சென்னையில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஸ்டார் குணசேகரன் போட்டியிடும் விருகம்பாக்கம் தொகுதி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான விருகை ரவி, தி.மு.க.வில் வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா, அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வின் பார்த்தசாரதி, மக்கள் நீதி மய்யத்தில் கவிஞர் சினேகன், நாம் தமிழர் கட்சியில் ராஜேந்திரன் ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள்.
தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள கடும் பிரயத்தனம் செய்துவருகிறார் விருகை ரவி. தொகுதியில் யார் இறந்துபோனாலும் அவர்களின் உடலை பாதுகாக்க இலவச ஃப்ரீஸர் பாக்ஸ், இறுதி ஊர்வலத் திற்கு இலவச ரதயாத்திரை வாகனம் ஆகியவைகளை கொடுத்து உதவிய சேவையும், நல்லது கெட்டது எது நடந்தாலும் அவர்களின் வீட்டுக்கு சென்று பண உதவி செய்திருப்பதும் சாமானிய மக்களின் ஆதரவு விருகை ரவிக்கு கூடுதலாக இருக்கிறது. அதேசமயம், கட்சியிலுள்ள முக்கியஸ்தர் களையும் உழைப்பாளிகளையும் புறக்கணித்து வருவதும், தொகுதிகளில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துகளும் இவருக்கு எதிராக இருக்கின்றன.
விருகை ரவியை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் கவுன்சிலரான ஸ்டார் குணசேகரனுக்கு, தொகுதி மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் செல்வாக்கு பெருகியுள்ளது. உளவுத்துறையின் ரிப்போர்ட்படி சுமார் 40,000 வாக்குகளை விருகை ரவியிடமிருந்து பிரிக்கிறார் இவர்.
தி.மு.க.வில் புதிதாக களமிறக்கப்பட்டிருக்கும் இளைஞர் பிரபாகர் ராஜாவுக்கு தி.மு.க.வின் வாக்கு வங்கியும் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளும் பலமாக இருக்கின்றன. தொகுதியில் நாடார் சமூகம் கணிசமாக இருந்தாலும், சிக்கல்களைக் கடந்து அவர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதில் இருக்கிறது சூரியனின் வெற்றி. மீண்டும் சீட் கிடைக்காத கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கும் கே.கே.நகர் தனசேகரன், தேர்தல் பணிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதது, கடைசி நேரத்திலாவது மாறும் என எதிர்பார்ப்பு உள்ளது. "உள்குத்து விவகாரங்களை கட்சித் தலைமை சரி செய்ய வேண்டும்' என்கிற குரல்கள் தி.மு.க.வில் எதிரொலிக்கிறது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி சுயேட்சையாக களமிறங்கி, ""அண்ணாமலையானின் பக்தனான நான் மாதம் 3 முறை சிவனைப் பார்த்து திருவாசகம் படிப்பவன். எனக்கே இந்த மத அரசியல் பிடிக்கவில்லை. அதெல்லாம் நம்ம ஊரில் எடுபடாது'' என்கிறார் அதிரடியாக.
தே.மு.தி.க. பார்த்தசாரதி கொரோனா தொற்றினால் முடங்கிவிட்டதால் அக்கட்சியினர் தேமே என தொகுதிக்குள் வலம்வருகிறார்கள். தொகுதியை தக்கவைக்க அ.தி.மு.க.வும், கைப்பற்ற தி.மு.க.வும் கடைசிக்கட்ட வியூகங்களில் குதித்துள்ளன.