இந்தியாவில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொருளாதாரச்சரிவு தொடர்கதையாக இருக்கிறது. இந்தியாவைப்போலவே இலங்கையும், உள்நாட்டு அரசியல் குழப்பம், ராஜபக்ஷே குடும்பத்தின் அரசியல், சுனாமி, புயல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதில் அதன் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிப்பைச் சந்தித்தது.
இந்திய ஒன்றிய அரசு, பொருளாதாரச் சரிவைச் சரிசெய்வதற்காக, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வது, ரிசர்வ் வங்கியின் உபரி வருமானத்தைக் கையகப்படுத்துவது, பொதுமக்களுக்கு அதிக வரிச்சுமையை ஏற்படுத்தி அரசின் வருமானத்தைப் பெருக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இலங்கை அரசோ, இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் நிதியுதவி பெறுவது, அதற்கேற்ப அந்தந்த நாடுகளுக்கு ஏதேனும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இதன்மூலம் தான் தற்போது சீனா, இலங்கையிலுள்ள துறை முகங்களை மொத்த குத்தகைக்கு எடுத்து, தனக்கான சுயாட்சியை அங்கே நிலைநாட்டிவருகிறது.
இப்படி ஏற்கனவே மற்ற நாடுகளைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள இலங்கைக்கு, கொரோனா லாக்டௌன் பலத்த அடியைக் கொடுத்துள்ளது. பெரும்பாலும், இறக்கு மதியைச் சார்ந்தே இங்குள்ள உணவுப்பொருட் களின் விலை நிர்ணயிக்கப்படும். வெங்காயம், சர்க்கரை உள்ளிட்டவை இந்தியாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படும் சூழலில், இந்தியாவில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும்போதெல்லாம் இலங்கையில் வெங்காயத் தின் விலை எகிறத்தொடங்கும். கடந்த 2019-ம் ஆண்டில் இப்படியான தட்டுப்பாட்டை இந்தியா சந்தித்தபோது, இலங்கையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 300 இலங்கை ரூபாய்க்கும், சின்ன வெங்காயத்தின் விலை 700 இலங்கை ரூபாய்க்கும் விற்கப்பட்டது உண்டு.
இலங்கையின் பொருளாதார நிலை மிகப் பெரிய தள்ளாட்டத்தைச் சந்தித்துவருகிறது. இலங்கையின் வருமானத்தில், சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனாவால் விமானப் போக்குவரத்தைத் தடை செய்ததில், சுற்றுலாத் துறை வருமானம் பெருத்த அடிவாங்கியது. அந்நியச் செலவாணி இருப்பு வெகுவாகக் குறைந்த தால் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.5% அளவுக்கு சரிவடைந்தது. இதன் காரணமாக இலங்கையின் டாலர் கையிருப்பு குறைந்துள்ளதால், உணவுப்பொருட்களை இறக்கு மதி செய்வதற்கு வழியில்லாமல் முழி பிதுங்கிக் கிடக்கிறது. இதன் எதிரொலியாக, தற்போது அங்குள்ள உணவுப்பொருட்கள் பலவற்றின் விலை, எளிய மனிதர்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறியுள்ளது.
பொதுமக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் மஞ்சள் ஒரு கிலோ விலை 7,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பாக, இந்திய மதிப்பில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை யின் விலை, தற்போது 240 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு விலை 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு பொருளின் விலையையும் கேட்டால் மயக்கமே வரக்கூடும். இதனால் இலங்கையி லுள்ள நடுத்தர, அடித் தட்டு மக்கள், சமையல் செய்யவே முடியாத சூழல் நிலவுகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைவு, இறக்குமதிக்குத் தடை ஆகிய காரணங்களோடு, உற்பத்தியாளர்கள் உணவுப்பொருட்களைப் பதுக்குவதும் இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணமென்று தெரியவந்தது. குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், அடுப்பெரிக்கத் தேவைப்படும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கும் மிகப்பெரிய அளவிலான தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகளைப் பதுக்கிவைப்பதைத் தடுப்ப தற்காக இலங்கையில் பொருளாதார அவசர நிலைச் சட்டத்தை அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷே அறிவித்துள்ளார். உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டைச் சரிசெய்வதற்கு, அத்தியா வசிய உணவுப்பொருட்களை அரசாங்க அதிகாரிகள் கையகப்படுத்தி, பொதுமக்களுக்கு சலுகை விலையில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ராணுவ முன்னாள் தளபதி ஒருவரை அத்தியா வசிய சேவைகள் ஆணையராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள் பதுக்கும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்யவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, நெல் போன்ற உணவுப்பொருட்களை கொள் முதல் செய்து, மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக, அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரை, தமிழீழ விடுதலை இயக்கங்களுடனான நீண்டகாலப் போர், அதன் பொருளாதார வளர்ச்சியில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. போர் முடி வுற்ற பின்னும்கூட, ராஜபக்ஷே குடும்பத்தின் கைகளுக்கு இலங் கையின் அதிகாரம் சென்ற நிலையில், இலங்கையை நன்கு கட்டமைத்து எழுப்பவும், உள் நாட்டு உற்பத்தியை, வருமானத் தைப் பெருக்கவும் எவ்விதத் தொலைநோக்குத் திட்டங்களும் தீட்டப்படவில்லை. அதன் பல னாகத் தற்போது கொரோனா வின் பலத்த அடியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இன்றைய நிலை, அதன் அண்டை நாடுகளுக்குப் பாடம்!