக்கீரனில் எழுதியிருக்கிறோம். தொடர்ந்து, கட்டடங்களுக்கு பிளான் அப்ரூவல் கொடுப்பதிலும், கான்ட்ராக்டர் களிடமும் கட்டாய வசூல் செய்கிறாரென்ற குற்றச்சாட்டும் பொன்வசந்த் மீது எழுந்தது. மேலும், அமைச்சர் மூர்த்தியை ஒருமையில் பேசிய ஆடியோ விவகாரமும் எழுந்த சூழலில், அவரை கட்சியிலிருந்தே தூக்கியது மதுரை தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் வீடுகள், கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயம் செய்து, 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில், மதுரை மாநகராட்சியின் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், 3வது மண்டலத்தின் தலைவரான பாண்டிசெல்வியின் பி.ஏ. தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் குமரன், கணினி ஆபரேட்டர் சதீஷ், உதவி ஆணையரின் உதவியாளர் கார்த்திகேயன், புரோக்கர்கள் உசேன், ராஜேஷ் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள் அனைவரும் உடனே ராஜி னாமா செய்ய வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு போட, தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த 200 கோடி ஊழலின் பின்னணி என்னவென்று விசாரணையில் இறங்கினோம்.
தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் நம்மிடம், "யார் செய்தாலும் தவறு, தவறுதான். அது நம் கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் என்று, தனது கட்சியினரை தமிழக முதல்வரே எச்சரித்தது இதுவரை நடக்காத ஒன்று. முதல்வர் சாட்டையை கையில் எடுத்திருக்கிறார். சரியான முடிவுதான்.
2023-ல் அப்போதைய மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், அனைத்து வரிவசூல் பில் கலெக்டர்களையும் வரவழைத்து ரிவியூ மீட்டிங் நடத்தினார். அப்போது ஒவ்வொரு மண்டலமாக பிரித்து ஆய்வு செய்யும்போது 3வது மண்டலத்தில் வரி வசூல் மிகக்குறைவாக வருவதைக் குறிப்பிட்டு, அம்மண்டல பில் கலெக்டரிடம் கேட்க, அவர் எல்லாவற்றையும் போட்டுடைத்தார்.
அதில் முக்கிய மாக, "அ.தி.மு.க.வின் முன்னாள் மேயர் இராஜன் செல்லப்பாவின் திருமண மண்டபத்திற்கு வருட வரி வசூல் ரூபாய் 6 லட்சம் என்பதை மாற்றி, 1 லட்சமாகக் குறைத்து வசூலித்திருக்கிறார்கள். இதேபோல பெரும்பாலான வணிகக் கட்டடங் களுக்கும் நடந்துள்ளது' என்று பகிரங்கமாக சொல்ல, இந்த பிரச்சனையின் பிள்ளையார் சுழி அங்குதான் ஆரம்பித்தது. அதன்பின் கமிஷனர், 5 வரி வசூல் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு அந்த பில் கலெக்டரை தனியாக அழைத்து, "என் அனுமதியில்லாமல் எப்படி வரி வசூலின் தொகையை கூட்டிக் குறைக்க முடியும்?' என்று கேட்க, "கமிஷனரின் லாகின் பாஸ்வேர்டை எப்படியோ தலைமைச் செயலகத்திலிருந்து தெரிந்துகொண்டு, அதன்படி வரிவசூல் கணக்கில் கைவைத்திருக்கிறார்கள்' என்றதும், அதிர்ச்சியான கமிஷனர், உடனே சைபர் க்ரைமுக்கு புகார் கொடுக்க... சில மாதங்களில் கமிஷனர் மாற்றப் படுகிறார்.
இதே பிரச்சனை தற்போதைய கமிஷனர் சித்ராவுக்கு வர, பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இறங்க, பிரச்சனை பூதாகரமான தால், முதல்வரே தலையிட்டு அமைச்சர் நேருவை விசாரணை செய்ய உத்தரவிட்டார். கடந்த 7ஆம் தேதி நேரு விசாரணை நடத்தவுள்ள தகவல் மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர் களுக்கு வாட்சப் மூலமாக மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டது. விதிமீறி வரியை குறைத்தது தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஏழு ஃபைல்கள் விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டன. அதன் நகல்களை வைத்து ஒவ்வொரு மண்டலத் தலைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மண்டலம் 3 தலைவர் பாண்டிச்செல்வி, மண்டலம் 4 முகேஷ் சர்மா ஆகியோரின் மண்டலங்களுக்கு உட்பட்ட 76 அரிசி மில் முதலாளிகளிடம், ஒரு மில்லுக்கு 1 கோடி வசூலித்ததாகவும், கொடுக்காத மில்களுக்கு சீல் வைக்கப்படுமென்று மிரட்டுவதாகவும் மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் வணிகர் சங்க தலைவர் ஜெகதீசனிடம் புகாரளித்த விவரத்தை, அவர் அதை நேருவிடம் காட்டியிருக்கிறார். அதோடு, ஒவ்வொரு மண்டலமும் வரி வசூலில் செய்துள்ள ஊழல், மருத்துவமனைகள், வணிகக் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு வரிக்குறைப்பு செய்துள்ளது குறித்த விவரங்களை கமிஷனர் சித்ரா எடுத்துரைத்துள் ளார். இதையடுத்தே மண்டலக்குழு தலைவர் களான சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் வாசுகி ஆகியோர் ராஜினாமா கடிதங்களை அமைச்சர்கள் குழுவிடம் கொடுத்தனர். அப்போது மண்டலம் 1 வாசுகி சசிகுமாரிடம், "உங்களை விசாரணைக்கே வரச் சொல்லலையே? உங்க மண்டலம் மட்டும் சரியாக இருக்கு' என நேரு சொன்னதும், வாடிய முகத் தோடுவந்த வாசுகி, மகிழ்ச்சியோடு கிளம்பினார். இந்நிலையில், அடுத்த மேயர் வாசுகி என்ற முணுமுணுப்பும் எழுந்தது. இதேபோல நிலைக் குழுவின் உறுப்பினர்களான கண்ணன், மூவேந்திரன் ஆகியோரும் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர். இறுதியாக, மதுரை மேயர் இந்திராணி தனது இராஜினாமாவை கொடுக்க, அதையும் வாங்கிக்கொண்டு கிளம்பிய நேரு, மேயரிடம் எதுவுமே பேசவில்லை. நேருவோடு, அனைத்து கவுன்சிலர்களும் திருச்சி சென்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பத்திரிகை யாளர்களிடம், "அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தால் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி மன்றங்களில் முறைகேடு செய்ய விடமாட்டோம். வீட்டு வரி, பாதாளச் சாக்கடை என மாநகராட்சியில் பல முறைகேடுகள் நடக்கின்றன. 100 ரூபாய் கட்டணத்திற்கு 15 ஆயிரம் லஞ்சம் பெறுகின்றனர். இந்த விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. வெறும் ராஜினாமாவோடு நிறுத்திக்கொண்டனர். 4 மண்டலத் தலைவர்களையும் கைது பண்ண வேண்டும்'' என்றார்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, "தற்போது ராஜினாமா செய்துள்ள மண்டலத் தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.. மதுரை மாநகராட்சி யிலுள்ள நான்கு மண்டலங்களில் முறைகேடு நடப்பதாக புகாரளித்தோம். தற்போது 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். தமிழக அரசு சாட்டையை சுழற்றியிருக்கிறது. இதோடு நிற்கக்கூடாது. குற்றம் செய்தவர்களை சிறையில் அடைக்கவேண்டும்'' என்று முதல்வருக்கு ஐஸ் வைத்துப் பேசியவர், "மதுரை கண்ணகி மண்ணில் நீதி கிடைத்துவிட்டது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும்'' என்றார்
மதுரை மாநகராட்சி தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கிறதென்று தி.மு.க. கவுன்சிலர்களிடம் விசாரிக்கையில் "ராஜினாமா செய்த 4 மண்டலத் தலைவர்களும் திருச்சியில் முகாமிட்டு அமைச்சர் நேருவிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும். அப்போதே மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள் சரியில்லை. அவர்கள் மீது தி.மு.க. கவுன்சிலர்களான நாங்களே புகார் மேல் புகாராக வைத்தோம். 2023-ல் நடந்த குற்றச்சாட்டு இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது. அப்போதே மாநகராட்சி மேயரை இராஜினாமா செய்யவைத்து புதிய மேயரை தேர்ந்தெடுத்திருக்கலாம், அது நடக்கவில்லை. காலம் கனிந்து வந்திருக்கிறது, இப்போதாவது புதிய மேயரை தேர்ந்தெடுக்கவேண்டும். தி.மு.க. தலைவர் நல்ல முடிவு எடுப்பாரென்று அனைத்து தி.மு.க. கவுன்சிலர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் காத்துக்கொண்டிருக்கிறோம். புதிய மேயராக வாசுகி சசிகுமார் வருவாரென்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல் ஐந்து மண்டலங்களுக்கும் புதிய தலைவர்களாக, மண்டலம் 1க்கு ராமமூர்த்தி அல்லது கௌரி சங்கர், மண்டலம் 2க்கு பொன்முத்துராமலிங்கத்தின் குடும்பத்திலிருந்து விஜய பௌஸ்மி, மண்டலம் 3க்கு மா.ஜெயராமன், மண்டலம் 4க்கு விஜயலெட்சுமி பெயர் அடிபடுகிறது'' என்கின்றனர். இவர்களுக்குப் பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவும் தலைமையின் ஆசியும் இருப்பதாகத் தெரிகிறது.
"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அது தன் கட்சிக்காரனே என்றாலும் விடமாட்டேன்' என்று சாட்டையை சுழற்றி யிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்னும் நிறைய தரமான சம்பவங்களை இந்த தமிழகம் பார்க்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்!