துணை ஜனாதிபதிக்கான வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்திருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தெலுங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள்.
இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமான தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் வாக்குகளை சேகரிப்பதற்காக சென்னை வந்த சுதர்சன ரெட்டிக்கு, தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து முறைப்படி ஆதரவு கோரினார் சுதர்சன ரெட்டி. அப்போது அவரிடம், எங்களின் ஒட்டுமொத்த ஆதரவும் உங்களுக்குத்தான் என்று உறுதியளித்தார் ஸ்டாலின்.
இதனையடுத்து சென்னை தி.நகரிலுள்ள தி.மு.க. எம்.பி. ஜெகத் ரட்சகனின் அக்கார்ட் ஹோட்டலில் வாக்கு சேகரிப்பதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டையில் காட்சி தந்தார் சுதர்சனரெட்டி. இந்த நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், செல்வப் பெருந்தகை, சி.பி.எம். சண்முகம், சி.பி.ஐ. முத்தரசன் உள்ளிட்ட தலைவர் களும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தலைவர்கள் ஒவ்வொருவரிட மும் உரிமையாகக் கைக்குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சுதர்சன ரெட்டி. அவருக்கு பொன்னாடை போர்த்தி, திருவள்ளுவர் சிலையை பரிசளித்து வாழ்த்துகளை தெரிவித்தார் ஸ்டாலின். நிகழ்ச்சியில் சுதர்சன ரெட்டியை ஆதரித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’"அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நீங்கள், இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமானவர்; தகுதியானவர். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சித் தத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அத்தனைபேரும் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் அடிப்படைக்கொள்கைகளான மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவைகளில் நம்பிக்கை கொண்ட வேட்பாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார். அவரை ஆதரிப்பது நமது கடமை! இந்திய ஜனநாயகம், நாடாளுமன்ற மரபுகள், மக்களாட்சி மாண்புகள், அரசியலமைப்பு ஆகியவைகளைக் காக்க, சுதர்சன ரெட்டி வெற்றிபெற வேண்டும்''’என்றார்.
எம்.பி.க்களிடம் தம்மை ஆதரிக்குமாறு வாக்கு சேகரித்துப்பேசிய சுதர்சனரெட்டி, ’"மனித வள மேம்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறை களில் இந்தியாவையே வழிநடத்துகிறது தமிழ் நாடு. சமூக,பொருளாதார கொள்கைகளை உருவாக்கியதிலும் தமிழகம்தான் முதன்மையாக இருக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நான் இருந்தபோது வழங்கிய தீர்ப்புகள் பற்றி நான் பேசப்போவதில்லை. நீங்களும் இந்த சமூகமும் அதனை தீர்மானிக்கட் டும். அரசியல் சாசனத் தை உண்மையாகவும் விசுவாசமாகவும் நேர் மையாகவும் உயர்த்திப் பிடித்தவன் நான். இந்த தேர்தலில் எனக்கொரு வாய்ப்பினை நீங்கள் தந்தால், அரசியலமைப் பை பாதுகாப்பதில் முழுமூச்சாக இயங்கு வேன். அரசியலமைப்புச் சட்டத்தையும் கூட்டாட் சித் தத்துவத்தையும் எப்போதும் நான் கைவிட மாட்டேன். கூட்டாட்சித் தத்துவத்தின் தலைவ னாக, வீரனாக முதலமைச்சர் ஸ்டாலின் வீற்றி ருக்கிறார். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவ னில்லை, சேரப்போவதுமில்லை. அரசியல் சாசனம் இன்றைக்கு மிக ஆபத்தில் இருக்கிறது. மாநிலங்களின் கூட்டமைப்பான இந்தியாவை ஒரே நாடு என முழங்குகிறார்கள். அதனை எதிர்த்து, ஒரே நாடு என முழங்குபவர்களிடமிருந்து, கூட் டாட்சியின் தத்துவத்தை நிலைநிறுத்த நிறைய சவால்களை எதிர்கொண்டு போராடி வருகிறார் ஸ்டாலின். அவரது நம்பிக்கையையும், உங்களின் ஆதரவையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது''’என்றார்.
இதனைத் தொடர்ந்து சுதர்சனரெட்டியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், "இந்த தேசத்தின் 60 சதவீத வாக்காளர்களின் பிரதிநிதியாக இந்த தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறேன். என்னை தேர்வு செய்த இந்தியா கூட்டணிக்கு நன்றி. எந்த கட்சியையும் நான் சேர்ந்தவன் இல்லை என்பதால்தான் எதிர்க்கட்சிகள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், திறமையான, பொதுநலத் தலைவர். அவரால்தான் நான் தேர்வு செய்யப்பட்டது சாத்தியமானது. அவரது வழிகாட்டலில் இந்தியா கூட்டணி, மேலும் வலிமை அடையும்.
கவர்னர் பதவி தேவையற்றது என தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளது. அந்த நிலைப் பாட்டை நான் மதிக்கிறேன். ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசும், அதன் தலைவர்களுமே மக்களின் எண்ணங்களை யும் விருப்பத்தையும் பிரதிபலிப்பவர்கள். சில அதிகார மையங்கள், தேசத்தின் அரசியலமைப்பை சவாலுக்கு அழைக்கும் தொனியில் நடந்துகொள் வது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இந்திய அரசியலமைப்பை பலகீனப்படுத்த குறிப்பிட்ட சில சக்திகள் முயற்சிக்கின்றன. அவர்களிடமிருந்து ஜனநாயக மரபுகளை பாதுகாக்க இந்தியா கூட்டணி போராடிவருகிறது. அதில் நானும் பங்களிப்பவனாக இருக்க விரும்புகிறேன்'' என்றார் அழுத்தமாக.
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சனரெட்டியின் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்திலிருந்து தீவிரமாகியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான சி.பி.ஆரின் பிரச்சாரம் திங்கள்கிழமை வரைக்கும் பெரிதாக இன்னும் துவங்கவில்லை.
அதேசமயம், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிடம்தான் 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மொத்தமாக இருப்பதால், சி.பி.ஆர். ஒரு தமிழர்; அதனால் அவரை ஆதரிக்க தி.மு.க. முன்வர வேண்டும் என்று தமிழின உணர்வை மையப்படுத்தி பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தூண்டில் வீசின; பிரித்தாளும் சூழ்ச்சிகளை கையாண்டன. இதற்கெல்லாம் மயங்காமல், அரசியலமைப்பையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சனரெட்டியை உயர்த்திப் பிடிக்கிறார் ஸ்டாலின்.
இதுகுறித்து தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் பழ.செல் வக்குமாரிடம் கேட்டபோது, "சி.பி.ராதாகிருஷ் ணனை தமிழராக கவனிப்பதே பிழை என்கிறோம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக்கொடுப்பதில் ஒன்றிய அரசின் அலட்சியம், அரிட்டாபட்டி மலையை வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமாக்க ஒன்றிய அரசு முனைப்பு, ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்க்கும் நீட் தேர்வு, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு தடுத்து வைத்திருத்தல், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட தொழில்கள் முடக்கம், ஜி.எஸ்.டி. வரி அதிகரிப்பால் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் அழிப்பு என தமிழ்நாடு எதிர்கொள்கிற பல பிரச்சனைகளில் ஒரு பிரச்சனைக்காவது தமிழகத்தின் நலனுக்காக ஒன்றிய மோடி அரசாங்கத்திடம் சி.பி.ஆர். வாதாடியிருப்பாரா? குறைந்தபட்சம் குரலாவது கொடுத்திருக்கிறாரா? இல்லையே!
அப்படியிருக்க அவரை தமிழர் என வகைப்படுத்தி, அவரை தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி ஆதரிக்க முடியும்? தமிழர் விரோதிகளை ஆதரிக்க வேண்டிய அவசியமும் தேவையும் தி.மு.க.வுக்கு கிடையாது. தமிழகத்தின் நலன்களுக்காக ஒரு துரும்பையும் எடுத்துப்போடாத சி.பி.ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க. எதிர்க்க வேண்டும். இதனை எடப்பாடி பழனிச்சாமி செய்வாரா?''’என்கிறார் ஆவேசமாக.
இப்படிப்பட்ட சூழலில், "முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுதர்சனரெட்டி ஆகியோரின் பேச்சும், வலியுறுத்திய விசயங்களும் தேசிய அளவில் கவனம் பெற்றிருப்பதுடன், இந்தியா கூட்டணியின் வலிமையையும் ஒற்றுமையையும் உணர்த்துகின்றன' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
____________
முதல்வரிடம் ‘தாய்ப்பயணம்
நூலை வழங்கிய நக்கீரன் ஆசிரியர்!
தி.மு.க. மாநில இலக்கிய அணி இணைச் செயலாளரும் தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவருமான ஈரோடு இறைவன், தி.மு.க. இளைஞரணியின் வரலாற்றை ஆவணப் படுத்தும் நோக்கோடு எழுதியுள்ள நூல் "தி.மு.க. இளைஞர் அணி -தாய்ப்பயணம்'. இந்நூலில், தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது இளமைக்காலத்தில், கோபாலபுரத்தில் "இளைஞர் தி.மு.க.' அமைப்பை தொடங்கியதிலிருந்து, இன்றைய தி.மு.க. இளைஞரணியின் பணிகள் வரை, ஆண்டுவாரி யாக மிகச்சிறப்பாகத் தொகுத்துள்ளார் ஈரோடு இறைவன். இந்நூல் நக்கீரன் பதிப்பகத்தின் வெளியீடாக, இரண்டு பாகங்களாக வெளி வந்துள்ளது. ஈரோடு இறைவனின் "தாய்ப்பயணம்' நூலை ஆகஸ்ட் 23ஆம் தேதி, சனிக்கிழமையன்று, தமிழக முதல்வரிடம் நக்கீரன் ஆசிரியர் அவர்கள் வழங்கினார். நூலாசிரியர் ஈரோடு இறைவன், நக்கீரன் குடும்பத்தை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.