டெல்லித் தலைவர்கள் பலருக்கும் தமிழகத்தின் மீது ஒரு கண் உண்டு. தமிழர்களுக்கோ வி.பி.சிங் மீதும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் எப்போதும் பாசம் உண்டு. அந்தப் பாச மழையில் 3 நாட்கள் நனைந்த ராகுல் காந்தியின் பரப்புரை பயணம், எதிர்பாராத ஈர்ப்பை உருவாக்கியது.
கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களிடம் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது அவர்,
""தமிழகத்தை பற்றி இன்னும் நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன். இதற்காகவே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான திருக்குறளை வாசிக்க தொடங்கியுள்ளேன். தமிழகத்தின் ஆன்மா என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. நம்பிக்கை, சுயமரியாதை தமிழக மக்களுக்கு புதிதல்ல. இது மொழியிலும் கலாச்சாரத்திலும் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதை மதிப்பதே இல்லை.
அன்பை செலுத்தினால் தமிழக மக்கள் இருமடங்காக திருப்பி செலுத்துவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ ஒரு தேசம் ஒரு கலாச்சாரம் ஒரே வரலாறு என சொல்லி மக்களை அவமதிக்கிறார். தமிழ்நாடு இந்தியாவிற் குள்தானே இருக்கிறது. தமிழகத்தை ஆட்சி புரியும் இந்த அரசின் ஊழலை ஏன் இதுவரை சிபிஐ விசா ரிக்கவில்லை? தன்னிடம் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழக அரசை பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் இயக்குகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில், ரிமோட் மோடியாக இருந்தாலும் பேட்டரியாக இருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் வீழ்த்த போகிறார்கள். ஆம் அந்த பேட்டரியை தமிழக மக்கள் கழட்டி எறிய போகிறார்கள். மத்திய அரசை எதிர்த்து தமிழக முதல்வர் எந்த கேள்வியையும் கேட்பது இல்லை. ஏனென்றால் அவரது ஊழலில் இருந்து காத்துக் கொள்ளவே அவர் மவுனம் காக்கிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராவார்'' என்றார்.
கோவையிலும், ஈரோட்டிலும் ஆட்சி மாற்றம் பற்றி மட்டுமே குறிப்பிட்ட ராகுல், கரூரில் தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பெயரை முன்னிறுத்தினார்.
ராகுலின் பரப்புரை எளிமையானதாக இருந்தது. அவரது அணுகுமுறை அதை விட எளிமையாக இருந்தது. எதிர்பாராத அளவில் அமைந்த கூட்டமும், அதனை ஈர்க்கும் வகையிலான ராகுலின் பரப்புரையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, கூட்டணிக்கும் பலம் சேர்த்துள்ளது.
____________
சிறுமியிடம் அன்பு மழை!
மாரி கவுண்டம்பாளையத்தில் இருந்து ராகுல் புறப்பட்டு வரும் வழியில் அப்பகுதியை சேர்ந்த சிறுமி, ""ராகுல் அங்கிள்... நான் உங்களோட ஒரு செல்ஃபி எடுக்கணும்'' என்று வேண்டுகோள் வைக்க, உடனடியாக எழுந்து நின்று அந்த சிறுமிக்கு கை கொடுத்து வாகனத்தின் மீது ஏற்றி அவரோடு சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும் சிறுமியிடம், யு ஆர் டைனமிக் சைல்டு என்று கூறி கன்னத்தில் தட்டி கொடுத்து தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார் ராகுல். ஒவ்வொரு நாள் பயணத்திலும் சிறுமிகளுடன் ராகுல் எடுத்த செல்ஃபிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின.
-மகேஷ்