கச்சத்தீவை கைப்பற்றியது போல தமிழக கடல் எல்லையைக் கைப்பற்றத் துடிக்கிறது இலங்கை அரசு. இதனால் பல ஆபத்துகளை தமிழகமும் இந்தியாவும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறார்கள் புவிசார் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.
தமிழகத்தின் கடல் எல்லையின் (குமரிக் கண்டம்) பெரும்பகுதியை தனது சொத்தாக உரிமை கோரும் சதித்திட்டத்தில் இறங்கியுள்ள இலங்கை, அது குறித்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐ.நா.சபையில் முறையிட்டுள்ளது. சர்வதேச விதிமுறைகளின்படி கடல்சார்ந்த அரசுகள், தன் நிலத்திலிருந்து 12 கடல் மைல் (நாட்டிகல்) (சுமார் 22 கிலோ மீட்டர்) தொலைவை தங்களது கடல் எல்லையென வரையறுக்கலாம்.
அதேசமயம், 12 நாட்டிகல் மைல் தொலைவைத் தாண்டி 200 நாட்டிகல்மைல் (370 கிலோ மீட்டர்) தூரத்தை பொருளாதார எல்லையாக உரிமை கொண்டாட முடியும். அந்த வகையில் தற்போது, தனது பொருளாதார கடல் எல்லையை 350 நாட்டிக்கல் மைல் (648 கிலோ மீட்டர்) தொலைவிற்கு அதிகமான கடற்பரப்பினை தன் கட்டுப்பாட்டில் எடுக்க உரிமை கோருகிறது இலங்கை அரசு. இதன் பெரும்பகுதிகள் தமிழக கடல் எல்லையை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசும் சுவீடன் நாட்டின் சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் விஜய் அசோகன், ""தமிழக கட்டுப்பாட்டில் இருக்கும் கடல் எல்லைப் பரப்புகளை உரிமைகோரி, கடந்த 2009 மே மாதம், ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையத்திடம் கனமான ஒரு வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது இலங்கை அரசு. இப்படி ஒரு வரைவு அறிக்கை தயார் செய்ய 2003-லேயே மிகச்சிறந்த வல்லுநர் குழுவை அமைத்திருந்தனர். இந்திய அரசுக்கு இது தெரிந்திருந்தும் அதனை எதிர்க்கவில்லை.
தொடர்ந்து 6 வருடங்கள் பல்வேறு திருத்தங்கள் செய்து இறுதியாக தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை 2009 மே மாதம் 13-ந்தேதி கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஈழத்தில் இன அழிப்பினை செய்துகொண்டே தமிழக கடல் எல்லையை ஆக்கிரமிக்கும் இந்த வேலையையும் செய்தே வந்தது இலங்கை அரசு. இவையெல்லாம் தெரிந்தும் இதன் எதிர்கால ஆபத்துகளைப் பற்றி உணரவே இல்லை இந்தியா. ஆனால், மாலத்தீவும் பங்களாதேஷும் அடுத்தடுத்து எதிர்த்தன. எதிர்ப்புக்கான காரணங்களை சில ஆவணங்கள் மூலம் தெளிவுபடுத்தின அந்த நாடுகள்.
இதனால் தனது கருத்தைப் பதிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளான இந்தியா, "இரு நாட்டிற்கும் பொதுவான கடற்பரப்பு என்பதால் இருவருக்குமான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுக்க வேண்டும்' என்கிற அளவில் இலங்கைக்கு வலிக்காமல் தனது கருத்தை 2012-ல் பதிவு செய்தது.
இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் சிங்கள அரசின் வரைவு அறிக்கை மீது விவாதங்களை நடத்திய கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையம், இறுதி முடிவெடுப்பதற்காக இந்த வருடம் ஜூலையில் (2018) கூடியது. அந்த கூட்டத்தில் இலங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக விரிவாக விவாதித்து முடிவெடுத்திருப்பதாகவே தகவல்கள் வருகின்றன. விரைவில் கூட விருக்கும் அடுத்த அமர்வில் தனது முடிவினை அறிவிக்கவிருக்கிறது எல்லை வரையறை ஆணையம்.
இலங்கையின் விருப்பத்துக்கேற்ப இந்திய கடற்பரப்பான தமிழக கடல் எல்லை தாரை வார்க்கப்பட்டால் மிகப்பெரிய ஆபத்துகளை இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால் தமிழகம் சந்திக்கும் பாதிப்புகளை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல தமிழக கடல் உரிமையை சிங்கள தேசம் ஆக்கிரமித்தால்…கச்சத்தீவு பாதிப்பைவிட பலமடங்கு பாதிப்புகள் ஏற்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் சிங்கள தேசமான இலங்கைக்கு தாரை வார்க்கப்படவிருக்கும் முடிவுக்கு இந்தியாவும் தமிழகமும் இதுவரை எந்த எதிர்வினையும் காட்டவில்லை என்பதுதான் துயரம்'' என்கிறார் மிக அழுத்தமாக.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ’""தமிழக கடற்பரப்பினை ஆக்கிரமிக்க இலங்கையின் வரைவு அறிக்கை தயாரிப்புக்கு இந்தியாவும், அமெரிக்கா, ரஷ்யா, நெதர்லாந்து, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் பல வகையிலும் உதவி புரிந்திருக்கின்றன. இதில், சமாதான தூதராக செயல்பட்ட நார்வே அரசு, பொருளாதார ரீதியாகவும் பல உதவிகளை இலங்கை அரசுக்கு செய்தே வந்துள்ளது. அதாவது, இலங்கையின் இந்த திட்டத்திற்காக 2012 வரையில் நமது இந்திய மதிப்பில் 35 கோடியே 75 லட்ச ரூபாய் (43.6 மில்லியன் குரோனர்) நிதி உதவி செய்திருக்கிறது நார்வே அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நார்வே அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையகம்'' என்கிறார் ஆராய்ச்சியாளரான விஜய் அசோகன்.
தமிழக கடற்பரப்பினை கையகப்படுத்த இலங்கைக்கு இத்தனை நாடுகள் உதவி செய்து வருவதன் பின்னணிகள் குறித்து ஆராய்ந்தபோது, ""இந்தியப் பெருங்கடலின் கண்டப்படுகையில் புதைந்து கிடக்கும் எண்ணெய் வளம், வாயுக்கள் வளம், மீன் வளம் உள்ளிட்ட பொருளாதாரம், சர்வதேச நாடுகளின் கடற்போக்குவரத்து பொருளாதாரம் ஆகியவற்றை கைப்பற்ற துடிக்கின்றன மேற்குலக நாடுகள். விடுதலைப்புலிகள் இயக்கம் வலுவுடன் இருந்தவரை இது சாத்தியப்படவில்லை. சமாதான பேச்சுவார்த்தை காலங்களில் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் எண்ணெய் வளத்தினை ஆய்வு செய்யும் பணிகளை செய்தது நார்வே. வேதாந்தா நிறுவனத்தின் கெய்ல் இந்தியாவும் இதில் ஈடுபட்டது.
இலங்கை பெட்ரோலியத்துறையின் மதிப்பீட்டின்படி, தமிழக கடற்கரைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையிலான மன்னார் படுகையில் மட்டுமே இலங்கைக்கு அடுத்த 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கள் புதைந்திருப்பதாக தெரிவிக்கிறது. அதேபோல, தமிழகத்திற்கும் யாழ்குடா பகுதிக்கும் இடையிலான படுகையிலும் எண்ணெய் வளம் மிகுந்திருப்பதாக இலங்கை அரசு ஆய்வுகளை செய்து முடித்திருக்கிறது. இந்த நிலையில், இந்த வருடம் யாழ் முதல் மட்டக்களப்பு வரையிலான தமிழர் கடற்பரப்பினை எண்ணெய் வளத்தைச் சுரண்டும் பொறுப்பை அமெரிக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதுபோல பல பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன மேற்குலக நாடுகள்.
இப்படிப்பட்ட சூழலில், இந்திய கடற்பரப்பின் தமிழக கடல் எல்லைகள் இலங்கை அரசின் பிடிக்குள் இருந்தால்தான் நம்முடைய எண்ணெய் வளத்தினை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க முடியும் என திட்டமிட்டே இலங்கையின் கடல் எல்லையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் தர முடிவெடுத்துள்ளது ஐக்கிய நாடுகளின் சபை'' என்கின்றனர் தெற்காசிய பூகோள அரசியல் ஆய்வாளர்கள்.
எண்ணெய்வளச் சுரண்டலுக்கும் அப்பாற்பட்டு இந்திய -அமெரிக்க-ஜப்பான் நாடுகள் இணைந்த கடற்பயிற்சி, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் உள்ளடக்கிய கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என பலவற்றை தற்போது இந்த நாடுகள் வரையறுத்து வருகின்றன. இதனடிப்படையில்தான் அண்மையில் அர்ஜெண்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய -அமெரிக்க -ஜப்பான் நாடுகள் இணைந்த புரிந்துணர்வு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு குறித்தும், இந்திய-ரஷ்ய-சீன நாடுகளின் பொருளாதார ஒப்பந்தங்கள் பற்றியும் விரிவாக விவாதித்திருக்கின்றன.
இந்த நிலையில், இலங்கையை மையப்படுத்தி இந்திய -அமெரிக்க -ஜப்பான் நாடுகள் ராணுவ மையங்களை உருவாக்க திட்டமிடுவதையும், எண்ணெய் வளம் உள்ளிட்ட பொருளாதார முன்னெடுப்புகளில் மேற்குலக நாடுகள் முனைப்புக் காட்டுவதையும் தமிழர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நெருக்கடியை இலங்கை அரசு கைப்பற்றத் துடிக்கும் கடற்பரப்பு திட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
இது நிறைவேறினால், சர்வதேச நாடுகளின் வேட்டைக்காடாக தமிழக கடற்பிரதேசம் மாறும் அபாயம் இருக்கிறது.
-இரா.இளையசெல்வன்