"ஹலோ தலைவரே.. முதல்வர் ஸ்டாலின், சீமான் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகிறதே...''”
"ஆமாம்பா... இந்த சந்திப்பு விவகாரத்தில் தி.மு.க.வினர் கடுப்பா இருக்காங்களாமே... விவரமா சொல்லுப்பா...''
"உண்மைதாங்க தலைவரே.. எந்த வரம்பும் இல்லாமல் தி.மு.க.வையும் ஸ்டாலின் குடும்பத்தையும் தொடர்ந்து மோசமாக விமர்சித்துவரும் சீமான், தந்தை பெரியாரையும் தொடர்ந்து தாக்கிவருவது தி.மு.கவினரைக் கொதிநிலையிலேயே வைத்திருக்கிறது. இந்த நிலையில் மு.க.முத்து மரணத்திற்கு துக்கம் விசா ரிக்க, முதல்வர் தரப்பை அணுகியிருக்கிறார் சீமான். திரைப்படத் தயாரிப்பாளர் முத்துக்காமாட்சி மூலம் உதயநிதியைப் பிடித்து, முதல்வரை சந்திக்க அனுமதியும் பெற்றுவிட்டார். இப்படித்தான் முதல்வருடனான சீமானின் சந்திப்பு நிகழ்ந்திருக் கிறது. முதல்வர் தனது குடும்ப உறுப்பினர்கள் எவரிடமாவது, சீமானைத் துக்கம் விசாரிக்கும்படி செய்திருக்கவேண்டும் என்பது பெரும்பாலான தி.மு.க.வினரின் ஆதங்கமாக இருக்கிறது. முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சீமான், தனது அரசியல் நாகரிகம் குறித்து பத்திரிகையாளர்களி டம் வகுப்பெடுத்திருக்கிறார். அப்போது காமராஜர் மறைந்தபோது அதிகமாக அழுதது அண்ணா என்று, வழக்கம்போல் ’அடித்துவிட்டுச் சென்றார் சீமான். அண்ணா மறைந்தது 69-ல். காமராஜர் மறைந்தது 75-ல். அப்படியிருக்க காமராஜர் மறைவுக்கு அண்ணா எப்படி கதறி அழுதார்? என்று தலையிலடித்துக்கொண்டார்கள் பத்திரிகை யாளர்கள்.''”
’"நடிகர் விஜய், 20ஆம் தேதி நடக்க இருந்த த.வெ.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தைத் திடீரென்று ரத்து செய்திருக்கிறாரே?''’
" "சாதித்தாரா விஜய்?' எனும் தலைப்பில் இரு இதழ்களுக்கு முன்பு அட்டைப் படச் செய்தியாக, த.வெ.க.வின் ஆர்ப்பாட்டம் பற்றிய ஸ்டோரி நம் நக்கீரன் இதழில் வெளியானது. அந்த செய்தியில், தி.மு.க பாணியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க, புதிதாக ஒரு செயலியை விஜய் உருவாக்கி யிருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோலவே, இந்த செயலியை 20ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்காக, மா.செ. க்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் விஜய். ஆனால் அது திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, மா.செ.க்கள் கூட்டத்தில் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அதனை சோதித்துப் பார்க்க விரும்பினாராம் விஜய். ஆனால் அந்த செயலி ஆன் ஆனதே தவிர, தொழில்நுட்பக் கோளாறால் அது செயல்பட வில்லை. அதை சரிசெய்ய டெக்னிஷியன்கள் முயற்சிகள் பல எடுத்தும் கோளாறுகள் சரியாக வில்லையாம். இதனால், அப்செட்டான விஜய், மா.செ.க்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார் என்கிறார்கள். இந்த சூழலில், தவெகவின் 5 மண்டலங்கள் மற்றும் 120 மாவட்ட அமைப்புகளில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டங்களை நடத்த உத்தரவிட்டிருக்கிறார் விஜய். அதன் அடிப்படையில் முதல் கூட்டம் சேலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடக்கிறது.''”
"எடப்பாடி பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களில் எல்லாம் அவர் மகன் மிதுன் டீம் சர்வே எடுத்து வருகிறதே?''”
"எடப்பாடி, தனது ‘"மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்'’ என்கிற எழுச்சிப் பயணத்தை கடந்த 7ஆம் தேதி கோவையில் தொடங்கி, ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றி வருகிறார். போகிற இடங்களில் எல்லாம் தி.மு.க அரசைக் கடுமையாக அட்டாக் செய்துவருகிறார். இந்த நிலையில், ஒவ்வொரு நாள் பயணத்தின் முடிவிலும், அன்றைய தினம் கூடிய கூட்டத்தில் மக்களின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? என்பதைக் கேட்டறிகிறாராம் எடப்பாடி. மக்கள் எதை ரசிக்கிறார்களோ அதையே அடுத்தநாள் பயணத்தின்போது மக்களிடம் அவர் எடுத்துச்சொல்கிறார். அவருக்கான பேச்சை, அ.தி.மு.க.விற்காக நியமிக்கப்பட்டிருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளர் டீம், எழுதிக்கொடுத்து வருகிறது. இதற்கிடையே, எடப்பாடி பயணம் செய்துவிட்டுப் போனதும், அந்தத் தொகுதியில், மறுநாள் எடப்பாடியின் மகன் மிதுனின் சர்வே டீம் களமிறங்கி, அங்குள்ள மக்களின் மனநிலையை அறியும் முயற்சியில் இறங்குகிறதாம். காரணம், பா.ஜ.க. கூட்டணியால், எடப்பாடித் தரப்புக்கு இன்னும் வெற்றி பற்றிய நம்பிக்கை வரவில்லையாம். அதனால், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை மக்கள் வரவேற்கிறார்களா?, விஜய்யின் பலம் என்ன?, தி.மு.கவின் அதிருப்தி வாக்குகள் யாருக்குக் கிடைக்கும்?, சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் வாக்குகள் யார் பக்கம் திரும்பும்? என்பது போன்ற கேள்விகளுக்கு, இந்த சர்வே டீம் விடை தேட முயல்கிறதாம்.''’
"அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ராமதாஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்திருக்கிறாரே?''”
"பா.ம.க.வில் ராமதாசும், அன்புமணியும் சமாதானமாவது போல காட்சிகள் அரங்கேறுகின்றன. ஆனால், அடுத்த சிலமணி நேரங்களில் எல்லாம் அப்படியே மாறி விடுகின்றன. தைலாபுரத்தில் தன்னைக் கண்காணிப்பதற்காக அங்கே ஒட்டுக்கேட்புக் கருவி வைக்கப்பட்டதாக ராமதாஸ் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அவர் அன்புமணியைக் குறிவைத்துப் புகார் கொடுத்த நிலையில், இது தொடர்பான காவல்துறை விசாரணையின்போது, அவர் மழுப்பலாகவே பதில் கொடுத்தார். காரணம் அன்புமணி சமாதானத்திற்கு வருவதாக அவருக்கு தரப்பட்ட தகவலை அவர் நம்பினார். ஆனால், அன்புமணியோ, சமாதானத்திற்கு வருவதுபோல் போக்குக் காட்டிவிட்டு, பழையபடி முருங்கை மரம் ஏறிவிட்டார். இதில் ஏகத்துக்கும் டென்ஷனான ராமதாஸ், பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களான தர்மபுரி வெங்கடேஸ்வரன், மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகிய மூவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்து, மகன் தரப்பிற்கு ஹெவி ஷாக் கொடுத்திருக்கிறார். மேலும், இவர்களை பா.ம.க. எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கக்கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கவும் ராமதாஸ் தயாராகியிருக்கிறார். அதேபோல், அன்புமணி பக்கம் இருக்கும், பா.ம.க.வின் சமூக நீதிப்பேரவைத் தலைவர் கே.பாலுவையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார் ராமதாஸ்.''”
"அஜித்குமார் விவகாரத்தில், அவரை கொண்டு சென்ற வாகனத்திற்கு, தனிப்படை போலீஸே போலியான நம்பர் பிளேட்டு களைப் பயன்படுத்தியிருக்கிறதே?''”
"மாநிலமெங்கும் அதிர்வலைகளை உருவாக்கிய அஜித்குமாரின் லாக்கப் மரண விவகாரத்தை தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறது சி.பி.ஐ. பல்வேறு விசாரணைகளை முடுக்கியிருக்கும் சி.பி.ஐ. டீம், இதன் தொடர்ச்சியாக திருப்புவனம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வைத்து அஜித்குமார் தாக்கப்பட்ட இடங்களில் எல்லாம் ஆய்வுகளை நடத்தினர். இந்த நிலையில் கோவில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு அஜித்குமாரைக் கொண்டு செல்ல, போலீசார் பயன்படுத்திய டெம்போ வேனை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்ததோடு, அதன் ஓட்டுநர் ராமச் சந்திரனிடமும் விசாரணை செய்தனர். அப்போது அந்த போலீஸ் வாகனத்தில் பச 01ஏ 0491, பச 63ஏ 0491 என சென்னை மற்றும் சிவகங்கை மாவட்ட பதிவெண் களைப் போலீஸார் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸே போலி நம்பர் பிளேட்டுகளைப் பயன்படுத்தியதை அறிந்து சி.பி.ஐ. டீம் ஷாக்கானது. அதேபோல் அவர்கள் அந்த டெம்போ வுக்குள் சோதனை நடத்தியபோது, உள்ளே மதுபானம், சீட்டுக் கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தனிப்படை போலீஸார் பயன்படுத்தியற் கான தடயங்களையும் சேகரித்திருக்கிறார் கள்.''’
"வ.உ.சி. இழுத்த செக்கினை விடுதலை செய்யவேண்டும் என்கிற குரல் கோவை பகுதியிலிருந்து கேட்கிறதே?''”
"கோவை மாநகரின் பிரதான பகுதியான காந்திபுரம் பேருந்து நிலையத்தை யொட்டி, மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலைக் கட்டடத்தின் முகப்பில் வ.உ.சி.யால் இழுக்கப்பட்ட செக்கு வைக்கப்பட்டி ருக்கிறது. சிறைக்குள் அது இருப்பதால், வரலாற்றுச் சின்னமான அந்த செக்கை பொதுமக்கள் யாரும் பார்க்கமுடியாத நிலை உள்ளது. வ.உ.சி.யின் நினைவுநாள் அன்று மட்டும், சில அமைப்பின் பிரதிநிதிகள் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வ.உ.சி. இழுத்த செக்கின் அருகே சென்று, மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவார்கள். மற்ற நாட்களில் யாருக்கும் அனுமதியில்லை. இந்த செக்கினை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் காரமடை கிளைச்செயலாளர் வெள்ளியங்கிரி, "கோவை சிறைச் சாலையே ஒன்னியூர் பகுதிக்கு இடம்மாறப் போகிறது. இந்த நேரத்திலாவது வ.உ.சி. இழுத்த செக்கினை, கோவை வ.உ.சி. பூங்காவில் வைக்கவேண்டும் என்று 4 வருடங்களாகப் போராடிவருகிறோம். சிறையில் அடைபட்டிருக்கும் அந்த செக்கினை, முதல்வர் தலையிட்டு விடுதலை செய்யவேண்டும். அதை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்'’ என்கிறார்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழகத்தின் மணல், கிராவல், மண் குவாரிகளின் உரிமத்தை மயிலாடுதுறை ராஜப்பாவுக்கு, கடந்த ஜூன் மாதமே தமிழக அரசு கொடுத்துவிட்டது. எனவே மாநிலம் முழுவதும் கிராவல் மற்றும் மண் குவாரி வேலைகளை ஆர்வமாகத் தொடங்கினார் ராஜப்பா. ஆனால் மணல் குவாரிகளைத் தொடக்கூடாது என்று பழைய எஸ்.ஆர், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோர் தரப்பு முட்டுக்கட்டை போடுகிறதாம். இவர்களின் பின்னணியில் இப்போதும் அமைச்சர் துரைமுருகன் இருப்பதால், ராஜப்பா தரப்பு மணல் குவாரிகளை நெருங்க முடியாமல் திணறிவருகிறதாம். முதல்வரே முடிவெடுத்து, ராஜப்பாவுக்கு மணல் குவாரி உரிமத்தைக் கொடுக்கச் செய்தும், அவரால் எதுவும் செய்யமுடியவில்லையாம். இதனால் ரொம்பவே பரிதவிக்கிறது ராஜப்பா தரப்பு என்கிறார்கள்.''