டந்த சில வாரங்களாகவே தமிழகத் தின் மத்திய மண்டலமான திருச்சியில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை சரசரவென உயர்ந்து பொதுமக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தவிர, திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கூட கொரோனா தொற்று கண்டறி யப்பட்டிருப்பதால் அங்குள்ள பலரும் பீதியில் உறைந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

அதாவது, திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டைச் சேர்ந்த அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று செயல்படுகிறது. அதில், போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், உகாண்டா, ருவாண்டா, ரஷ்யா போன்ற நாடுகளை சேர்ந்த 109 பேர் குற்றவாளிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

re

இதில், கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரி சோதனைகள் செய்யப்பட்டதில் சுமார் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி வயலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனது பெயர் மற்றும் அடையாளங்களை மறைத்துக் கொண்டவாறு, ‘சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவரின் உறவினர்’ என்று நம்மிடம் அறிமுகப்படுத்திய அந்த நபர் கூறிய தகவல்கள் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"தற்போது, சிறப்பு முகாமை சேர்ந்தவர்களில் சுமார் 54 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 32 பேருக்கு மட்டும் பிஷப் ஹீபர் கல்லூரியில் உள்ள தனிமை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 12 பேர் சிறப்பு முகாமிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை அதிகாரிகள் கணக்கில் காட்டவில்லை. இந்த சிறப்பு முகாமின் அதிகாரியாக இருப்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர்தான். தவிர, இதற்கென தனி தாசில்தார் ஒருவரும் இருக்கிறார். இவர்கள் மூலமாகவே நாளொன்றுக்கு ரூ.170 உணவுப்படியாக வழங்கப்படுகிறது. அதை வைத்து அவர்களே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.

தற்போது, கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், அந்த சிறப்பு முகாமை கவனித்துக் கொள்ளும் சிறப்பு தாசில்தார் உட்பட அதிகாரிகள் யாருமே ஆய்வுக்கு வருவதில்லை என்பதால், இங்குள்ள தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. தவிர, இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் போலி பாஸ்போர்ட் வழக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். அதாவது, திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்த அவர்கள், சில ஏஜெண்டுகள் மூலம் போலியான ஆவணங் களைப் பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முயன்றவர்கள்.

இவர்கள், சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்றம் மூலமாக ஜாமீன் வழங்கப்பட்ட பின்னரும் வழக்கு முடியும்வரை சிறப்பு முகாமில் இருக்கவேண்டும்’எனக் கூறப்பட்டு அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலே அதிகபட்சமாக ஒரு வருடம் மட்டுமே சிறைத்தண்டனை என்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் திருச்சி அகதிகள் முகாமில் இருக்கும் தங்கள் வயதான தாய் தந்தையர்களை தவிக்கவிட்டு இதே திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். தவிர, அவர்களில் சிலரின் உறவினர்களும் இதே திருச்சியின் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாகி வருவதையொட்டியாவது, அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர் களின் கேரண்டியுடன் சிறப்பு முகாமிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முன் வைத்து பலமுறை உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் எதுவும் நடக்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் மீது அக்கறையுள்ள புதிய அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்''’என்றார் அவர்.

இது பற்றி, சிறப்பு முகாம் களை கண்காணிக்கும் கியூ பிரிவு காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "வெளியிலிருந்து அவர்களைப் பார்க்கவரும் உற வினர்கள் மூலமாக அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டி ருக்கலாம் என கருதுகிறோம். தற்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் வழக்குகள் நிலுவையிலேயே உள்ளன. எனவே, அவர்களை அங்கிருந்து வெளியில்விடும் பட்சத்தில் அவர்கள் தப்பித்துச் செல்ல சாத்தியக்கூறு உள்ளது''” என்பதோடு முடித்துக்கொண்டனர்.

Advertisment