"திராவிடக் கொள்கைகளுக்கு எதிரான வட இந்திய தலைவர்களை வெச்சு செய்வார் கலைஞர். அவரது மகன் ஸ்டாலினோ வரவழைச்சு செய்திருக்கிறார்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடியின் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பேச்சுகள்தான் தேசிய அளவில் இப்படி எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

stalin

தமிழகத்தில் சுமார் 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 26-ந் தேதி சென்னை வந்திருந்தார் பிரதமர் மோடி. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், முதல்வர் ஸ்டாலின் பெயரைச் சொல்லும்போது அரங்கத்தில் எழுந்த ஆனந்த ஆரவாரம் அடங்க நிமிடக்கணக்கானது. முருகன் தன் பேச்சைத் தொடர்வதற்கு இடைவெளி தேவைப்பட்டது. இதன்பின் பேசிய மு.க.ஸ்டா லின், மோடியை வைத்துக்கெண்டு மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும், ஒன்றிய அரசு செய்யத் தவறியதையும், செய்ய வேண்டி யதையும் அழுத்த மாகப் பதிவு செய்தார்.

மேலும், மக்களுக்குத் தேவையான அரசாங்கம் எது? அரசியல் எது? என்பதையும் விவரித்த மு.க.ஸ்டாலின், சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட தமிழகத்தின் தனித்தன்மையை முன் வைத்தபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. சுருக்கமாகச் சொல்வதாயின் தமிழகத்தின் வலிமையையும், திராவிட மாடல் அரசையும் மோடிக்கு உணர வைத்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

மோடிக்கு நேராக அழுத்தமாக இப்படி ஸ்டாலின் பேசுவார் என்பதை அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அவர்கள்.

இந்த நிலையில், சென்னை (தெற்கு) அடிசனல் போலீஸ் கமிஷனர் கண்ணனை அப்பதவியிலிருந்து விலக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது தி.மு.க. அரசு. அவர் மாற்றப்பட்ட விவகாரம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த, அதற்கான பின்னணி களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ss

Advertisment

இதுகுறித்து தமிழக உள்துறை மற்றும் ஒன்றிய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தன.

"சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்பு, பா.ஜ.க. தலைவர்கள், அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் ஏர்போர்ட்டில் வரவேற்றனர். மோடியை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் ஏர்போர்ட்டிற்குச் செல்லவில்லை. ஏன், செல்லவில்லை?' என அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் எதிரொலித்தபடி இருந்தது. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

அதாவது, சென்னை ஏர்போர்ட்டிலிருந்து அடையாறு ஐ.என்.எஸ். ராணுவத்தளத்திற்கு பிரதமர் மோடியும் அதி காரிகளும் வருவ தற்கு 3 ஹெலி காப்டர்கள் ஏற் பாடு செய்யப் பட்டிருந்தன. முதல் ஹெலிகாப் டரில் ஒன்றிய அரசின் அதிகாரி கள் மற்றும் பத்திரி கையாளர்களும், இரண்டாவது ஹெலி காப்டரில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகளும், மூன்றாவது ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என். ரவி, ஒன்றிய அமைச்சர் முருகனும் பயணிப்பது என ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை ஏர்போர்ட்டில் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தால் பிரதமருடன்தான் அவர் பயணிக்க வேண்டும். அதுதான் முதலமைச்சருக்கான முக்கியத்துவம். அதற்கான அழைப்பை முறைப்படி தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் தெரிவிக்க வில்லை. மேலும், மோடியுடன் ஹெலிகாப்டரில் பயணிப்பவர்களின் லிஸ்ட்டில் முதல்வரின் பெயரை பிரதமர் அலுவலகம் சேர்க்கவில்லை. அதனாலேயே ஏர்போர்ட்டிற்கு செல்வதைத் தவிர்த்தார் ஸ்டாலின். மாறாக, ஐ.என்.எஸ். ராணுவத்தளத்திற்கு சென்று மோடியை வரவேற்றார்.

ஐ.என்.எஸ். தளத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பா.ஜ.க. தரப்பில் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவால் என பலரும் இருந்தனர். ராணுவத் தளத்தினுள் ஸ்டாலினின் காரை மட்டுமே அனுமதித்தனர் பிரதமரின் பாதுகாப்புப் படை அதிகாரிகள்.

ss

தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர்களின் அடையாள அட்டைகளைக்கூட வாங்கிப் பார்த்த பிறகே அனுமதித்தனர். ராணுவத்தளத்தில் 2 பெரிய அறைகள் (லான்ச்சுகள்) உண்டு. ஒரு லான்ஞ் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு கிரீன் ரூம் என்று பெயர். தன்னை வரவேற்கும் தலைவர்கள், அதிகாரிகளிடம் ஏதேனும் விவாதிக்க வேண்டுமென்றால் இந்த க்ரீன் ரூமில்தான் பிரதமர் ஆலோசிப்பார்.

மற்றொரு பெரிய அறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கும், மற்றொரு பகுதி பா.ஜ.க.விற்கும் என ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதமர் வருவதற்கு முன்பு, அண்ணாமலையை சந்தித்துப் பேசினார் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால். ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி வந்த மோடிக்கு முதல்வர் பொன்னாடை அணிவித்தும் சிலப்பதிகாரம் புத்தகத்தை வழங்கியும் வரவேற்றார். டி.ஆர்.பாலு அதிக மரியாதையுடன் பிரதமருக்கு வணக்கம் சொன்னார். இதனை பா.ஜ.க. தலைவர்களும் ஓ.பி.எஸ்.ஸும் கிசுகிசுத்துக் கொண்டனர்.

ஸ்டாலினின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்பு நடந்த மோடி, தன்னை வரவேற்க காத்திருந்த அண்ணாமலை, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களிடம் "எப்படி இருக்கிறீர்கள்' என நலம் விசாரித்தார். அதன்பிறகு அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு புறப்பட்டார். அவருக்கு முன்பாக ஸ்டாலினின் கார் பறந்தது. நேப்பியர் பாலம் முதல் அரங்கம் வரை மோடியை வரவேற்று பா.ஜ.க.வினர் ஏக அலப்பறை செய்திருந்தனர். இது, ஸ்டாலினை அப்-செட்டாக்கியது.

அதேபோல, நிகழ்ச்சிகள் முடிந்து ஏர்போர்ட்டிற்கு மோடி செல்லும்போது நேரு அரங்கம் முதல் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் வரை 20-க்கும் மேற்பட்ட எல்.இ.டி.ஸ்க்ரீன், பேனர்கள் என தூள் பரத்தியிருந்தனர் பா.ஜ.க.வினர். மோடியை வழியனுப்ப சென்னை ஏர்போர்ட் வரை ஸ்டாலினும், இறையன்புவும் சென்றனர். ஏர்போர்ட் லாஞ்சில் மோடியை சந்தித்த ஸ்டாலின், கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்துவிட்டு ஏர்போர்ட்டிலிருந்து கிளம்பி விட்டார். இதனையடுத்து கவர்னர் ரவியை அழைத்து மோடி பேச, அவரிடம் கனமான ஒரு கோப்பு ஒன்றைக் கொடுத்துள்ளார் கவர்னர் ரவி.

இதனைத் தொடர்ந்து, மோடியை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்தனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சிடம் மட்டும் தனியாக 12 நிமிடம் விவாதித்திருக்கிறார் மோடி. அந்த சந்திப்பில், ’இன்றைக்கு நடந்த நிகழ்ச்சியில் முதல்வரின் (ஸ்டாலின்) பேச்சு அரசியல் ரீதியாக இருந்தது. உங்களை வைத்துக் கொண்டு அவர் அப்படி ஆவேசப்பட்டிருக்கத் தேவையில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். அதற்கு தலையை அசைத்து ஆமோதித்த மோடி, நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள் கிறேன்’என அட்வைஸ் செய்திருக்கிறார்.

ss

இதனையடுத்து பா.ஜ.க. அண்ணாமலை, முருகன், சி.டி.ரவி, கேசவவிநாயகம் ஆகியோர் பிரதமரை சந்திக்க, ஸ்டாலினின் பேச்சு குறித்துதான் அதிகம் பேசியுள்ளார் அண்ணா மலை. அரசு நிகழ்ச்சியை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். அவரது பேச்சு முன்கூட்டி திட்டமிடப்பட்டிருக்கிறது. உங்களை வைத்துக்கொண்டு பேசுவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியே நடந்திருப்பது போல தெரிகிறது என்றெல்லாம் மோடியிடம் போட்டுக்கொடுத் துள்ளனர் பா.ஜ.க. தலைவர்கள். அவர்களிடம், "தி.மு.க. எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்துங்கள்' என்று ஒற்றை வரியில் அந்த சந்திப்பை முடித்துக்கொண்டார் மோடி. பிறகு, ஆதினம் உள்ளிட்ட சிலரை சந்தித்து விட்டு டெல்லிக்கு பறந்தார் மோடி.

சென்னைக்கு உற்சாகமாக வந்த மோடியிடம் திரும்பிச் செல்லும்போது அந்த உற்சாகம் மிஸ்ஸாகியிருந்தது என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

இந்த நிலையில், சென்னைக்கு மோடி வருவதற்கு முதல்நாள் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் (தெற்கு) கண்ணனை அங்கிருந்து மாற்றியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இந்த சம்பவம் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்த, உள்துறை தரப்பில் நாம் விசாரித்த போது... ‘’மத்திய உளவுத்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர் தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணன். உளவுத்துறையில் சிறப்பான அனுபவம் பெற்றவர். அதனால் தற்போதும் அவருக்கு மத்திய உளவுத்துறையினரிடம் நெருக்கமான நட்பு உண்டு.

தமிழக அரசின் சார்பில், மோடியின் ப்ரோகிராமை ஒருங்கிணைத்திருந்தார். இது தொடர்பாக, அண்ணாமலையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார் கண்ணன். நேரு உள்விளையாட்டு அரங்கில் மொத்தம் 4,500 கேலரி பாஸ்கள். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட வி.வி.ஐ.பிக்களுக்கு 400 பாஸ்கள்.

4,500 கேலரி பாஸ்களில் தி.மு.க.வுக்காக 2000 பாஸ்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் தி.மு.க. இளைஞர் அணியினரும் இளைஞர்களும் உட்கார வைக்கப்பட்டனர். மீதமுள்ள 2,500 பாஸ்கள் பா.ஜ.க.வுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி சோமசேகரிடம் இருந்தன. "பா.ஜ.க.விடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்' என 2500 பாஸ்களையும் பெற்றுக்கொண்ட சென்னை போலீஸ், அதில் 1,500-ஐ மட்டுமே பா.ஜ.க.வுக்கு கொடுத்தது.

இதனால், மோடியின் ப்ரோகிராமில் தி.மு.க.வுக்கு இணையாக ஆட்களைத் திரட்டிக் காட்ட தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு 50 பேருக்கு பாஸ் கொடுக்க தீர்மானித்திருந்த பா.ஜ.க. அண்ணாமலையால் அது முடியவில்லை. மாவட்டத்துக்கு 25 பேருக்குத்தான் கொடுக்க முடிந்தது. அதிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு ஒரு பாஸ் கூட கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கண்ணனை தொடர்புகொண்டு பேசுகிறார் அண்ணாமலை.

அதற்கு கண்ணன், "பாஸ் இல்லைன்னாலும் பரவாயில்லை பா.ஜ.க.வினரை வரச்சொல்லுங்க. உள்ளே அனுமதிக்க போலீசிடம் சொல்லிவிடுகிறேன்' என தெரிவித் திருக்கிறார். இந்த விவகாரமும் அண்ணாமலையுடன் கண்ணனுக்கு இருக்கும் நெருக்கமும் மாநில உளவுத்துறை தலைவர் டேவிட்சன் ஆசிர்வாதத்துக்குத் தெரியவர, அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் டேவிட்சன்.. ஏற்கனவே சில காண்ட்ரவெர்சிகள் கண்ணனுக்கு எதிராக இருந்துள்ளன. இவற்றை யெல்லாம் ஆராய்ந்த முதல்வர் ஸ்டாலின், கூடுதல் ஆணையர் பதவியிலிருந்து கண்ணனை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி வைத்துவிட்டார்'’என்று பின்னணிகளை விவரிக்கின்றது அதிகாரிகள் தரப்பு. இது குறித்து, கண்ணனின் கருத்தறிய அவரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது லைன் கிடைக்கவில்லை.

மோடிக்கு எதிராக மாநில உரிமைகளை கர்ஜித்த ஸ்டாலின் பேச்சும், கண்ணனின் இடமாற்றமும் அதிகாரிகள் தரப்பில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வந்த நிலையில், மே 28-ந் தேதி ஓமந்தூரார் வளாகத்தில் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. கலைஞரின் தமிழ்ப் பற்றையும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் கலைஞர் காட்டிய அக்கறையையும் புகழ்ந்த வெங்கையா, தாய்மொழிதான் சிறந்தது என்றும், மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி இல்லை என்றும் பேசியது டெல்லிக்கு உடனே எட்டியுள்ளது.