"தமிழகத்தை கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீட்கவும், மூன்றாவது அலையிலிருந்து காக்கவும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் தொடர்ச்சியாக மக்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். தேசிய அளவிலும், தடுப்பூசி கொள்கையை அமல்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது மத்திய சுகாதாரத்துறை. எனினும், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடுகளில் அலட்சியமாக இருந்தது மத்திய அரசு.
இதனால் தடுப்பூசி பற்றாக்குறையும் தட்டுப்பாடும் அதிகரித்தது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வேக்சின்களும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள முடியாமல் பலரும் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு தாமதிக்கிறது. இதனால், தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. அவை 2 நாட்களுக்கு மட்டும்தான் போதுமானது. மேலும், தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தேவையான பணத்தை தமிழக அரசு செலுத்திய பிறகும் தடுப்பூசி கிடைப்பதில் தாமதமாகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசி ஜூன் 2-வது வாரத்தில் தான் கிடைக்கும். மத்திய அரசிடமிருந்து மே மாதத்திற்கான 1.74 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், ஜூன் 3-ந் தேதி முதல் 6-ந் தேதிவரை தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படவுள்ளன''‘என்று தெரிவித்தார்.
தடுப்பூசி விவாகாரத்தில் தமிழகத்தை திட்டமிட்டே மத்திய மோடி அரசு புறக்கணிப்ப தாக தமிழக அரசு நினைப்பதால்தான் உண்மை நிலையை போட்டுடைத்தார் அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன் என்பதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் எதிரொலித்தது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், தாமதமில்லாமல் அனுப்பிவைப்பதில் மத்திய சுகாதாரத்துறை அலட்சியமாக இருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டுசென்றனர். "மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடக்கும் வீடியோ கான்ஃபரன்சில் தமிழகத்துக்கான தேவைகளை அழுத்தமாகச் சொல்லுங்கள்' என அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.
அதன்படி, 31-ந் தேதி நடந்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான வீடியோ கான்ஃபரன்சில், "தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடுகளை உடனடி அனுப்பவேண்டும்' என சொல்லி, நிலுவையில் இருக்கும் தடுப்பூசிகளின் புள்ளிவிபரங்களை எடுத்துச் சொன்னார் ராதாகிருஷ்ணன். ஆனால், மத்திய அரசு அதிகாரிகளோ, "ஜூன் இரண்டாவது வாரத்தில் தான் கிடைக்கும்' என கறாராக தெரிவித்தனர். இதைத்தான் முதல்வரின் ஒப்புதலுடன் அம்பலப் படுத்தினார் ராதாகிருஷ்ணன்''‘என்கின்றனர் அதிகாரிகள்.
இதனை டெல்லிக்கு உடனடியாக பாஸ் செய்தது மத்திய உளவுத்துறை. உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தடுப்பூசி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டால் மத்திய அரசின் மீது இன்னும் காட்டமாகவும் வெளிப் படையாகவும் குற்றம்சாட்ட தி.மு.க. அரசு திட்டமிடுகிறது' என டெல்லிக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, சுதாரித் துக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை, தமிழகத்துக்கு உடனடியாக 4.95 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை 31-ந் தேதி மாலையே சென்னைக்கு அனுப்பி வைத்தது. இதனால், "தடுப்பூசி போடுவது தொடர்கிறது. காலையில் நடந்த மீட்டிங்கில், அனுப்புவது சாத்தியமல்ல என்று சொன்ன மத்தியஅரசு, மாலையில் அனுப்ப முடிந்ததற்குக் காரணம், முதல்வர் ஸ்டாலின் அணுகுமுறைதான்'‘ என்கிறார்கள்.
இந்தச் சூழலில் நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், "தமிழகத்தில் எம்.ஜி.ஆர். இரண்டாவது முறை முதல்வரானபோது, சத்துணவுத் திட்டம், ரேஷன் கடையில் தட்டுப்பாடின்றி அரிசி விநி யோகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கான அரிசியை வழங்க வலியுறுத்தி டெல்லி சென்று பிரதமர் இந்திராவிடம் எம்.ஜி.ஆர். நேரடியாக வலியுறுத்தினார். தமிழக மக்கள் பட்டினியால் சாக நேரிடும் என்பதையும் சொன்னார். ஆனாலும், மத்திய அரசு இணங்கவில்லை. "பட்டினியால் மக்கள் சாகும்போது அதே பட்டினியால் நானும் சாகிறேன்' என சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். டெல்லி இதை எதிர்பார்க்கவில்லை. ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இதன் தீவிரத்தை இந்திராகாந்தியிடம் தெரிவித்தனர். உடனடியாக குண்டுராவை சென்னைக்கு அனுப்பி எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தியதுடன் தமிழகத்துக்கான அரிசி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கினார்.
எம்.ஜி.ஆர். பாணியில் டெல்லியைத் திகைக்க வைக்கும் வகையில் தடுப்பூசி ஒதுக்கீட்டில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட அணுகுமுறை, மோடி அரசை மிரள வைத்துள்ளது. மேற்கு வங்கம், கேரளாவுக்கு மட்டும் மத்திய அரசு பயப்பட்டுவந்தது
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்துவதை உணர்ந்து, தடுப்பூசி விவகாரத்தில் நாசூக்காக செயல்பட்டு அனுப்பி வைத்துள்ளது மோடி அரசின் சுகாதாரத்துறை. இதன்மூலம் தடுப்பூசி வழங்குவது தடையில்லாமல் தொடர் கிறது‘’ என்று சுட்டிக் காட்டுகிறார்'' அவர்.