பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டி ருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக 38 பேர் களத்தில் நிற்கின்றனர். இதனால் தேர்தல் பரப் புரை விறுவிறுப்படைந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் உறுப்பினர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களின் ஆதர வில் இடைக்கால ஜனாதிபதி யாக ரணில் விக்கிரம சிங்கேவும், பிரதமராக தினேஷ் குணவர்த்த னேவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங் கேவின் பதவிக் காலம் நவம்பர் மாதம் நிறைவு பெறுவதால், ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 21-ல் நடக்கிறது.

ss

இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில், இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜீத் பிரேமதாச, மகிந்த ராஜ பக்சேவின் மகனும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்சே, சிங்கள பேரினவாத அமைப்பான ஜே.வி.பி.யின் ஆதரவில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுராகுமார திச நாயகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலை வரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால ஸ்ரீசேன வின் ஆதரவில் முன்னாள் அமைச் சர் விஜயதாஸ ராஜபக்சே, முன் னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேக, ஈழத்தமிழர் களின் பொது வேட்பாளராக அரியநேத்திரன், ராஜபக்சேக் களின் மோச மான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக் காரர்களின் (பொதுமக்கள்) ஆதரவில் வழக்கறிஞர் நுவன் போபகே உள்பட 38 பேர் கள மிறங்கியுள்ளனர்.

Advertisment

இதில் 20 பேர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள். மீத முள்ள 18 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள். 38 பேர் களத்தில் குதித்திருந்தாலும் ரணில், சஜீத், திசநாயகே, நாமல் ராஜபக்சே ஆகிய நால்வர் மத்தியில்தான் போட்டி அதிகரித்திருக்கிறது. தமிழர்களின் வாக்குகள் சிங்கள வேட்பாளர்களுக்கு செல்லக்கூடாது; தமிழர்களின் வாக்குகள் தமிழர்களுக்கே என்கிற கோட்பாட்டுடன் பொது வேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்படிப் பட்ட சூழலில், மக்களின் வாக்குகளைப்பெற களமாடி வருகின்றனர். இதற்கான பிரச்சாரங்கள் விறுவிறுப்படைந்திருக்கிறது. மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் ரணில் விக்கிரமசிங்கே, "இடைக்கால ஜனாதிபதியாக 2 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளேன். மிக கடுமையான மோசமான பொருளாதார நிதி நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்ட சூழலில் பொறுப்பேற்றேன். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் நம் தேசத்தை மீட்டெடுத்திருக்கிறேன். நாட்டை வளமை யாக்கியிருக்கிறேன்.

13வது சட்ட திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப் படும். மாகாணங்களிடமிருந்து மத்திய அரசு எடுத் துக்கொண்ட அதிகாரங்கள் திருப்பி வழங்கப்படும். மாகாண சபைகளுக்கான போலீஸ் அதிகாரங்களை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும்''’என்று தனது ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைச் சுட்டிக் காட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் ரணில்.

நாடாளுமன்றத்தில் உள்ள ராஜபக்சே கட்சியின் சுமார் 100 எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவாக கைகளை உயர்த்தியுள்ளனர். அதுமட்டு மல்லாமல், மகிந்தாவின் மகன் நாமல் ராஜ பக்சேவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவ தற்கு அக்கட்சியினுள்ளேயே எதிர்ப்புகள் அதிகரித் தன. மோதல் வெடித்தது. ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் சிலரும் நாமலை ஏற்கவில்லை. ஆனாலும் இதனையெல்லாம் புறக்கணித்து தனது மகனை வேட்பாளராக அறிவித்தார் மகிந்த ராஜபக்சே! இதனால் அதிர்ச்சியடைந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் அக்கட்சியிலிருந்து வெளியேறி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ss

எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாச தனது பிரச்சாரத்தில், "வளமையான இலங்கை தேசத்தை ராஜபக்சேக்கள் தங்கள் ஊழல்களால் சூறையாடினர். ஆபத்தான அந்த ஊழல்வாதி களான ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2 ஆண்டுகளில் ஆட்சி நடத்தினார் ரணில். எனது கரங்களில் இந்த நாடு ஒப்படைக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். மாகாணங் களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் திரும்பப் பெறப்படாது. மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்படும்''’என்கிற ரீதியில் பரப்புரை செய்து வருகிறார்.

சொந்த கட்சியிலேயே பல எதிர்ப்புகளை சந்தித்துவரும் நாமல் ராஜபக்சே, உள்கட்சிப் பிரச்சனைகளால் கட்சி பிளவுபட்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் சிங்கள மக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் அரசியல் செய்து வருகிறார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை.

இந்த தேர்தலில், தமிழர்களுக்காக களமிறக்கப்பட்டிருக்கும் பொது வேட்பாளர் தேர்வு கவனம் பெற்றிருக்கிறது. தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் அரியநேத்திரனை தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக அறிவித்துள்ளன. தமிழர்களுக்கான பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பு, தமிழ் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந் தாலும் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சிவாஜிலிங்கம் போன்றவர்கள், பொது வேட்பாளர் கருத்தை பல முறை இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ் கட்சிகளின் பொதுத்தளத்தில் அது ஏற்கப்படாததால் தனித்து போட்டியிட்டு தோல்வியையே தழுவியிருக்கிறார் சிவாஜிலிங்கம்.

இந்த தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தமிழ் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் மத்தியில் நடந்தன. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்தன. ஒரு கட்டத்தில் பொது வேட்பாளர் நிறுத்துவதே உகந்தது என்கிற முடிவில் இறுதியாக தீர்மானித்து அரிய நேத்திரனை களமிறக்கி யிருக்கின்றன 7 தமிழ் கட்சிகள். பொது வேட் பாளருக்காக தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு உரு வாக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர் தலில் பொது வேட்பாளர் கோட்பாட்டை அதிக அளவில் முன்னெடுத்த முன்னாள் எம்.பி.யும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) யின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ‘’"தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெறக்கூடிய வகையிலான ஒரு தீர்வினை சர்வதேச அரங்கத்துக்குள் மீண்டும் கொண்டு செல்வதற்கு பொது வேட்பாளரின் வெற்றி உதவிகளைச் செய்யும். அதற்கான நகர்வாகத்தான் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது''’என்கிறார்.

பொது வேட்பாளர் அரியநேத்திரன், "தமிழ்த் தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தவே களத்தில் நிற்கிறேன். தமிழ்த்தேசியத்தின் குறியீடாக, அடையாளமாக இருப்பேன். தமிழ் இனம் உரிமையற்ற இனமாக இருக்கிறது. தங்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கும் இலங்கைக்கும் தமிழர்கள் வெளிப்படுத்தும் முகமாகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன்''’என்கிறார்.

பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒருசேர முடிவு செய்து பொது வேட்பாளரை நிறுத்தி யிருக்கும் சூழலில், சில தமிழ் கட்சிகள், மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஆகியவை ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிக்கின்றன. அதேபோல தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை சஜீத் பிரேமதாசாவை ஆதரிக்கின்றன. பொது வேட்பாளருக்கான சிந்தனையில் ஒருமித்த ஆதரவு தமிழர் களிடம் இல்லை. காரணம், உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகாலம் கடந்த பிறகும் வடகிழக்கு மற்றும் மலையகத்தை மையப்படுத்தும் ஒருமித்த அரசியலை பேசும் வலிமையை தமிழ்க்கட்சிகள் இழந்திருப்பதுதான்.

பொது வேட்பாளர் குறித்து பேசியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், "தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவதற்கான சாத்தியம் இலங்கையில் இருக்கவில்லை. வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அதன் ஊடாக மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே இன்றைய சூழல்களுக்கும் காலத்துக்கும் பொருத்தமானது''” என்கிறார்.

இப்படிப்பட்ட தேர்தல் களத்தினை உற்றுக் கவனித்துள்ள இந்தியா, தனது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சமீபத்தில் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார் ஜெய்சங்கர். இதன் நோக்கம் பொதுவேட்பாளரை நிறுத்துவது பற்றியதாக இருந்துள்ளது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள். அதேபோல, சமீபத்தில் இலங்கைக்குச் சென்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ரணிலை சந்தித்து விவாதித்துவிட்டு வந்துள்ளார். ரணில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாக இருந்து வருகிறது என்கிற தகவல்கள் இலங்கையிலிருந்து கிடைக்கிறது.

முதன்முறையாக இனவாத அரசியலை முன்னெடுக்காமல் சிங்கள கட்சிகளும், நமது வாக்கு நமக்கே என்கிற கோட்பாட்டில் பெரும் பான்மையான தமிழ்க் கட்சிகளும் தேர்தல் களத்தை சந்திக்கின்றன.

ரணில், சஜீத், திசநாயகே ஆகியோர் களுக்கிடையே மூன்றுமுனை போட்டி இறுதிக் கட்டத்தில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பொது வேட்பாளருக்கு தமிழர்களின் மொத்த வாக்குகளும் கிடைத்தால் மட்டுமே சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லையேல் தமிழர்களின் உரிமைப் போராட்டம் பலகீன மடையும். சிங்களவர்களில் யார் வெற்றி பெற்றாலும் தோல்வி தமிழர்களுக்கு என்பது மட்டும் தேர்தல் கள எதார்த்தமாக இருக்கிறது.