இருநூறு தொகுதிகளை வெற்றிகொள்ள இலக்கு நிர்ணயித்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வரும் தி.மு.க., தனது தோழமைக் கட்சிகளின் மறைமுக நெருக்கடி களையும் கவனத்தில் கொண்டிருக் கிறது. இந்த பின்னணியில்தான், தேர்தல் களத்தில் தி.மு.க. எம்.பி.க் களையும் களமிறக்கும் திட்டத்தில் அவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி, பல உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த உத்தரவுகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
தேர்தலை மையப்படுத்தி சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் கூட்டம் கடந்த 23-ந் தேதி நடந்தது. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க.வின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தேர்தலை எதிர்கொள்வது குறித்து நடந்த ஆலோசனையில், தேர்தல் ஆணையத்தின் துணை யுடன் மத்திய பா.ஜ.க. அரசு நடத்திவரும் வாக் குத் திருட்டு விவகாரத் தில் நாம் மிகவும் விழிப் புடன் இருக்கவேண்டும்; பீஹாரைத் தொடர்ந்து பா.ஜ.க.வின் அடுத்த குறி தமிழ்நாடும் மேற்கு வங்க மும்தான். வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பேரில் நடத்தப்படும் வாக்கு மோசடி, திருட்டு விவகாரத்தில் தி.மு.க.வின் வாக்குகளை கபளீகரம் செய்யும் அஜெண்டாவில் பா.ஜ.க. குதித்திருக்கிறது. இதனை முறியடித்தாக வேண்டும் என்கிற ரீதியில் எம்.பி.க்களின் கருத்துக்கள் கூட்டத்தில் எதிரொலித்திருக்கின்றன.
இதனையடுத்து, தேர்தல் தொடர்பான களப்பணிகள், தேர்தல் பணிகளில் உள்ள நிர்வாகிகளின் செயல்பாடுகள், அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள், "ஓரணியில் தமிழ்நாடு', "உங்களுடன் ஸ்டாலின்', "நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களின் செயல்பாடுகள், மத்திய அரசின் நிதி பங்கீடு, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய விவகாரங்கள், தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தெல்லாம் ஆலோசித்துவிட்டுப் பேசிய கட்சித் தலைவர் ஸ்டாலின், "தேர்தல் வெற்றியில் எம்.பி.க்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்; அவர்களையும் பொறுப்புடைமையாக்க வேண்டும்' என்கிற நோக்கத்தில் எம்.பி.க்களுக்குப் பல உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
குறிப்பாக, "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, வாரத்தில் குறைந்தது 4 நாட்கள், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்குத் தேவையான பணிகளை எம்.பி.க்கள் செய்யவேண்டும். தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதனை நிறைவேற் றும் வகையில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதுகுறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை கட்சித் தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
தங்களது தொகுதியில் நடக்கும் "உங்களுடன் ஸ்டாலின்', "நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் எம்.பி.க்கள் கலந்துகொண்டு, அரசின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்று வது அவசியம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு 1,000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதில் எம்.பி.க்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றெடுத்தது. இதற்காக நம் (தி.மு.க.) எம்.எல்.ஏ.க்கள் அயராது உழைத்தனர். உங்களின் (எம்.பி.க்கள்) வெற்றிக்காக அவர்கள் உழைத்ததுபோல, சட்டமன்றத் தேர்த லில் அவர்களின் (எம்.எல்.ஏ.க்கள்) வெற்றிக்காக நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும்.
இதற்காக அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பொறுப்பாளர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளைச் செய்யவேண்டும். மத்திய அரசின் மக்கள்விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுசென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்'' என்று பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார் ஸ்டாலின்.
இந்த உத்தரவுகள் எம்.பி.க்களிடம் சட்டென்று ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
பொதுவாக, எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் எனில், "தேர்தல் பணிகள் எப்படி இருக்கிறது? என்ன செய்யலாம்? என்கிற ரீதியில் ஆலோசனையை, எம்.பி.க்களிடம் நடத்திவிட்டு, அதற்கேற்ப முடிவுகளை எடுத்து... கட்சி நிர்வாகி களுக்கு, தலைவர் ஸ்டாலின் உத்தரவிடுவார். அதேபோலத்தான் இந்த ஆலோசனைக் கூட் டத்திலும் நடக்கும் என எம்.பி.க்கள் எதிர்பார்த்த னர். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அவர்களுக்கு பல உத்தரவுகளை ஸ்டாலின் பிறப்பித்ததால் எழுந்த அதிர்ச்சிதான் அது' என்கிறார்கள் அறிவாலயத் தரப்பினர்.
அதேசமயம், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் இட்ட கட்டளைகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடமும் மா.செ.க்களிடமும் ஏக உற்சாகத்தை ஏற்படுத்தியிருக் கிறது. இது குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேசியபோது,‘’"தேர்தல் களத்தில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு எப்போதும் ரெஸ்பான்ஸிபிலிட்டி (பொறுப்புடைமை) இருந்ததில்லை. எம்.பி.க்களாக இருப்பவர்கள் மேல்தட்டு வர்க்கம் என்பது போலவே அவர்களின் ஆக்ஷன்கள் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக வலம்வந்து வெற்றி பெற்றதும் தொகுதியையும், கட்சி நிர்வாகிகளையும் மறந்துபோவார்கள். அவர்களுக்குள்ள இடைவெளியும் அதிகரித்து விடும்.
ஆனால், தொகுதியில் கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்களும்தான் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் கவுன்சிலர்களும் எம்.எல்.ஏ.க்களும்தான் பதில் சொல்லவேண்டிய நெருக்கடிகளுக்கு ஆளாவார்கள். இது ஒருபுறம் என்றால், தேர்தல் நேரத்தில் கிளைக்கழகச் செயலாளர்கள் தொடங்கி மா.செ.க்கள் வரை அனைவருக்கும் தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுத்து செமையாக கட்சித் தலைமை வேலை வாங்கும். ஆனால், தேர்தல் களத்தில் எந்த வேலையும், பொறுப்பும் எம்.பி.க்களுக்கு இருக்காது.
தேர்தல் பணிகளில் நேரடியாகவும் எம்.பி.க்களை ஈடுபடுத்தமாட்டார்கள். அவர்களும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. பணிமனைகளுக்கு சும்மா விசிட் அடிச்சிட்டு, கதை பேசிட்டு போய் விடுவார்கள், எதிலும் ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். அதனால் சட்டமன்றத் தேர்தல் குறித்து எம்.பி.க்கள் அலட்டிக்கொண்டதே இல்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், கட்சியின் அனைத்து நிலைகளிலுமுள்ள நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகளிலும் அதன் வெற்றி தோல்விகளி லும் பொறுப்பு இருக்கும் போது எம்.பி.க்களுக்கு மட்டும் எந்த ரெஸ்பான்சிபிலிட்டியும் இல்லாமல் இருப்பது பற்றி தலைவருக்கு (ஸ்டாலின்) தெரி யப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்துத்தான், சட்டமன்றத் தேர்தலில் எம்.பி.க்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்த அவர்களை அழைத்து பொறுப்புடைமையாக்கும் விதத்தில் உத்தரவிட்டிருக்கிறார். அந்த வகையில் எம்.பி.க் களுக்கு செக் வைத்துள்ளார் தலைவர் (ஸ்டாலின்).
எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், வெற்றி தோல்வி எது நடந்தாலும் அவர்களும் இனி பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்காக, எம்.பி.க்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற தலைவரின் உத்தரவு, எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது''’என்கின்றனர்.
ஸ்டாலினின் இந்த உத்தரவு, எம்.எல்.ஏ.க்க ளுக்கும் மா.செ.க்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ள அதேசமயம், எம்.பி.க்களிடம் சில ஆதங்கங்கள் வெடிக்கின்றன. இது குறித்து எம்.பி.க்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, "தேர்தல் நேரத்திலும் சரி, தேர்தல் முடிந்த பிறகும் சரி, அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் இருக்கும் மரியாதை, அதிகாரம், சம்பாதித்தல் உள்ளிட்ட விசயங்களில் எம்.பி.க்களுக்கு கிடைப்பது குறைவுதான். எம்.பி.க்களின் தொகுதி நிதியை ஒதுக்குவதில் கூட அமைச்சர்கள், மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதிக்கம் உண்டு. அதனால்தான் சட்டமன்றத் தேர்தல் களத்தில் எம்.பி.க்களின் ரோல் பெரிதாக இருக்காது.
அப்படிப்பட்ட பின்னணியில், முதன்முதலாக, இந்த தேர்தலில் எம்.பி.க்களையும் தலைவர் ஸ்டாலின் பொறுப்புடைமையாக்கியதில் ஒருவித நெருடல் எம்.பி.க்களுக்கு ஏற்பட்டிருந்தாலும் பொறுப்பை தட்டிக் கழிக்கவில்லை. கட்சியில் கிளைக்கழக செயலாளர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு தங்களுக்கும் இருக் கிறது என்பதை எம்.பி.க்கள் நினைக்கின்றனர்'' என்று விவரிக்கின்றனர்.
இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங் கர் உள்ளிட்டவர்கள் அதிக இடங்கள், அதிகாரத் தில் பங்கு என்பதை வெளிப்படையாகவே உரிமைக் குரல் தூக்குகின்றனர். காங்கிரசின் ஆலோசனைக் கூட்டத்திலும் இத்தகைய உரிமைக்குரல் மேலோங்கி வருகிறது. தங்களின் கட்சி மேலிடத் திலும் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இந்த ஆசையிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,”"அதிகாரத்தில் பங்கு என சொல் வது அவர்களின் தனிப்பட்ட கருத்து. இந்த விச யத்தில் மேலிடம்தான் முடிவு செய்யும்''’என்கிறார்.
காங்கிரசின் இத்தகைய போக்குகளை தி.மு.க. பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் தி.மு.க.வுக்கு கோபம் இருக்கிறது. அதனால், இந்த வாரம் நடக்கும் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் விளையாட்டில் தோழமைக் கட்சிகளின் நெருக்கடிகள் அதிகரித் தால், கூட்டணிக் கட்சிகளை உதறிவிட்டு, தி.மு.க. தனித்துப் போட்டியிட்டாலும் 200 இடங்களை வெல்லவேண்டும் என்கிற சிந்தனையில்தான், கட்சியில் பொறுப்புகளிலுள்ள அனைவரையும் தேர்தல் களத்தில் பயன்படுத்தவேண்டும்; அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும் என்கிற பொதுத் திட்டத்தில் எம்.பி.க்களையும் களமிறக்குகிறார் ஸ்டாலின்.
"தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க.வின் வியூகங்கள் இன்னும் வேகமெடுக்கும்'’ என்கிறார்கள் உளவுத்துறையினர்.