மிழகத்தையே மீண்டும் அதிரவைத்திருக்கிறது தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் இரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிகளின் கொடூர மரணம். காரணம், கெட்டுப்போன இரத்தம் என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் பரவிக்கொண்டிருந்தாலும்… வேறொரு காரணத்தையும் சொல்லி பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் நக்கீரனைத் தொடர்புகொண்ட அரசு மருத்துவர். இதுகுறித்து, நாம் தோண்ட ஆரம்பித்தபோதுதான் தமிழக அரசின் மாபெரும் மருத்துவ ஊழல் அம்பலமாகியிருக்கிறது.

bl

டோனர்கள் எனப்படும் இரத்தக்கொடையாளிகளிடம் தானமாக பெறப்பட்ட இரத்தமானது வழக்கமான பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் எந்த வகையை (Blood Group) சேர்ந்த இரத்தம் என்பதை பரிசோதித்த பிறகுதான் நோயாளிகளுக்கு ஏற்றப்படும். ரீயேஜண்ட் எனப்படும் ப்ளட் குரூப்பிங் "கிட்'ஐ பயன்படுத்திதான் என்ன ப்ளட் குரூப் என்பதை கண்டறிவார்கள். அப்படிக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ப்ளட் குரூப்பிங் "கிட்'டானது சரியாக காண்பிக்கவில்லை என்றால் "ஏ’ ப்ளட் குரூப்' என்பதற்குப் பதில் "ஓ’ ப்ளட் குரூப்' என்று தவறாக குறிப்பிட்டுவிடுவார்கள் லேப் டெக்னீஷியன்கள். இப்படித் தவறாகக் குறிப்பிடப்பட்ட இரத்தத்தை "ஓ’ ப்ளட் குரூப்' நோயாளிக்கு ஏற்றிவிட்டால் நிச்சயம் மரணம்தான் ஏற்படும். மேலும், பாசிடிவ் வகை இரத்தத்தை நெகட்டிவ் நோயாளிகளுக்கு ஏற்றிவிட்டாலும் பொருந்தாமல் போனால் (Mismatch) மரணம்தான். தரமற்ற இரத்தப்பரிசோதனை "கிட்'டால் கர்ப்பிணிகள் பரிதாபமாக இறந்திருப்பார்களோ என்ற அதிர்ச்சிக் குற்றச்சாட்டை வீசிய அரசு மருத்துவர்... மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையே எச்சரிக்கை கொடுத்த ஆவணங்களைக் காண்பித்து பகீரிட வைக்கிறார்.

தமிழக அரசு மருத்துவமனைகளிலுள்ள இரத்தவங்கிகளில் தானமாக பெறப்படும் இரத்தங்களின் ப்ளட் குரூப்பை பரிசோதிக்க சென்னையைச்சேர்ந்த மெடிக்ளோன் பயோடெக் என்கிற தனியார் நிறுவனத்தின் "கிட்'தான் கடந்த 4 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில, வருடங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜலகோன் பகுதியைச் சேர்ந்த மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியால் கைப்பற்றப்பட்ட மெடிக்ளோன்-டி என்ற "கிட்' மத்திய அரசின் என்.ஐ.பி (National Institute of Biologicals)எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோலாஜிகல் ஆய்வகத்தின் பரிசோதனையில் தரமற்றது என நிரூபிக்கப்பட்டது. அதைத்தான் இன்றுவரை பயன்படுத்துகிறார்கள்.

Advertisment

அரசு மருத்துவமனைகளுக்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பொருட்களை வாங்கி சப்ளை செய்யக்கூடிய "டி.என்.எம்.எஸ்.சி.' எனப்படும் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் சேவைக் கழகம்தான் "மெடிக்ளோன் பயோடெக்' நிறுவனத்திற்கும் இந்த "கிட்'டுக்கான டெண்டரை விட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவப்பொருட்கள் சப்ளை செய்ய பெரும்பாலும் இந்நிறுவனத்துக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இரத்தப் பரிசோதனை "கிட்'டானது 2014-ஆம் ஆண்டிலிருந்து 2018 வரை 4 வருடங்களாக டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

d

2017 செப்டம்பர்-15 மத்திய அரசு மெடிக்ளோன் பயோடெக் குறித்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதால் 2018 வருடத்துக்கான டெண்டரை பெங்களூரிலுள்ள ‘பட் பயோடெக் இந்தியா’ என்கிற நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.

Advertisment

இந்த பட் பயோடெக்தான் 2017-இல் உத்திரபிரதேசத்தில் நடந்த இரத்ததான முகாமில் 800-க்கு மேற்பட்டவர்களின் இரத்தவகையை ஆண்டிசீரா ஏபிடீ "கிட்'-ஐ வைத்து பரிசோதித்தபோது... அனைத்தும் நெகட்டிவ் வகை ப்ளட் குரூப் என்று காண்பித்ததால் சந்தேகப்பட்டு ஆய்வு செய்தபோது, பயோடெக் மற்றும் பட் பயோடெக் நிறுவனங்களின் "கிட்'கள்’இரத்தவகையை சரியாக காண்பிக்காது என்று மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு(Central Drugs Standard Control Organization) ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. அதனடிப்படையில் இந்த "கிட்'கள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அலர்ட் கொடுக்கப்பட்டது.

பல்வேறு, காரணங்களால் பட் பயோடெக் நிறுவனத்தின் மேலும் சில கிட் உத்திரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், தமிழ்நாடு மருத்துவசேவைக் கழகத்தின் 2018 (Tender Ref.No.013/M(P)/DRUG/TNMSC/2018, Dated.31.10.2018) டெண்டரில் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மெடிக்ளோன் பயோடெக், கர்நாடக மாநில பெங்களூருவைச் சேர்ந்த பட் பயோடெக் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. காரணம், "கமிஷன்'தான்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மெடிக்ளோன் பயோடெக் நிறுவனத்தை விட்டுவிட்டு பெங்களூருவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பட் பயோடெக் இந்தியாவுக்கு 2018 டெண்டரில் ஓ.கே. செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இரத்தவகை பரிசோதனை "கிட்'டுக்கு அனுமதி கொடுத்த தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸிடம் நாம் கேட்டபோது, ""இதுகுறித்த தகவல்களை என் கவனத்துக்கு கொண்டுவந்ததற்கு நன்றி. ஆனால், கெட்டுப்போன இரத்தத்தால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு என்றுதான் ரிப்போர்ட் ஆகியிருக்கிறதே தவிர ப்ளட் குரூப் மாற்றி ஏற்றப்பட்டதாக தகவல் இல்லை. அதேபோல், மெடிக்ளோன் பயோடெக் தரமற்றது என்பதும் பட் பயோடெக் என்பது ஸ்பூரியஸ் (spurious) என்பதும் என்ன காரணத்துக்காக என்பதை மத்திய அரசின் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை தெளிவாக குறிப்பிடவில்லை. மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் எச்சரிக்கை நோட்டீஸில் உள்ள இரண்டு கம்பெனிகளின் பேட்ச்சும் தமிழகத்தில் சப்ளை செய்யப்பட்ட "கிட்'கள் அல்ல. மேலும், மூன்று பேட்ச் "கிட்'கள் ஆய்வக பரிசோதனையில் ஃபெய்லியர் ஆனால்தான் ப்ளாக் லிஸ்டில் வைப்பார்கள். பட் பயோடெக் போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கிக்கொண்டு டெண்டரில் கலந்துகொண்டிருக்கின்றன. இதுவரை, கடந்த மூன்று வருடங்களுக்குமேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த மெடிக்ளோன் பயோடெக் நிறுவனத்தின் கிட் ஐ வைத்துதான் பரிசோதித்து பலருக்கும் இரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. இதுவரை, இந்த கிட்டால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை'' என்றார் விளக்கமாக.

b

இதுகுறித்து, நம்மிடம் பேசிய மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர், ""உயிரோடு விளையாடக்கூடிய விஷயத்தில் ஒருமுறை ஃபெயிலியர் என்றாலே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதேபோல், டெண்டர் கொடுப்பதற்கு முறையான ஆடிட்டிங் செய்திருக்கவேண்டும். புகார் இருக்கிறது என்பதை நக்கீரன் கொடுத்த ஆவணங்களைப் பார்த்துதான் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் ஒரு சாதாரண மலேரியா நோயை கண்டுபிடிக்கும் "கிட்' சரியில்லை என்பதால் "பட் பயோடெக்' நிறுவனத்தின் சப்ளையையே மொத்தமாக தடை செய்திருக்கிறது ஆனால், இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தும் மெடிக்ளோன் பயோடெக் மற்றும் பட் பயோடெக் இந்தியா நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதேன்? வாங்கிய உபகரணங்கள் தரமானதா என்ற முறையான ஆடிட்டிங் செய்யப்பட்டதா என்றால் கேள்விக்குறிதான். தனது "கிட்'டானது தரமானதுதான் என்று நிரூபித்து மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இரண்டு சர்ச்சைக்குரிய நிறுவனங்களும் தடையில்லா சான்றிதழும் பெறவில்லை''’என்று குற்றஞ்சாட்டுகிறார்.

கர்ப்பிணிகள் மரணம் குறித்து, தர்மபுரி மருத்துவக்கல்லூரி டீன் சீனிவாசனிடம் நாம் கேட்டபோது, ""இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையிலான டீம் விசாரணை செய்தபிறகுதான் உண்மை தெரியும்''’என்றார்.

மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் நாம் கேட்டபோது, ""கெட்டுப்போன இரத்தத்தால் உயிரிழந்ததாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நீங்கள் சொல்வதுபோல் இரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்''’என்றார் மக்கள் நலனின் அக்கறையோடு.

குற்றச்சாட்டுக்குள்ளான சென்னையைச் சேர்ந்த மெடிக்ளோன் பயோடெக் நிறுவனத்தின் எம்.டி. மதியழகனிடம் கேட்டபோது... ""தொழில் போட்டியால் மகாராஷ்டிராவிலிருந்து எடுத்துச் சென்ற "கிட்' தரமற்றது என்று ரிசல்ட் வர வைத்துவிட்டார்கள். பிறகு, அதே பேட்ச்சை எடுத்துச் சென்று என்.ஐ.பி. லேப் பரிசோதித்து, எங்களது "கிட்' தரமானதுதான் என்று ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. எங்களுடைய தயாரிப்புகள் தரமானவைதான்'' என்றார் அவர் தரப்பு விளக்கமாக.

"பட் பயோடெக்' நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பவன்குமார் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் முரளி ஆகியோரிடம் விளக்கம் கேட்டபோது... திரும்ப லைனில் வருகிறோம் என்றவர்கள் லைனில் வரவில்லை.

ஒரு "கிட்' வாங்கியதிலேயே இவ்வளவு சர்ச்சைகள் இருக்கும்போது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் வாங்கப்பட்ட ஒவ்வொரு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தன்மையும் தரமும் ஆராயப்பட வேண்டும். அதற்கான, சோதனையை நடத்தினாலே உயிர்குடிக்கும் மருத்துவ ஊழகள் வெளிவந்துவிடும். அப்போது, கர்ப்பிணிகளின் மரணத்துக்கான உண்மைக் காரணமும் தெரிய ஆரம்பித்துவிடும்.

-மனோசௌந்தர்