தமிழ்நாடு அரசுக்கு குடைச்சல் கொடுக்கவேண்டுமென்ற நோக்கில் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு, இறுதியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், ஆளுநருக்குமான மோதலாக மாறியது. ஆளுநர் தரப்புக்கு பதிலடி கொடுப்பதற்காக, ஆளுநர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தவிர்த்துவந்தார். இப்படியான முட்டல் மோதல்களுக்கிடையே தற்போது நடந்த மந்திரிசபை மாற்றத் தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு பொன் முடியிடமிருந்து கோ.வி.செழி யனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பொறுப்பினை ஏற்றதுமே, "புகழ்பெற்ற துறையாக விளங்கிய உயர்கல்வித் துறையை இன்னும் மேம்படுத்த, இன்னும் பிரகாசமாக அனைவருக்கும் பயன்படும் வகையில், புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை உயர் கல்வித்துறை அமைச்சராக நியமித்துள்ள தமிழக முதல் வருக்கு எனது நன்றிகள்'' எனத் தெரி வித்துள்ளார் கோ.வி.செழியன். உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் செய்து முடிக்கவேண்டிய நீண்டகாலப் பிரச்சனைகளே இத்துறையில் எக்கச்சக்கமாக வரிசைகட்டி நிற்கின்றன.
முதலாவதாக, பணி வரன்முறைப்படுத்தப் போராடும் கவுரவ விரிவுரையாளர்களின் பிரச்சனை, 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 7314 கவுரவ விரிவுரையாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்கள்.
2001 - 2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அதிக பட்சமாக 4,000 ரூபாய்வரை தொகுப்பூதிய மாக வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு, பி.எஃப். இ.எஸ்.ஐ., மருத்துவ விடுப்பு உள்ளிட்ட வேறெந்த சலுகைகளும் இவர்களுக்கு கிடையாது. பணிக்காலத்தில் இறந்த கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப் படவில்லை. இவர்களின் தொகுப் பூதியம் மட்டும் அடுத்தடுத்த ஆட்சிகளில் அதிகரிக்கப்பட்டு தற்போது 25,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறதே ஒழிய, இவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை கிடப்பில் போடப் பட்டதாகவே இருக்கிறது. கலைஞரின் ஆட்சிக்காலத்தில், யு.ஜி.சி. விதிகளின்படி கல்வித் தகுதியுடையவர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்வோமென உறுதியளிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கடைசிக்கட்டத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வதாக அறிவித்தார். தேர்தல் வரவும் அந்த செயல்பாடு முடங்கியது.
அடுத்துவந்த மு.க.ஸ்டாலின் தலைமையி லான தி.மு.க. ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடத்திய பேச்சுவார்த் தைக்குப்பின், கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரத்துக்கான வாய்ப்பைப்பெற, வெயிட் டேஜ் மதிப்பெண் முறையையும், அரசாணை 56-ஐ ரத்து செய்து, புதிதாக போட்டித்தேர்வு முறையைக் கொண்டுவந்தார். இதிலும் குழப் பங்கள் ஏற்பட்டன. கவுரவ விரிவுரையாளர்கள் தரப்பில் நீதிமன்றத்திற்கு சென்றனர். தற்போது வரை, சக விரிவுரையாளர்கள் லட்சங்களில் சம்பளம் பெறும் நிலையில், அதே பணிக்கு வெறும் 25,000 ரூபாய் ஊதியத்தில், வேறெந்த சலுகைகளும் இல்லாமல் பல்லாண்டுகளாகப் பணியாற்றிவரும் அவலம் தொடர்கிறது. இவர் களை, கல்லூரிகளின் உதவிப்பேராசிரியர்களாக நியமிப்பதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், கவுரவ விரிவுரையாளர்களாகவே தொடர்கிறார்கள்.
இவ்விவகாரத்தில் ஏற்கெனவே உயர் நீதிமன்றமே, "கல்லூரி மாணவர்களுக்கு பயிற்று விக்கும் அளவுக்கு கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை, மிகக்குறைந்த ஊதியத்தில் தமிழக அரசு பணியமர்த்தியுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களும் வேறுவழியின்றி கிடைக்கும் ஊதியத்தை ஏற்றுக்கொண்டு பணி செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.' எனக் குறிப் பிட்டதோடு, "பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு அடிப்படை ஊதியமான 57,500 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும்' என்றும் பரிந்துரைத்தது. நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங் களில் இம்முறையை செயல்படுத்துகிறார்கள். எனவே இவ்விவகாரத் தில் உரிய தீர்வு காணவேண்டிய கடமை, அமைச்சர் கோ.வி.செழியனுக்கு இருக்கிறது.
அதேபோல், தமிழகமெங்கும் சுமார் 7000ற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற் போது 4000 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுக்கு அறிவிப்பாணை வெளி யிடப்பட்டு, அவற்றுக்கு சுமார் 73,255 பட்ட தாரிகள் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே கவுரவ விரிவுரையாளர்கள் போதிய அனுபவத் தோடு காத்திருக்கையில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட் டன. இவ்வகையில் 41 கல்லூரிகள் மாற்றப்பட்ட தில், அக்கல்லூரிகளில் பணியாற்றும் பேரா சிரியர்களின் சம்பள விகிதங்களிலும் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், தங்களை மீண்டும் உறுப்புக் கல்லூரிகளாக மாற்றும்படி கோரிக்கை வைத்துவருகிறார்கள். மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து அரசு கல்லூரிகளுக்கு வந்த ஒப்பந்தப் பணியாளர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அடுத்ததாக, கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் பதவிக்கு இதுவரை கல்லூரி முதல்வர்களே இருந்து வந்த நிலை யில், தற்போதைய தி.மு.க. அரசில், அப்பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான பல்வேறு சிக்கல்களுக்கிடையே ஆளுநரையும் சேர்த்து சமாளித்து, உயர்கல்வித்துறையை, புதிய அமைச்சர் செம்மைப் படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது!