கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை விஷம்போல் ஏற, அவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு அதைவிட ஏறுகிறது. தமிழகத்தில் இருக்கிற ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிப்புகள் வேகமெடுக்கின்றன. "தனியார் நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆக்சிஜன் தயாரிக்கிற புதிய பிளாண்ட்கள் அமைக்குமேயானால் அரசின் உதவியும் மானியமும் கிடைக்கும்'' என்று ஊக்கப்படுத்தி யிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

புதிய பிளாண்ட்கள் அமைப்பதற்கு காலநேரம் பிடிக்கலாம். கையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என அடைக்கப்பட்ட அந்தப் ப்ளாண்ட்டை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது நக்கீரன்.

fac

தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை லிமிடெட், திருநெல்வேலி. 1958-களில் தென்மாவட்டமான நெல்லையின் அடையாளமே இந்த மில்தான். கடல் கடந்து கொழும்பு வரை பயணிக்குமளவுக்கு இந்த ஆலையில் நூலின் தரம் முதன்மையாக இருந்தது.

Advertisment

1950-களில் தமிழகத்தின் ஈரோடு, சென்னிமலை, திருப்பூர், சங்கரன்கோவில், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நெசவாளர்களைக் கொண்ட கூட்டுறவு சொசைட்டி கள், ஈரோடு நாச்சிமுத்து முதலியார் தலைமையில் செயல் பட்டுவந்தன. அவர் தலைமையிலான அனைத்து சங்கங்களின் ஷேர்களோடு அரசின் முதலீட்டையும் பெற்ற நாச்சிமுத்து முதலியார் திருநெல்வேலியை ஒட்டியுள்ள பேட்டையில் செயல் பட்டு வந்த தனியார் மில்லை வாங்கி, சொசைட்டிகளையும் அரசையும் பங்குதாரராக்கினார். கிட்டத்தட்ட 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட தென்னிந்திய கூட்டுறவு நூற் பாலை லிமிடெட் திருநெல்வேலி என பெயரிட்ட நூற்பு ஆலையை 1958-ன்போது முதல்வராகயிருந்த காமராஜர் திறந்துவைத்தார். அதையடுத்து மில்லின் ஆரோக்கியமான வளர்ச்சி காரணமாக, 1963-ல் அதனருகிலேயே “"பி'“மில் துவங்கப்பட்டது. "ஏ' மற்றும் "பி' இந்த இரண்டு நூற்பாலைகளிலும் 1,850 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இந்த மில் படியளந்தது.

பேட்டை நூற்பாலையின் நூலின் தரம் உயர, வெளிச்சந்தையில் அதன் தயாரிப்புகளுக்கு பெரிய டிமாண்ட். அதன் காரணத்தால் நாடுகடந்து அருகிலுள்ள கொழும்பு நகருக்கும் பயணப்பட்டது இதன் தயாரிப்பு. அதனாலேயே இங்கு சாயம் ஏற்றுவதற்கான 2 பெரிய பாய்லர் பிளாண்ட்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டன. 1990-வரை சீரோடும் சிறப்போடும் வளர்ச்சிநடை போட்ட இந்த மில்லின் நடை, 1991-க்குப் பிறகு தளர ஆரம்பித்தது.. 2004 மார்ச் 2-ஆம் தேதி, இரண்டாயிரம் குடும்பங்களுக்கு அன்னமிட்டு வந்த பேட்டை தென்னிந்திய மில், பெரும் நஷ்டத்தில் மூழ்கியதோடு அதன் கரங்கள் நிரந்தரமாக முடங்கியது.

2006 தேர்தலின்போது மூடப்பட்ட தென்னிந்திய நூற்பாலையைத் திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுவதாகத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கலைஞர் அறிவித்தார். ஆட்சியிலமர்ந்த கலைஞர் முதல் வேலையாக, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை அனுப்பிவைக்க, அவரும் ஆய்வு செய்து அதற்கான அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார்.

Advertisment

பூட்டப்பட்ட மில்லைத் திறப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது கலைஞர் ஆட்சி போய் ஜெ., ஆட்சி வர... நெல்லைத் தமிழர் களின் அடையாளமான தென்னிந்திய நூற் பாலைக்கு விடியல் பிறக்கவில்லை.

fct

அதன் இயந்திரங்கள் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டு உபகரணங்கள். "தென்னிந்திய மில்லை ஆக்சிஜன் தயாரிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று நெல்லை மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கும் சி.பி.ஐ.யின் நெல்லை மாவட்ட செயலாளரான காசிவிஸ்வநாதன் நம்மிடம்... "பெருகிவரும் கொரோனா தொற் றாளர்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதி கரித்து வருகிறது. தற்போது பல நிறுவனங்கள் ஆக்சிஜன் தயாரித்தாலும் தேவையோ தயாரிப்பைக் காட்டிலும் இரண்டுமடங் காகிறது. இனிவரும் காலங்களில் பாதிப்புகள், மற்றும் தேவையான ஆக்சிஜன் அளவுகளும் கணிக்கமுடியாத அளவுக்குப் போக வாய்ப் புள்ளது. பூட்டப்பட்ட அரசின் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையில் இரண்டு பெரிய பாய்லர் பிளாண்ட்கள் உள்ளன அதன் மூலம் ஆக்சிஜன் தயாரிக்கலாம். தவிர புதிய பாய்லர்களை அமைக்கவும் இட வசதிகள் விசாலமாகவே உள்ளன. அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அன்றாடம் கூடிக்கொண்டே போகும் கொரோனாத் தொற்றாளர்களால் அரசு மற்றும் தனியார் மருத்துமனைகள் நிரம்பிவழிகின்றன. அவர்களுக்குத் தேவையான படுக்கைகளும் கிடைப்பதில்லை.

அதனைச் சமாளிப்பதற்காக அரசு இந்த நூற்பாலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் அந்த மில் 50 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பரந்து விரிந்த பகுதி. ஏக்கர் கணக்கில் ஆலைகளின் உள்ளே காலி இடங்கள் உள்ளன.

பேட்டையின் தென்னிந்திய மில்லில் டெண்ட் படுக்கை களையும், ஆக்சிஜன் தயாரிப்புக்கும் உருவாக்கினால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி என தென்மாவட்டங்களின் தற்போதைய, வரும் நாட்களின் கொரோனா நெருக்கடிகளை ஓரளவுக்குச் சமாளிக்கலாம். படுக்கைகள் இல்லாமல் பரிதவிக் கிற நிலைமையுமிருக்காது. 400-க்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதோடு கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள மூடப்பட்ட மின்சாதனங்கள் தயாரிக்கிற எல்காட் நிறுவனத்தையும் ஆக்சிஜன் தயாரிப்பு பிற பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிறுவனங்கள் போக்குவரத்து வசதிகள் கொண்ட பகுதிகளிருக்கிறது''’ என்கிறார் அழுத்தமான குரலில்.

"கையில வெண்ணெய்ய வைச்சுக்கிட்டு வீணா நெய்க்கு அலையாதப்பா' எனும் தமிழனின் பாரம்பரிய நாட்டார் வழக்காற்றுச் சொலவடைதான் இது.