லங்கைத் தமிழர் நலனில் திடீர் அக்கறை காட்டும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறார் மனித உரிமை செயற் பாட்டாளர் சண் மாஸ்டர்.

Advertisment

அமெரிக்காவில் வைத்து இலங்கை அதிபர் கோத்தபய ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்த பின்னர், "காணாமல் போனவர்களுக்கு விரைந்து மரணச் சான்றிதழ் வழங்குவேன்' என்று கூறியுள்ளாரே?

ss

2000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் இது. அவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கவிருக்கிறோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய இராசபக்சே சொல்கிறார். அதாவது அவர்கள் யாரும் ’உயிருடன் இல்லை’என்று பொருள். ஏற்கெனவே அவர் இதை இலங்கையில் இருந்தபடி சொன்னார். ஆனால், இப்போது அவர் ஐ.நா. பொதுச்செயலர் அண்டோனிய குட்டர்சைப் பார்த்துவிட்டு வாஷிங்டனில் நின்றபடி சொல்லியுள் ளார். காணாமலாக்கப்பட்டவர்களில் பெரும்பாலா னோர் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். சுமார் 50 பேருக்குமேல் சிறுவர்கள். அப்போது இலங்கை அரசின் பாது காப்புத்துறை செயலராக இருந்தது இதே கோத்தபயதான். அவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என்று அவரே சொல்வது என்பது ’கொன்றவர்கள்’தமது வாயாலேயே கொடுத்த ஒப்பு தல் வாக்குமூலமாகவே ஐ.நா. பார்க்கவேண்டும்.

Advertisment

சரணடைந்தவர்களை கொல்வதற்கு அனைத்துலக சட்டத்தில் இடமுள்ளதா? கொல் வதற்கு முன்பு நீதிவிசாரணை நடத்தப்பட்டதா? அவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரா? சுத்தியால் தலையில் அடித்துக் கொல்லப் பட்டனரா? நச்சு வாயுக்களால் கொல்லப்பட்டனரா? எங்கே கொல்லப்பட்டனர்? கொல்ல ஆணையிட்டவர்கள் யார்? அவர் தம் உடல்கள் புதைக்கப்பட்டனவா? எரிக்கப்பட்டனவா? விலங்கு களுக்கு உணவாக்கப்பட்டனவா? கடலில் வீசப்பட்டனவா?

இந்த கேள்விகளை எழுப்ப வேண்டிய ஐ.நா. செயலர், கொலைகாரனோடு கை குலுக்குகிறார்; இரத்தவாடை வீசும் ஒருவரின் தோளைத் தடவிக் கொடுக்கிறார் ஹிட்லர், இடிஅமீன் வரிசையில் தண்டிக்கப்பட வேண்டிய கோத்தபய இராசபக்சே, ஐ.நா. வில் நின்றபடி காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுப்பதாக சொல்ல முடியுமாயின்... அது ஐ.நா.வின் மரணத்தை அறிவிப்பதே ஆகும்.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் செப்டம்பர் கூட்டத் தொடரில் ஆணையர் முன்வைத்த இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கை குறித்து?

Advertisment

ஆணையர் மிசேல் பசலே கடந்த மார்ச் மாத கூட்டத் தொடரை ஒட்டி முன்வைத்த அறிக்கையில், "உள்நாட்டு பொறி முறையை நம்பிப் பயனில்லை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தில் இலங்கையை நிறுத்தவேண்டும்' என்று சொன்னார். ஆனால், அப்போது நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் அனைத்துலக விசாரணை என்ற தமிழர்களின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்தது. குற்றவாளியான இலங்கை தன்னைத்தானே விசாரித்துக்கொள்ள வேண்டும் என்று இராஜபக்சேக்களையே நீதிபதியாக்கியது. தமிழர்களுக்கான நீதி, வல்லரசுகளின் சந்தைப் போட்டிக்கு இரையாக்கப்பட்டது. இப்போதைய செப்டம்பர் கூட்டத் தொடரிலும் இலங்கையின் இன அழிப்பாளர்களை ஆதரித்து ஆணையர் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார். உள்நாட்டுப் பொறி முறையை உளமார ஏற்றுக்கொண்டு கட்டமைப்பு ரீதியிலான தமிழ் இன அழிப்புக்கான கைத்தட்டலாக அவரது அறிக்கை அமைந்துள்ளது.

ss

46/1 தீர்மானத்தையும், வெளியக தகவல் சேகரிப்பு பொறி முறைகளையும் ஏற்க முடியாதென இலங்கை அரசு அறிவித்த பின்னும் அது குறித்த கவலையோ அல்லது கண்டனமோ தெரிவிக்காதது ஏன்? பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கு பெற்றவர்களில் ஆயிரம் பேருக்கு மேல் கடுமையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது ஐ.நா.வுக்கு தெரியாதா? மனித உரிமை மன்றமா அல்லது இன அழிப்பு அரசுகளைப் பாராட்டும் கூடாரமா? என்ற கேள்வி எழுகிறது.

இனி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடக்கவிருப்பது என்ன? அதற்கு தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

2022 மார்ச் மாதம் இலங்கை தொடர்பான எழுத்து மூலமான அறிக்கை ஐ.நா.வில் முன்வைக்கப் படும். பின் செப்டம்பரில் மீண்டும் இலங்கை அரசு மீதான விவாதம் நடக்கும். அப்போது உள்நாட்டு விசாரணையா? சர்வதேச விசா ரணையா என்பது முடிவு செய்யப் படும். சிங்கள அரசு சர்வதேச விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்ள நரித் தந்திரத்தோடு செயல்பட்டு வருகிறது. இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப் படுவதை தடுக்கும் வல்லமை தமிழினத்திற்கு இல்லாமல் போனது மட்டுமல்ல, இப்போது நீதிக்காகப் போராடுவதிலும் அது மெத்தனம் காட்டி வருகின்றது.

ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், இரு தரப்பிலும் புலம்பெயர்ந்து வாழ்வோர் மற்றும் தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் என 10 கோடி பேர் இருக்கின் றோம். ஆனால், வெறும் 2 கோடி பேர் உள்ள சிங்களரிடம் தமிழர்கள் தோற்றுப் போவதேன்?

தமிழர்களிடையே ஒருங் கிணைப்பும், நீதி பற்றிய உறுதிப் பாடும், இனப் படுகொலைக்கு உள்ளான இனம் என்ற வைராக் கியமும் தேவை. தமிழர்களிடம் எவ்வளவு தங்கமும், டாலரும் கையிருப்பு இருக்கிறது என்று உலகம் எடை போடப்போவதில்லை. அழிக்கப்பட்ட தமிழினம் நீதியை வென்றதா? என்றே உலகம் பார்க்கும். வருங்காலத் தலை முறை, சமகால தலைவர்களை அவர்களின் தேர்தல் வெற்றி களில் இருந்து எடை போடாது. இன அழிப் புக்கு நீதிகோரும் போராட்டத்தில் இந்த தலைவர்’என்ன செய்தார்? என்று நிச்சயம் கேள்வி கேட்கும். இனியாவது தமிழ் தலைமைகள் நீதியை வென்றெடுப்பதில் அக்கறையை வெளிப்படுத்தவேண்டும்.

தமிழ்நாடு, ஐ.நா. கூட்டத்தொடர் தொடர்பாக என்ன செய்ய முடியும்?

உலகத் தமிழர்களின் தொட்டில் என்ற வகையில் தமிழ்நாட்டுக்கு என்று குறிப்பிடத்தக்க அரசியல் வலிமை உண்டு. தமிழ்நாடு அரசு சார்பாக ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி ஐ.நா. வுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பெரும் மதிப்பு உண்டு. ஆகஸ்ட் 30 -சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் நாளில் தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் டெப்லிட்ஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டார். ஆனால், தமிழ்நாட்டின் எந்தவொரு தலைவரும் ஆகஸ்ட் 30 அன்று எமக்காக அரைநிமிடம் ஒதுக்கவில்லை. எங்கள் மீது அக்கறை இல்லை என்று நான் சொல்ல வரவில்லை.

சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசை முடக்குவதற்கு முனைப்பான பங்களிப்பை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் செய்யவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. சமூக நீதியை கண்காணிப்பதற்கு என்றொரு குழுவை தமிழக முதல்வர் அமைத்துள்ளதுபோல் இன அழிப்புக்கு நீதிகோரும் விடயத்திலும் வெளிநாடுவாழ் தமிழர் நல அமைச்சுடன் செயல்படும் சிறப்புக் குழுவொன்றை நியமிக்கவேண்டும் என்று கோருகிறேன்.

இலங்கையில் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன?

முள்ளிவாய்க்கால் என்பது பாரிய படுகொலையின் குறியீடு மட்டுல்ல. தமிழினத்திற்கு எதிராக முழுநீள இனஅழிப்பை செய்வதற்கு இருந்த தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு விட்டதற்கான குறியீடும் ஆகும். தற்போது ஜெனீவா கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே இலங்கை அமைச்சர் ஒருவர் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதியின் தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தனது பாதணியை நக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். கோத்தபய இராசபக்சே ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவர்கள் திலீபனை விளக்கேற்றி அஞ்சலி செய்ய முற்பட்டபோது சிங்கள காவல்துறையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார். இதிலிருந்து தமிழர்கள் எந்தளவிற்கு கொடுமையான ஆட்சியில் அங்கு வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். மீண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம். வல்லரசுகளின் போட்டி இலங்கை தீவில் கொதிநிலை அடையும்போது தமிழர்களின் இரத்தம் இலங்கையில் பெருக்கெடுத்து ஓடக்கூடும். தமிழகம் எம்மைக் காப்பதற்காக செயல்படத் தவறினால் உலகில் வேறு யாரும் எம்மை கண்டுகொள்ளப் போவதில்லை.