அரசியல் சாசன பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுக்கு வழிகாட்டுபவராக ஆளுநர் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் எதிரிபோல் செயல்படக்கூடாது என அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. "மாநில சட்டமன்றங்களின் உரிமையை நிலைநாட்டிய உச்சநீதி மன்றத்திற்கு நன்றி' என முதல்வர் ஸ்டாலின் தீர்ப்பு வந்த உடனேயே சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த வழக்குக்காக போராடிய தி.மு.க. எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பாராட்டியிருக்கிறார். இந்த வழக்கில் வென்றது எப்படி என்று நக்கீரனுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார் வில்சன்.
இந்த தீர்ப்பு வந்தவுடன் முதலமைச்சர் என்ன சொன்னார்?
காலையில் 10.30 மணிக்கு தீர்ப்பு வரப்போகிறது என்று 9.30 மணிக்கு தகவல் வருகிறது. உடனே முதலமைச்சருக்கு தெரிவித்த போது, "சட்டமன்றத்தில் இருப் பேன், தீர்ப்பை பார்த்துவிட்டு வாருங்கள்' என்றார். தீர்ப்பு வந்தவுடன் முதலமைச்சருக்கு தெரிவித்தேன். சட்டப் பேரவையிலேயே வரலாற்று சிறப்பான இந்த தீர்ப்பை வழங்கிய உச்சநீதி மன்றத்திற்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர். பின்னர் என்னை சந்தித்த முதல்வர், தலைவர் கலைஞர் உங்களை வின்சன் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று சால்வை அணிவித்து பாராட்டினார். துணை முதல்வர் உதயநிதி, மூத்த அமைச்சர் துரை முருகன் ஆகியோரும் என்னை பாராட்டினார்கள். இது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.
கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் இடம் கிடைத்தபோது, அந்த துக்கத்திலும் தலைவர் ஸ்டாலின் கண்களில் அப்போது ஒரு மகிழ்ச்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியை இந்த தீர்ப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்திருக்கிறது.
எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற் றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. இப்படி ஒரு வழக்கை தொடர எங்கள் தலைவர் ஆலோசனை வழங்கினார். அவர் வழங்கிய ஆலோ சனையின் படி தொடரப் பட்ட இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதன்மூலம், அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதல்வர் நிலைநாட்டி இருக்கிறார்.
10 மசோதாக்களின் முக்கியத்துவம் என்ன?
ஒரு மாநிலம் வளர்வதற்கு கல்விதான் முக்கியம். தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் மாநில அரசு கொண்டுவந்த திட்டங்களும், ஆலோசனைகளும் தான். உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் துறை உள்பட அனைத்து துறை மாணவர்களும் சிறப்பாக பயின்று இன்று உலகம் முழுவதும் இருக்கின்றனர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்பட அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்தது. ஆர்.என்.ரவி வந்ததிலிருந்து துணைவேந்தர் நியமனம் உள்பட எல்லா விவ காரத்திலும் தலையிட்டு பல்கலைக்கழகங்களே செயல்பட முடியாத அளவுக்கு இருந்தது. வேந்தராக இருப்பதால் முக்கியமான பவர்கள் எல்லாம் ஆளுநரிடம் உள்ளது. அந்த சட்டங்களை மாற்றுவதற்காகத்தான் புதிய 10 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு ஒப்புதல் கொடுத் தால் தனக்குள்ள பவர் போய்விடும் என்பதால், அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந் தார். ஒப்புதல் அளிக்க முடியாது என்று சொல்ல முடியாது. ஆளுநர் வேந்தராக இருக்கலாம் என்று சட்டமன்றம்தான் ஒரு சட்டத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார்கள். நீங்க வேந்தராக இருக்க வேண்டாம் என்று நினைத்தால், கொடுத்த பதவி யைப் பறிக்க சட்டமன்றத்திற்கு உரிமை இருக்கிறது.
வேந்தர் பொறுப்பு இனி முதல்வருக்குத்தான் என்று ஜெயலலிதா சொன்னபோது தி.மு.க. எதிர்த்தது என விமர்சிக் கிறார்களே?
ஆளுநர்கள் சரியாக செயல்படு கிறார்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். முன்பு இருந்த ஆளுநர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத் தார்கள், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இப்போது வருபவர்கள் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாக்களை செயல்படுத்த வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறார்கள். ஆர்.என்.ரவி எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்பதால்தான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வேந்தர் பதவியை பறிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது அவர்தான்.
பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்த தோடு உச்சநீதிமன்றம் நிறுத்தியிருக்கலாம். ஆளுநர் பதவியின் மாண்பைக் குலைக்கும் விதத்திலான கண்டனங்களை தவிர்த்திருக்கலாம், வரம்பு மீறலாகத் தெரிகிறது என்று சொல்லப்படுவது பற்றி...?
அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறை மசோதா அனுப்பும்போது அவர் என்ன செய்தார் என்பதை ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சராகக் கூடாது என தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கிறார். முதலமைச்சர் கண்டித்த பின்னர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். பொன்முடி விஷயத்தில் உச்சநீதிமன்றமே ஆளுநரை கண்டித்ததை சுட்டிக்காட்டினோம். அவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என வாதாடினோம். இதனையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. நீதிமன்றம் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை. ஆளுநர்கள், மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கக்கூடாது என்று பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினார்கள். மசோதாக்களை கிடப்பில் வைப்பது அல்லது நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.
மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுப் பதற்கான காலக்கெடுவை நாடாளு மன்றம் நிர்ணயிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டி ருக்கலாம். அதனை நீதிமன்றம் கையில் எடுத்திருக்கத் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள். அதனைப் பற்றி?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் என ஒவ்வொரு மாநிலமும் ஆளுநர் தொடர்பான விவகாரங்களை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறது. ஆளுநர்கள் சொந்த விருப்பு வெறுப்பு களுக்காக மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்கள். காலக்கெடு நிர்ணயிக்காமல் இருப்பது மிகப் பெரிய பிரச்சனை என உச்சநீதிமன்றத்திற்கு தெரிகிறது. அதோடு மட்டுமல்ல, நாங்களும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கேட்டோம். ஒன்றிய அரசு வழக்கறிஞரும் சிறப்பாக வாதாடினார். ஆனால் காலக்கெடு நிர்ணயிக்கும் விசயத்தில் உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது தவறு. காலக்கெடு நிர்ணயிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
இந்த வழக்கு அரசியலமைப்பு தொடர்பாக இருப்பதால் கூடுதல் அமர்வுக்கு கொண்டு செல்லலாம் என்று ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறதே?
எனது கேள்வி என்னவென்றால், சட்டமன்றம் அனுப்பிய மசோதாக்களை காலம்தாழ்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்டதுதான் இந்த மசோதாக்கள். மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது தவறா? உச்சநீதிமன்றம் அவர்களுக்கு உள்ள அதிகாரத்தின்படிதான் சொல்லியிருக்கிறார்கள். மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்திருக் கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அதன்மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் முடிவை ஆளுநர் எடுத்தால் அதனை 3 மாத காலத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் ஆளுநர் மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலம் தாழ்த்த முடியாது. ஒரு ஆளுநர் நண்பராக, வழிகாட்டியாக, ஆலோசகராக இருக்கவேண்டும். தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய தாக உள்ளது. இதன்மூலம், அனைத்து மாநிலங் களின் சுயாட்சியை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டியிருக்கிறார்.
சந்திப்பு: வே.ராஜவேல்