எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை, சர்வதேச எதிர்ப்பால் அடக்கி வாசித்தது. படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, சிறை பிடிப்பது என தொடர்ந்துவந்த நிலையில், தற்போது படகுகளைக் கவிழ்த்துக் கொல்லும் நூதன பாணியைக் கையாள்கிறது.
"ஜனவரி 12-ஆம் தேதி சனிக்கிழமையன்று மீனவர்கள் முனியசாமி, கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய நான்குபேர் கலையரசன் படகிலும், கீழக்கரை ‘சதக்’ கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் துரைப்பாண்டி, தங்கச்சிமடம் அரசினர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் டேனியல் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தியாகு படகிலும் மீன்பிடிக்க கடலுக்குக் கிளம்பினர். ஞாயிற்றுக்கிழமை மாலை ‘இவர்கள் சென்ற படகு நெடுந்தீவு பகுதியில் மூழ்கியதில் முனியசாமி இறந்துவிட்டார். அவரது சடலத்தைக் கைப்பற்றி காங்கேசன்துறை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் இலங்கை கடற்படையினர். மற்றவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்'’என ராமேஸ்வரத்தில் செய்தி பரவ, தீவே சோகத்தில் ஆழ்ந்தது.
"படகு மூழ்கியதற்கான காரணம் என்ன?' என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்திருந்த சமயத்தில், உயிரிழந்த முனியசாமியின் உடலை அடையாளம் காட்ட அவருடன் மீன் பிடிக்கச் சென்ற சக மீனவர்கள் கையில் விலங்குடன் யாழ்போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட புகைப்படங்கள் இலங்கை மீடியாக்கள் மூலம் வெளியாகின. இந்திய துணை தூதரக அதிகாரி பாலச்சந்திரன், “""எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மீது மோதிக் கவிழ்ந்ததாக இலங்கை ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது''’என்பதோடு முடித்துக்கொண்டார்.
ஆனால், இலங்கை கடற்படையின் இந்த நூதனத் தாக்குதல் சனிக்கிழமை பின்னிரவிலேயே நடந்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை இந்திய தூதரகத்தில் தெரிவித்திருக்கின்றனர் தாக்கப்பட்ட மீனவர்கள். அவர்கள், ""நெடுந்தீவு தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சிங்கி கப்பல் எங்களை நோக்கி வந்தது. பிரிட்ஜோ படுகொலைக்குப் பிறகு யாரையும் சுடுவதில்லை என்பதால், இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு விட்டுவிடுவார்கள் என அஜாக்கிரதையாக இருந்தோம். ஆனால், வந்த வேகத்திலேயே படகு மீது பயங்கரமாக மோதியதால், செய்வதறியாது கடலில் குதித்துவிட்டோம். முனியசாமி டிரைவர் என்பதால் அவரால் வெளியில் வரமுடியவில்லை. பிணமாகத்தான் பார்த்தோம்''’என தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையே ராமேஸ்வரம் கடற்கரையில் நடைபெற்ற மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், "முனியசாமி உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர வேண்டும். மூழ்கிய படகுகளுக்கு இழப்பீடு வேண்டும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கவேண்டும்'’என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதோடு, 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளைக் கரையில் நிறுத்திவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். தற்போது வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டாலும், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே மீன்பிடிக்கச் செல்வதாக தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஜோஸ் நம்மிடம், ""கடந்த பிப். 06, 2017 அன்று மீனவ இளைஞர் பிரிட்ஜோவை நடுக்கடலில் சுட்டுக் கொன்றது. பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால், படகுகளை மட்டும் பறிமுதல் செய்துவந்தது. தற்போது மீண்டும் தன் கணக்கைத் தொடங்கியிருக்கிறது. மீன்பிடித் தொழிலுக்காக மீனவர்களைப் பலி கொடுப்பது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது. ராமேஸ்வரம் கடலில் இருந்து முதல் மூன்று கடல்மைல் பரப்பில் நாட்டுப் படகுகளும், அதற்கடுத்த நான்கு கடல்மைல் பரப்பில் பாறைகளும் இருப்பதால், ஏழு மைல்களுக்கு மேல்தான் விசைப்படகு மூலம் மீன்பிடிக்க முடியும். இவ்வளவு குழப்பம் நிறைந்த கடற்பரப்பில் சர்வதேச எல்லையை மீறுவதாகவே இருந்தாலும் அதற்காக கொல்வது எந்தவிதத்தில் நியாயம்'' என்று கேள்வியெழுப்பினார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களின் தாயார்களான பத்மாவதியும், டெய்சியும் பேசுகையில், ""குடும்பச்சூழல் காரணமாகத்தான் விடுமுறைக் காலங்களில் பிள்ளைகளை மீன்பிடிக்க அனுப்பினோம். அதில் வரும் வருமானம்தான் வீட்டுச் செலவுக்கும், கல்விக் கட்டணத்துக்கும் பயன்பட்டது. இப்போது இலங்கைக் கடற்படை அவர்களைக் கைது செய்து வைத்திருப்பதால் உண்மைநிலை தெரியவில்லை. அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது''’என கண்ணீர்விட்டனர்.
பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தங்கச்சிமடம் சின்னத்தம்பி, “""இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த இனப் படுகொலைக்குப் பிறகு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், அவர்களை சிறைபிடிப்பதுமான வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது இலங்கை அரசு. கைதான மீனவர்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டு, பொய்வழக்கு -சிறை -சித்திரவதை என கொடுமைப்படுத்தி நடைப்பிணமாக விடுவிக்கின்றனர். இதுவொரு பொருளாதார இனப்படுகொலை. இதைச்செய்த இலங்கை கடற்படை வீரர்கள் மீது இந்திய அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கெனவே 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது கொல்லப்பட்டவர்களுக்கும் இதேபோன்ற விளக்கத்தைத்தான் இலங்கை அரசு பதிவுசெய்து தட்டிக்கழித்து வருகிறது. இதுபோன்ற திட்டமிட்ட படுகொலையில் ஈடுபடும் இலங்கை அரசின் மீது ராஜாங்க ரீதியாக பொருளாதாரத் தடைவிதித்து, இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்'' என வலியுறுத்தினார்.
உயிர் பயத்தோடு, பொருளாதார இழப்புக்கான அச்சுறுத்தலையும் தமிழக மீனவர்களுக்கு தந்திருக்கிறது இலங்கை அரசு. என்ன செய்யப்போகின்றன மத்திய-மாநில அரசுகள்?
-நாகேந்திரன்