"தென்மாவட்ட களையெடுப்பு! ஸ்டாலின் ரெடி!'’இந்த தலைப்பில் கடந்த சனிக்கிழமை (ஜூன்.30) வெளியான நக்கீரனில் ராங்-கால் செய்தி வெளியிட்டிருந்தோம். மதுரை, தேனி, நெல்லை, இராமநாதபுரம் தி.மு.க. மா.செ.க்களுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்பதை சங்கர்லால் சொல்லியிருந்தார். இந்த செய்தியைப் பார்த்ததுமே மேற்படி மாவட்டங்களின் மா.செ.க்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. தனது ஆதரவு ஒ.செ.க்கள், ந.செ.க்களைத் தொடர்பு கொண்ட மா.செ. ஒருவர் ""ராஜினாமா கடிதங்களை ரெடியா வச்சிருங்க. எனக்கு கல்தான்னா உங்க ராஜினாமாவை தலைமைக்கு அனுப்பி நெருக்கடி கொடுங்க''’என உசுப்பேத்தியிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை.01) மதியம் அறிவாலயத்திலிருந்து வெளியான கல்தா பட்டியலையும் புதியவர்களுக்கு வழங்கிய பொறுப்புப் பட்டியலையும் பார்த்த உடன்பிறப்புகளுக்கு ஆச்சரியம். அதைவிட அதிர்ச்சி... "கொங்கு மண்டலத்துல அதிரடி ஆக்ஷன் எடுத்த தளபதி, தென்மண்டலத்துல சொதப்பிட்டாரே'’என்றவாறு பேச ஆரம்பித்தார் மதுரையைச் சேர்ந்த பழைய நிர்வாகி ஒருவர். “
""மதுரையப் பொறுத்தமட்டிலும் வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி, மணிமாறன் என நாலு மா.செ.க்கள் இருந்தாங்க. மணிமாறனைப் பொறுத்தளவு பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் கட்சிக்காரர்கள் மத்தியில் அவ்வளவா கெட்டபேரு கிடையாது. ஆனா வேலுச்சாமி பேரு எல்லா வகையிலும் ரிப்பேர். சடக்குன்னு கைய ஓங்குற குணம் இருந்தாலும், அடுத்த செகண்டே அணைச்சுக்குற குணம் உள்ளவரு மூர்த்தி. தளபதியிடம் பணபலம் இருந்தாலும் ஜாதி ரீதியா அவருக்கு நெருக்கடிகள் அதிகம். யாரைத் தூக்கிட்டு, யாரைப் போடலாம்னு தலைமையில் ஆலோசனை நடந்தப்ப, பொன்.முத்துராமலிங்கம் பெயர் அடிபட்டப்ப, அவர் ம.தி.மு.க.விலிருந்து வந்தவர் என்பதால் பெண்டிங் வச்சுட்டாங்க.
அதுக்கடுத்து இளைஞர்களை அரவணைத்து செல்வதில் கெட்டிக்காரரான டாக்டர் சரவணன், பெயர் பரிசீலனைக்கு வந்த போது, சாஃப்ட் பாலிடிக்ஸ் பண்ணும் அவருக்கு எம்.எல்.ஏ., எம்.பி. சீட் கொடுத்துக்கலாம்னு முடிவெடுக்கப்பட்டது. அடுத்ததாக ஜெயராமன் பெயர் அடிபட ஆரம்பித்ததுமே, அவரைப் பற்றிய புகார்களும் வரிசையாக சீற ஆரம்பித்ததும் அடங்கிப்போனது. கடைசியில மதுரை மாநகர் மாவட்டத்திற்கு தளபதியை மாவட்டப் பொறுப்பாளரா நியமிச்சிருக்கும் தலைமை, கூடவே 9 பொறுப்புக் குழு உறுப்பினர்களையும் போட்டிருக்கு. பொறுப்புக் குழு ஓ.கே., ஆனா பொறுப்பாளர் சரியில்லையேங்கிறதுதான் மதுரை தி.மு.க.வோட நிலைமை''’என்ற எதார்த்த நிலவரத்தைச் சொன்னார்.
இதேபோல் மதுரை மாநகரில் ப.செ., வ.செ.க்கள், மாவட்டத்திற்குட்பட்ட ஒ.செ.க்கள், ந.செ.க்கள் மாற்றப்பட்டதில் சலம்பல் சத்தமும் புலம்பல் சத்தமும் சரிக்குச் சமமாக கேட்கிறது. அதே போல் தேனி மாவட்ட பொறுப்பாளராக கம்பம் இராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதை பெரும்பாலான உ.பி.க்கள் வரவேற்கிறார்கள். திருநெல்வேலியில் புகாருக்குள்ளான பெருந்தலைகள் தப்பியிருப்பதும், மற்றவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பதும் விவாதிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த மாவட்ட உடன்பிறப்புகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது இராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளராக கே.முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருப்பது தான். கட்சியில் தூத்துக்குடி பெரியசாமிக்கு அடுத்து, அதிக ஆண்டுகள் மா.செ.வாக இருந்தவர் சுப.தங்கவேலன். இவருக்குப் பின் மா.செ.வாகி, இப்போது கல்தா கொடுக்கப்பட்டிருப்பவர், அவரது மகன் சுப.த.திவாகரன். நாளுக்கு நாள் இந்த மாவட்டத்தில் கட்சியின் தேய்மான நிலையைப் பார்த்து கவலைப்பட்ட ஸ்டாலின், மா.செ.வை மாற்றும் முடிவுக்கு வந்தார்.
பெருநாழி வி.போஸ், மாஜி எம்.எல்.ஏ. முருகவேல் ஆகிய இருவரும் மா.செ. பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தினர். ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக, கட்சியின் சீனியரான மறைந்த காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமியின் மகன் முத்துராமலிங்கத்தை மாவட்ட பொறுப்பாளராக நியமித்திருப்பது அதிர்வை உண்டாக்கியுள்ளது. பரமக்குடி நகர உ.பி. ஒருவர் நம்மிடம் பேசியபோது, ""முக்கால்வாசி நேரம் மதுரையிலதான் இருப்பாரு முத்துராமலிங்கம். இந்த மாவட்டத்துக்கு வந்தாலும் கமுதியோட நின்னுக்குவாரு. அதத்தாண்டி கட்சிக்காரன் எவனுக்கும் இவரைத் தெரியாது'' என சலிப்பாகவே பேசினார்.
அறிவாலயத்திலோ, ""ஒரே குடும்பத்துக்கிட்ட பதவி இருக்குதுங்கிற பேரை மாத்துறதுக்குத்தான் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்காரு. மூணு மாசம் கட்சிப்பணிகளில் இவரின் வேகத்தைப் பார்த்துதான் நிரந்தர முடிவு எடுக்கப்படும்''’என்ற குரல் கேட்கிறது.
மேற்படி மூன்று மாவட்டங்களின் நிலை இப்படியென்றால், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வடக்கு ஒ.செ. மேப்பல்சக்தி நீக்கத்தைப் பார்த்து கப்சிப்பாகிக் கிடக்கிறார்கள். "மா.செ. பெரியகருப்பனுடன் நல்ல அண்டர்ஸ்டேண்டிங்கில் இருந்தும் சக்திய ஏன் தூக்கினார்கள்?' என புலம்புகிறார்கள் உ.பி.க்கள்.
நெல்லை மாவட்டம் -ராதாபுரம் ஒ.செ.வாக இருந்த கேசவனைத் தூக்கிவிட்டு, ஜெகதீஷனை நியமித்ததற்கு கடுமையான அர்ச்சனையும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் ஒ.செ. வேலாயுதம்பெருமாளுக்கு கல்தா கொடுத்துவிட்டு, ஜெயக்குமாரை ஒ.செ.வாக்கியதற்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லை என்பதுதான் தென்மாவட்ட தி.மு.க. களையெடுப்பின் உண்மை நிலை.
-பரமேஷ், அண்ணல், நாகேந்திரன்