இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 12 ஆண்டுகளாகியும் ஈழத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என எதையும் முன் னெடுக்காத சூழலில், அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த ஜனாதிபதி கோத்த பாய ராஜபக்சே தயாராகி வருவதாகப் பரவியுள்ள தகவல்கள் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ராஜபக்சே சகோதரர்கள் நல்லவர்களாயிட்டாங்களா என இலங்கையில் விசாரித்தோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சிலர் நம்மிடம்,”"இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சேவையும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவையும் கொண்டு வந்தால் இலங்கைக்குள் எந்த வெளி நாட்டு சக்திகளும் ஆதிக்கம் செலுத்த முடியாது என நம்பி அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்தது சிங்கள பேரினவாதம். ஆனால், அந்த நம்பிக்கை சமீபகாலமாக தவிடுபொடியாகி ஒட்டுமொத்த இலங்கையையும் சீனாவிடம் தாரை வார்க்கும் சூழல் அதிவேகமாக உருவாகி வருகிறது.
அரசாங்கத்தை நிர்வகிக்க முடியாத அளவுக்கு தவறான அரசியல் முடிவுகளால் இலங்கையை பாதாளத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள், அரசியல்ரீதியாக நிலைநிறுத்த அவர்கள் திட்டமிட்டதை நடைமுறைப்படுத்த முடியாத நெருக்கடிகள் ஆகியவை ராஜபக்சேக்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
பொருளாதார நெருக்கடிகளுக்குள் இலங்கை சிக்கியிருப்பதற்கு காரணம், சீனாவிடம் அதிகப்படியான கடன்களை பெற்றிருப்பதுதான். தற்போதைய நிலையில், 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வைத்திருக்கிறது இலங்கை. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 134 லட்சம் கோடிகள். நடப்பாண்டில் மட்டும் 14,855 கோடி வரை சீனாவுக்கு கடன் தொகையை திரும்பச் செலுத்த வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
சீனாவிடம் வாங்கிய கடன்களுக்காகத்தான் இலங்கையில் சீனாவின் அந்நிய முதலீடுகளை தாராளமாக இறக்குமதி செய்ய அனுமதித்ததுடன் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சீனாவிடம் தாரை வார்த்தனர் ராஜபக்சேக்கள். இன்றைய நிலவரப்படி இலங்கையில் சீனாவின் நேரடி முதலீடு 35 சதவீதம். அதன்படி, துறைமுகங்கள், மின் நிலையங்கள், விமான நிலையங்கள், போக்குவரத்துகள், நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்புகள் என பல்வேறு துறைகளில் முதலீடுகளை இறக்கியிருக்கிறது. இதைக் கணக்கிட்டால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதம் அளவுக்கு சீனாவின் ஆதிக்கம் இருக்கிறது.
கடன் தவணைகளைக்கூட திருப்பித் தர முடியாமல் ராஜபக்சேக்கள் திணறி வரும் நிலையில், இலங்கை-சீனா தூதரக உறவுகளின் 65-வது ஆண்டு விழாவை இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தினார்கள் ராஜபக்சேக்கள். இதில் கலந்துகொள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்லியிலியை அழைத்திருந்தனர். இரண்டு நாள் பயணமாக அவரும் வந்திருந்தார்.
தனது அதிபர் மாளிகையில் வாங்லியிலிக்கிற்கு பலமான விருந்தளித்தார் கோத்தபாய ராஜபக்சே. விருந்து முடிந்ததும் இருவரும் 30 நிமிடங்கள் விவாதித்தனர். அதில், பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருப்பதால் இலங்கைக்கு கடன் சலுகைகளை சீனா தர வேண்டும் என்பதில் தொடங்கி சில கடன்களை ரத்து செய்ய கோரிக்கை வைத்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால், அவரது கோரிக்கையை சீனா ஏற்க மறுத்துவிட்டது. இலங்கையை தன் வசமாக்கத்தான் சீனா கடன் கொடுத்திருந்தது.
இந்த நிலையில்தான், சீனாவின் கடன் சிக்கலிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற இந்தியாவிடம் நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. மேலும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இலங்கையின் வெளியுறவு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் கடன் பொறியிலிருந்து தப்பிக்க, இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளனர்.
இந்தியாவை சம்மதிக்க வைக்க வேண்டு மானால், இந்தியா எதிர்பார்க்கும் சில விசயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என ராஜபக்சேக்களின் திட்டமிடலில் ஒரு பகுதி தான், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் பகிர்வு என்கிற பசப்பு வார்த்தைகள். உண் மையாக அரசியல் அதி காரப் பகிர்வு தர ராஜ பக்சேக்கள் தயாராக இல்லை‘’என்று பின் னணிகளை சுட்டிக் காட்டினார்கள்.
நிதி உதவி கேட்டு இந்தியாவை ராஜபக்சேக்கள் அணுகியிருப்பதை அறிந்து, இலங் கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் நீதிபதி விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கட்சி தலைவர் சிறிகாந்தா ஆகியோர் பிரதமர் மோடிக்கு விரிவான நீண்ட ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில்,”"இந்திய-இலங்கை உடன்படிக்கையும், தமிழ் பேசும் மக்களின் ஆட்சி அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் அபிலாஷை களும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் உதவியுடனும் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு இன்றுவரை தீர்வு காணப்படவில்லை.
தமிழ் பேசும் மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான நிரந்தரமான ஒரு தீர்வைக் காணுவதற்கு தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி கடந்த 40 ஆண்டுகளாக இந்த முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வந்திருப்பதற்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுள்ளவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
வடக்கு கிழக்கில் எப்போதும் பெரும்பான்மை யாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை எட்டுவதற்கு நம்பிக்கையுடன் எங்களின் முயற்சி இருக்கிறது.
மாண்புமிகு இந்திய பிரதமராகிய தாங்கள் 2015, மார்ச் 13-ந்தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பெரிதும் குறிப்பிடத்தகுந்ததாகும். அதில், ‘இந்தியாவில் உள்ள மாநிலங்களைப் பலப்படுத்துவதே என் முன்னுரிமைக்கான விடயமாக உள்ளது. ஒத்திசைவான கூட்டாட்சியில் (சமஷ்டியில்) நான் அசையாத நம்பிக்கை உள்ளவன். எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறோம். அத்துடன் அவர்களை தேசிய மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளில் முறையான பங்காளியாக்கிக் கொள்கிறோம்“ என்று கூறினீர்கள்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அரச முறைப் பயணமாக 2019, நவம்பர் 29-ல் இந்தியா வந்தபோது அவரிடம் நீங்கள், ‘இலங்கையில் நல்லிணக்கம் பற்றி நாம் எமது கருத்துக்களை திறந்த மனதுடன் பரிமாறிக்கொண்டோம். சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் என்பவை தொடர்பில் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் விதமாக, இலங்கை அரசாங்கம் தனது நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். இதில் 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துவதும் உள்ளடங்கும். வடக்கு, கிழக்கு உட்பட்ட, இலங்கை முழுவதுமான அபிவிருத்தியில் இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக எதிர்காலத்தில் விளங்கும்’ என்று தெரிவித்திருக்கிறீர்கள்.
இலங்கை அரசாங்கம் பற்பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்று வாக்குறுதி யளித்துள்ளது. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை எட்டுவதற்கு 13-ஆவது சட்டத் திருத்தத்திற்கும் அப்பால் அதன்மீது கட்டியெழுப்பப்படும் என்ற குறிப்பிடத் தகுந்த பொறுப்பை மேற்கொள்வது என்ற விடயமும் இந்த வாக்குறுதியில் அடங்கு கிறது.
ஆயினும் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களுக் கான சம உரிமை போன்றவற்றில் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை அமுல்படுத்தத் தவறியதோடு மட்டுமல்லாமல், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும், அதன்கீழ் வரும் நிறுவனங்களையும் ஒருதலைப்பட்சமாக மீளப் பெற்றுக்கொண்டுள்ளன.
மேலும், தமிழ்பேசும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை, வடக்கு கிழக்கின் மக்கள் குடிப்பரம்பலை தீவிரமான முறையில் மாற்றியமைக் கும் எண்ணத்துடன் பல்வேறு மறைமுகக் காரணங்களைக் காட்டி அரசாங்கத்தினால் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. இவைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இந்திய-இலங்கை உடன்படிக்கையில் உள்ள ஏற்பாடுகள் பூஜ்ஜிய மாக்கப்பட்டுவிடும்.
இவை தொடர்பில் மாண்புமிகு பிரதமராகிய தங்களுடைய கவனத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் தீவிர கவலைக்குரிய விடயங்களடக்கிய பட்டியலொன்றை நாம் இங்கு இணைத்துள்ளோம்.
அந்த வகையில், பதின்மூன்றாம் சட்டத் திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்; 1987-ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் சகல தரப்புகளாலும் தெளிவாக மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்துதல் ஆகியவைகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தை தாங்கள் வலியுறுத்த வேண்டும்''‘என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் கடந்த 35 ஆண்டுகளில் இந்திய-இலங்கைக்குமான உறவுகளில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள், உடன்படிக்கைகள், உறுதிமொழிகள் என பலவற்றையும் தெரிவித் திருக்கிறார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள்.
பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரிடம் பேசியபோது, ராஜீவ்காந்தி மரணத்திற்கு பிறகு இலங்கையின் தமிழினச் சிக்கல்களில் இந்தியா பெரிதாக கவனம் செலுத்தவில்லை. தங்களின் வெளியுறவு கொள்கைகளின் அடிப்படையிலேயே இலங்கையை கையாண்டு வருகிறது. அதனால்தான் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச அளவில் குரல் எழுந்த போதும், அதில் அக்கறை காட்டவில்லை. இலங்கை தமிழ் மக்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தினாலும் அது தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே!
இப்படிப்பட்ட சூழலில்தான், சீனாவின் கடன் பொறியில் இருந்து இலங்கையை மீட்க முடியாமல் திணரும் ராஜபக்சேக்கள் மீது சிங்கள பேரினவாதத் தலைவர்கள் கடும் கோபமடைந்து வருகிறார்கள். சிங்கள பௌத்தர்களின் நம்பிக்கையை ராஜபக்சேக்கள் இழந்து வருவதும் தெரிகிறது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சூழல்களும் உருவாகின்றன. இதிலிருந்து தப்பிக்கத்தான் பல்வேறு நாடுகளிடம் கடன் கேட்டு கையேந்தும் ராஜபக்சேக்கள், இந்தியாவிடமும் கையேந்தியுள்ளனர்.
இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம் பெருகி வருவது இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், சீனாவின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக இலங்கைக்கு கடன் உதவி செய்ய இந்தியா முன் வரக் கூடும். அப்படி முன் வந்தால் சில விசயங் களை இந்தியா சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கடிதம் எழுதப்பட்டது.
அதாவது, இலங்கைக்கு கடன் உதவி செய்வதாக இருந்தால் இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு ஒப்பந்தங்களை நிறைவேற்ற இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு ராஜபக்சேக்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே கடன் கொடுக்க இந்தியா முன்வர வேண்டும் என்பதுதான் கடிதத் தின் சாராம்சம்''’ என்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
ராஜபக்சேக்களால் இலங்கைக்கு ஏற்பட்டி ருக்கும் பொருளாதார நெருக்கடி களைப் பயன்படுத்தி, தங்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வைக் காண இந்திய மோடி அரசு முயற்சிக்குமா? என்பதே ஈழத்தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.