பிரிட்டன் நீதிமன்றம், விடுதலைப்புலிகள் மீது அந்நாடு தடை விதித்தது தவறானது எனத் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதன் சர்வதேச தாக்கம் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்.

dd

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து வெளிவந்த தீர்ப்பு பற்றி?

இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பு களுக்கான ஆணையம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நியாயமற்றது என்று அக்டோபர் 21 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எமது விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாக அறிவித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் 2001 இல் தடை விதித்தன. இந்த தடைதான் சிங்கள அரசு தமிழின அழிப்புப் போரை நடத்தி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்வதற்கு வழிவகுத்தது. இந்த தடைதான் இன்றைக்கும் சர்வதேச அரங்கில் இனப் படுகொலைக்கு நீதி கோரும் அறவழி போராட்டங்களை முன்னெடுக்க முடியாதபடி புலம்பெயர் தமிழர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. இப்போது வந்திருக்கும் இந்த தீர்ப்பை ஏற்று இங்கிலாந்து மட்டுமின்றி ஐரோப்பிய யூனியனும் இந்திய அரசும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கினால், அகதிகளாக பல்வேறு நாடுகளில் குடியேறியிருக்கும் நாங்கள், கொல்லப் பட்ட எம் உறவுகளுக்காய் கண்ணீர்விட்டு அழமுடியும், நீதிக்காக குரல் கொடுக்க முடியும்.

Advertisment

இந்தியப் பிரதமர் மோடிக்கும் ராஜபக்சே சகோதரர்களுக்குமான உறவு எப்படி உள்ளது? ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு வழி வகுக்குமா?

தமிழினத்தை அழிக்க நினைக்கும் சிங்களப் பேரினவாதிகளின் விருப்பத்திற்கு உதவுவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களை வென்று இலங்கைத் தீவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்ற இந்தியாவின் கணக்கை சிங்கள இராஜதந்திரிகள் 33 வருடங்களாக பொய்யாக்கியே வந்துள்ளனர். இந்த நிமிடம்வரை தமிழர்கள் ஒருபுறம் அழிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் சீனாவின் முழுக் கட்டுப்பாட்டில் இலங்கைப் போய்க் கொண்டிருக்கிறது. சிங்களவர்களின் இந்திய எதிர்ப்புத்தான் தமிழின அழிப்புக்கான வரலாற்று அடிப்படை.

இதை புரிந்து கொள்ளாத காரணத்தால், ஈழத் தமிழர்களின் அழிவும் இந்தியாவுக்கு சீனாவின் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்தியாவின் பிரதமர் மோடி ஒரு சிறிய இலங்கை தீவின் பிரதமர் இராசபக்சேவிடம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 ஆவது திருத்தத்தை அமலாக்க சொல்கிறார். ஆனால், இராசபக்சேவோ, தனது வெளியுறவு துறை அமைச்சர் மூலம் செவ்வாய் கிரகத்தில்தான் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று மோடிக்கு சவால்விடுகிறார். இதுதான் சிங்களம். எனவே, இந்தியப் பிரதமர் மோடி - இனப்படுகொலையாளன் இராசபக்சே நட்புறவால் தமிழர்களுக்கும் சரி இந்தியாவுக்கும் சரி ஒரு நன்மையும் விளை யாது. தமிழர்களை முற்றாக அழிக்கும்வரை இந்தியாவுடன் நெருக்கம் காட்டிப் பின்னர் சீனாவினால் எந்நேரத்திலும் இந்தியாவுக்கு எதிராக திரி கொளுத்தும் வெடிமருந்து கிடங்காக இலங்கை மாற்றப்படும். இந்தியாவின் காலடியில் இருக்கும் இலங்கை தீவில் வாழும் பூர்வகுடி தமிழர்கள் முற்றாக அழிக்கப்பட்டால் சர்வதேச அரங்கில் இந்தியாவால் என்றென்றைக்கும் தலைநிமிர முடியாமல் போகும் என்பதை இந்திய அரசு உணரவேண்டும்.

Advertisment

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் தீவிரமடைந்து செல்வதாக தகவல்கள் கூறுகின்றனவே?

ddகடந்த செப் 26 ஆம் நாள் இந்தியப் பிரதமர் மோடியும் மகிந்த இராசபக்சேவும் இந்திய இலங்கை உச்சி மாநாட்டிற்காக இணையவழியில் பேசிக் கொண்டிருந்தபோது இலங்கை தகவல்தொழில்நுட்ப வல்லுநர் குழுவொன்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை இலங்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனாவின் தொழில்நுட்பத்தை எல்லை கடந்து பாவிப்பதை எச்சரித்துள்ளது. இன்றைக்கு சீனா இந்தியாவின் தலைமாட்டில் லடாக்கில் மோதுவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவின் காலடியில் இருக்கும் இலங்கை தீவில் இந்தியாவுக்கு எதிராக குழிபறித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க மறுக்கிறீர்கள். ஈழத் தமிழர்கள் அழிவது சீனாவுக்கே இலாபம், இந்தியாவுக்கு ஆபத்து என்பதை இப்போதாவது இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் கடந்த 23 -10 -2020 அன்று நிறைவேற்றப்பட்டுள்ள 20 வது திருத்த சட்டம் பற்றி?

இலங்கை அரசமைப்புச் சட்டம் அடிப்படையில் சிங்கள இன மேலாதிக்கத்திற்கும் அதை எதிர்க்கும் பட்சத்தில் இன அழிப்பிற்கும் வழிநடத்தக்கூடியதாகும். அரசியல் தீர்வென்று சொல்லப்பட்டு அதில் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தால் இன அழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

இப்போது இராசபக்சேக்களால் கொண்டுவரப் பட்டுள்ள 20வது சட்டத்திருத்தம் என்பது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்காக எழுதப்பட்டிருக்கும் முன்னுரை யாகும். 2009 இல் மகிந்த இராசபக்சே அதிபராக இருக்கும் பொழுது தமிழினப் படுகொலைகள் உச்சத்திற்கு போயின. பின்னர் இராசபக்சே ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டு அதிபர் பதவிக்கான அதிகாரங் களைக் குறைக்கும் 19 வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப் பட்டது. ஆனால், யுத்த வெற்றிவாதத்தின் மூலம் மீண்டும் இராசபக்சே சகோதரர்கள் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். 20 ஆவது சட்டத்திருத்தம் மூலம் அதிபருக்கு பழைய அதிகாரங்கள் மீளக் கொடுக்கப் படுகின்றன. அனைத்துத் தமிழ் மக்களும் மீண்டும் படுகொலைகளின் காலகட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கும் அச்சத்தில் உள்ளனர்.

-கீரன்