லங்கை நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்ததற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கடுமையாக எச்சரித்து வருகின்றன. மனம் போன போக்கில் மைத்ரி எடுக்கும் நடவடிக்கைகள் இலங்கை அரசியலை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து விலகி மைத்ரிக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறார் ராஜபக்சே.

rajapaksa

ராஜபக்சேவுக்கு எதிராக ரணிலுடன் இணைந்து இலங்கை அதிபரான மைத்ரி, ரணிலை பிரதமராக்கினார். இருவருக்கும் சமீபகாலமாக ஏற்பட்ட உரசல்களால் ரணிலை திடீரென நீக்கி விட்டு ராஜபக்சேவை புதிய பிரதமராக சமீபத்தில் நியமித்தார் மைத்ரி. இந்த அதிரடி நியமனம், இலங்கை அரசியலில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அரசியல் சாசனத்தை மீறி மைத்ரி சட்ட விரோதமாக நடக்கிறார் என எதிர்க்கட்சிகள் கச்சை கட்டிய நிலையில், நாடாளுமன்றத்தை இழுத்து மூடிய மைத்ரி, பெரும்பான்மையை ராஜபக்சே நிரூபிக்கும் வழிகளை ஆராய்ந்தார். மைத்ரியும் ராஜபக்சேவும் இணைந்து எதிர்முகாம் எம்.பி.க் களுக்கு வலை வீசினார்கள். 50 கோடி வரை பேரம் பேசப்பட்டது. ஆனால், பெரும்பான்மைக்கு போதுமான எம்.பி.க்கள் சிக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் மைத்ரி. இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் மேலும் அதிர்வுகளை உரு வாக்க, இதனை எதிர்த்து ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, இரா.சம்பந்தன் தலை மையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய எதிர்க்கட்சிகள் இலங்கை உயர்நீதிமன்றத்தை அணுகி யுள்ள சூழலில், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மைத்ரியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ராஜபக்சே, சுதந்திரா கட்சியிலிருந்து விலகி மைத்ரியின் மூக்கை உடைத்திருப்பது இலங்கை அரசியலில் புதிய திருப்பம்.

Advertisment

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ் எம்.பி.க்கள், ""ராஜபக்சேவின் தந்தையால் உருவாக்கப்பட்டதுதான் இலங்கை சுதந்திரா கட்சி. இதன் ஆளுமை மிக்க தலைவராக இருந்த சந்திரிகா குமாரதுங்கே, இலங்கையின் அதிபரான போது மகிந்த ராஜபக்சேவை சாதாரண அமைச்சராக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றிய ராஜபக்சே, இலங்கையின் அதிபரானார். அவரது அமைச்சரவையில் சாதாரண அமைச்சராக இருந்தவர்தான் மைத்ரி. இலங்கையில் இன அழிப்பு முடிந்த நிலையில் ராஜபக்சேவை ஓரங்கட்டிய சர்வதேச நாடுகள், கடந்த 2015-ல் நடந்த தேர்தலில் மைத்ரியை அதிபராகவும் ரணிலை பிரதமராகவும் உருவாக்கின. உச்சபட்ச அதிகாரத்தில் உட்கார்ந்த மைத்ரி, ராஜபக்சேவை முடக்கி வைத்ததுடன் சுதந்திரா கட்சியின் தலைமையை கைப்பற்றியிருந்தார்.srilankanpolitices

ராஜபக்சேவின் அரசியலை ஒழித்துக்கட்ட, சுதந்திரா கட்சியின் பணிகளில் இருந்து ராஜபக்சேவின் குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்தியிருந்தார் மைத்ரி. இந்த நிலையில்தான், இரு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக, சுதந்திரா கட்சியிலிருந்து தனது ஆதரவாளர்களை வெளியேற வைத்து, தனது நண்பரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஜி.எல்.பெரிசின் தலைமையில் "இலங்கை பொதுஜன முன்னணி' என்கிற கட்சியை துவக்க வைத்தார் ராஜபக்சே. உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சி அமோக வெற்றி பெற இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பானார். இதனை உற்றுக்கவனித்த சர்வதேச நாடுகள், இந்தியாவின் துணையோடு விளையாட ஆரம்பித்தன. மைத்ரியும் ராஜபக்சேவும் கை கோர்த்தார்கள். அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேறின. ஆனால், இந்தியாவும் சர்வ தேசமும் எதிர்பார்த்தது நடக்காத நிலையில், அடுத்து என்ன செய்வது? ராஜபக்சேவையும் மைத்ரியையும் எப்படி பாதுகாப்பது? என ஆலோசிக்கப்பட்ட சூழலில்தான் திடீரென நாடாளுமன்றத்தை தன்னிச்சையாக கலைத்தார் மைத்ரி. இதுதான் தற்போது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தச் சூழலில்... சுதந்திரா கட்சியிலிருந்து விலகி, தான் உருவாக்கிய பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார் ராஜபக்சே. அவருடன் சுதந்திரா கட்சி எம்.பி.க்கள் 50 பேர் விலகியிருப்பது மைத்ரிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

நாடாளுமன்றத்தைக் கலைத்ததை கண்டிக்கும் முகமாக ராஜபக்சே கட்சிக்கு தாவியிருக்கிறார் மைத்ரியின் மகள் சத்துரிக்க சிறிசேனா. இதற்கிடையே சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மைத்ரியை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், இலங்கை யின் உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, ""நாடாளுமன்றக் கலைப்பு ஏற்கக்கூடியதல்ல. ஜனாதிபதி எதேச்சதிகாரியாக செயல்படுகிறார். அவரின் அதிகாரம் குறித்து சட்டச் சிக்கல்கள் உருவாகி யிருப்பதாலும், கலைப்புக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாலும் இதில் தெளிவு பிறக்கும் வரையில் ஜனாதிபதியின் கட்டளை களை செயல்படுத்தக்கூடாது'' என உத்தர விட்டிருக்கிறார்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தேசிய தேர்தல்கள் ஆணையக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவனும் வழக்கு தாக்கல் செய்திருப்பது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் கலைப்பு குறித்த பின்னணிகளை விசாரித்தபோது, மைத்ரியும் ராஜபக்சேவும் இணைந்தே நாடாளுமன்ற கலைப்பை முன்னெடுத்துள்ளனர். ஆனால், இன்றைக்கு புத்தன்போல வேசம் கட்டி மைத்ரியை உதறித் தள்ளியுள்ளார் ராஜபக்சே. கலைப்பு என்பதே இருவரும் போட்ட திட்டம்தான். அதாவது, ராஜபக்சேவின் பிரதமர் நியமனத்தை சுதந்திரா கட்சி எம்.பி.க்களே விரும்பவில்லை. ராஜ பக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண் டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் வகையில் 20-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப்பது என முடிவு செய்திருந்தனர். அதேபோல, நான்கு அமைச்சர்கள் திடீரென பதவி விலகுவது எனவும் திட்டமிட்டிருந்தனர். இதனை மோப்பம் பிடித்த இலங்கை உளவுத்துறை இது குறித்து ரிப்போர்ட்டை மைத்ரிக்கு அனுப்பி வைத்தது. ரிப்போர்ட்டை பார்த்த மைத்ரி உடனடியாக ராஜபக்சேவை அழைத்து விவாதித் தார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுதான் நாடாளுமன்றம் கலைப்பு. சுதந்திரா கட்சியி லிருந்து ராஜபக்சே வெளியேறியதும்கூட ஒருவித நாடகம்தான் என்கின்றன கொழும்புவிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

மைத்ரியால் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு இலங்கை உயர்நீதிமன்றம்தான் தீர்வு சொல்ல வேண்டியிருப்பதால் இலங்கை அரசியல் அதனை நோக்கி குவிந்திருக்கிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர்களை விலை பேசும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது மைத்ரி தரப்பு!

-இரா.இளையசெல்வன்