ஸ்ரீமதி வழக்கில் பல அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீமதி எப்படி இறந்தாள் என்பதை விளக்கும் புதிய சாட்சிகள் அணி திரள ஆரம்பித்துள்ளன. இதற்கெல் லாம் காரணம் இந்தியாவின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட் கொடுத்த அதிரடியான தீர்ப்பு.

சூரிய வெளிச்சம் பாய்ந்ததும் இருள் அகன்று விடுவதைப் போல சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு அமைந்துள்ளது” என்கிறார் ஸ்ரீமதியைப் பறிகொடுத்த அவரது தாயார் செல்வி.

srimathi

Advertisment

ஸ்ரீமதி எப்படி இறந்தாள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது. நக்கீரன் மேற்கொண்ட புலனாய்வுகளில் இறப்பதற்கு முன்புவரை தனது தோழிகளுடன் பாத்ரூமில் தண்ணீர் தெளித்து விளையாடிக்கொண்டு இருந்தாள் ஸ்ரீமதி. தனது தோழியின் புத்தகங்களுக்கு அட்டை போட்டு கொடுத்துக் கொண்டிருந்தாள். ஹாஸ்டலில் மூன்று அடுக்குகள் உள்ள கட்டிலில் மூன்றாவது அடுக்கில் படுத்துக்கொண்டு இருந்த ஸ்ரீமதி அந்த அறையில் இருந்த மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருந்த வார்டன் ஜெபஜீவப்ரியாவைத் தாண்டி வெளியே சென்றிருக்க முடியாது. மூன்றாவது மாடியிலிருந்து கம்பி வேலிகளை தாண்டி விழ முடியாது. ஒருவேளை விழுந்திருந்தால் ஸ்ரீமதியின் முதுகெலும்பும் மண்டையும் உடைந்திருக்கும். ஸ்ரீமதி இறந்த அன்று அந்தப் பள்ளியின் பிரின்சிபாலுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கின்றது. அறையிலிருந்து வார்டனால் அழைத்துச் செல்லப்பட்ட ஸ்ரீமதி விலா எலும்புகள் முறிய மரணமடைந்திருக்கிறாள். ஸ்ரீமதியைப் போலவே ராஜா, பிரகாஷ் என இரு மாணவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஸ்ரீமதியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீமதியின் இடுப்பு எலும்புகள் முறிந்ததை, தனது ரிப்போர்ட்டில் பதிவு செய்யவில்லை என நக்கீரன், ஸ்ரீமதி விஷயத்தில் உள்ள மர்மங்களையும் செய்திகளாக வெளியிட்டது. இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் அவரது மனைவி சாந்தி, ஆசிரியர்கள், பள்ளி பிரின்சிபால் ஆகியோர் தமிழக மக்களின் மிகப்பெரிய எழுச்சிக்குப் பிறகுதான் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களை சென்னை உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. அந்தப் பிணை உத்தரவில் “ஆசிரியர்கள் திட்டியதால் மன வருத்தமடைந்த ஸ்ரீமதி மூன்றாவது மாடியிலிருந்து குதித்தார். அதனால் அவரது விலா எலும்புகள் முறிந்து அவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கும் பள்ளி நிர்வாகத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என குறிப்பிட்டிருந்தது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் சங்கர சுப்பு, கேசவன், சீனியர் வழக்கறிஞர் ரத்தினம் ஆகியோர் ‘ரவிக்குமாருக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் என்பது தவறானது’ என ஸ்ரீமதியின் தாயார் செல்வி சார்பில் வழக்குப் போட்டார்கள்.

Advertisment

srimathi

பொதுவாக ஒருவருக்கு கொடுக்கப்படும் ஜாமீனை “அவர் மோசமான குற்றவாளி எனவே அதை ரத்து செய்யவேண்டும் என அரசுகள்தான் வழக்குத் தொடுக்கும். ஸ்ரீ மதியின் தாயார் தொடுத்த இந்த வழக்கில் ஸ்ரீ மதியின் மரணத்துக்குப் பிறகும் ரவிக்குமார், சாந்தி சும்மா இருக்கவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் டீமை கொலை வெறியோடு இருபத்தைந்து கிலோமீட்டர் துரத்தி தாக்கியிருக்கிறார்கள். ரவிக்குமாரின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் தொடர்ந்து சட்டத்தை மீறி கொலையையும் தாக்குதல்களையும் செய்பவர் கள்'' என ஸ்ரீமதியின் தாயார் செல்விக்காக இலவசமாக ஆஜர் ஆன இந்தியாவின் மிகப்பெரிய கிரிமினல் வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார்.

அதைக் கேட்ட நீதிபதிகள் கவாய் மற்றும் எம்.எம்.சுந்தரேசன் அடங்கிய அமர்வு வழக்கத்தை மீறி இந்த மனுவை விசாரிக்க அனுமதித்ததோடு குற்றவாளிகள், தமிழக அரசு என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமுத்து பிரபல வழக்கறிஞர் ரத்தோகி, ஜோசப் அரிஸ்டாட்டில் என பதினொரு பேர் கொண்ட வழக்கறிஞர் படை குற்றவாளிகளுக்காக ஆஜரானது. தமிழக அரசு சார்பில் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். சித்தார்த் லூத்ரா தனது வாதத்தை முன்வைத்தார்.

“ஸ்ரீமதி என்கிற மாணவி சந்தேகத்துக்கு இடமான வகையில் மரணமடைந்தார் அது தற்கொலை என பள்ளி நிர்வாகம் செய்தி பரப்பியது. அது தொடர்பான புலன் விசாரணை முடியவில்லை. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை” என்றார். உடனே குறுக்கிட்ட அட்வகேட் ஜெனரல், “புலன் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம். இந்நிலையில் அவர்களை பிணையை ரத்து செய்து மறுபடியும் சிறையில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை”என்றார். குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களும் அதே வாதத்தை முன்வைத் தார்கள்.

சித்தார்த் லூத்ரா, “பிணை வழங்கும் நிலையில் ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை, குற்றவாளிகள் நிரபராதிகள் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது வழக்கின் விசாரணையை பாதிக்கும். பிணை வழங்கும் நிலையில் இப்படி கருத்து சொல்லக்கூடாது என ஏகப்பட்ட சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள் உள்ளன’என்று சுட்டிக்காட்டினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஸ்ரீமதி தற்கொலை என உயர்நீதிமன்றம் சொன்ன கருத்துக்களை வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது” என நீண்ட உத்தரவை தீர்ப்பாக அளித்தனர். இது ஸ்ரீமதி வழக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஸ்ரீமதியுடன் படித்த மாணவிகள் தங்களது பிளஸ்டூ படிப்பை முடித்துவிட்டு சக்தி பள்ளியை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீமதி இறந்த அன்று என்ன நடந்தது என பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பல புதிய உண்மைகள் இனி வெளிவரும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.