விப்பேரரசு, தன் முதல் தொகுப்பான "வைகறை மேகங்கள்'’மூலம் இலக்கிய உலகில் தடம் பதிக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல் "நிழல்கள்' படத்தின் "பொன்மலைப் பொழுது'’பாடல் மூலம், திரைப்பாட்டுப் பயணத்தை அவர் தொடங்கி 43 வருடங்கள் நகர்ந்திருக்கின்றன. தன் 69 வயதை ஜூலை 13-ல் கடந்திருக் கும் அவர், "சாகித்ய அகாடமி விருது, பத்மபூசன் விருது, ஏழு தேசிய விருதுகள்' என பல்வேறு விருதுகளைக் குவித்து, தமிழர் களை நிமிர வைத்துவருகிறார். அவரை நாம் சந்தித்தபோது...

vv

உங்கள் முதல் படைப்பான "வைகறை மேகங்கள்' நாட்களை நினைக்கும்போது எப்படி இருக்கிறது?

Advertisment

வைகறை மேகங்கள் -நினைக்கும்பொழுதெல்லாம் எனக்குப் பரவசம் வரும்; நெஞ்சில் ஒரு காதல் சுரக்கும். அது என்னுடைய 19 வயதுக் கனவு. 17 வயதிலிருந்து 19 வயது வரை எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. அது என் வயதுக்கு மீறியது. ஏனென்று கேட்டால் அதில் காதலிக்காத நான் காதலித்தது போலவும், அதில் ஒரு பெரிய அனுபவசாலி மாதிரியும் எழுதியிருப்பேன். அதற்குக் காரணம் சக கவிஞர்களின் தாக்கம். கண்ண தாசனுடைய பாதிப்பு என் கவிதைகளில் அப்போது அதிகம். "வாழ்ந்துவிட்டுச் சாகிறேன்'’என்ற ஒரு கவிதையில் கம்பனின் சந்தத்தை இழுத்துக்கொண்டு காதல் கவிதை புனைந்திருந்தேன் 19 வயதில். அதற்குக் கண்ண தாசன் அணிந்துரை கொடுத் திருந்தார். அது இன்னும் நினைவில் இருக்கிறது.

ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க, ஐந்து பாரத்திற்கு ஐந்து ரீம் என்பது கணக்கு. அந்த ஐந்து ரீம் தாள்களையும், ஒவ் வொரு ரீமாக பாரிமுனையில் ஒரு சந்தில் இருந்து என் தோளில் சுமந்து பிரதான சாலைக்குக் கொண்டுவந்து ரிக்ஷாவில் இறக்கினேன், அந்த தோள் வலி இன்னும் இருக்கிறது. ஆனால், அந்த ஆனந்தம் நெஞ்சில் நின்று நிலைக்கிறது.

தமிழாற்றுப்படை என்ற சிந்தனை உங்களுக்கு எப்படித் தோன்றியது?

Advertisment

தமிழாற்றுப்படை என்ற சிந்தனையைத் தூண்டியது தினமணி என்று சொல்லலாம். 125ஆவது பிறந்தநாள் வந்தது பாவேந்தர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு. பாரதிதாசனைப் பற்றி ஒரு முழுக் கட்டுரை வேண்டும் என்று தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் என்னைக் கேட்டார். நான் எழுதிக் கொடுத்தேன். அதில் எனக்கு நேர்ந்த அனுபவம் அலாதியானது. தலையங்கத்தைத் தவிர்த்து எனக்கு முழுப் பக்கத்தை யும் ஒதுக்கியிருந்தார். அந்த நடுப்பக்கக் கட்டுரைக்கு வேறு யாருக்கும் ஒதுக்காத வெளி அது. அதைப் படித்துவிட்டுத் தமிழ் உலகம் என்னை அழைத்துப் பாராட்டியபோது “அடடே தமிழ்க் கட்டுரைக்கு இவ்வளவு வீச்சும் வீரியமும் இருக்கிறதா?” தமிழ் உலகம் இதை இவ்வளவு கொண் டாடுவதற்குக் காத்திருக்கிறதா? என்று நான் நெகிழ்ந்து போனேன். அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து இன்னும் தமிழ் ஆளுமைகளைப் பற்றி எழுதினால் என்ன? என்ற சிந்தனை விளைந்தது. பாரதிதாசன் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு பேராசிரியர் சொன்னார், நாங்கள் 20, 30 புத்தகங்கள் பாரதிதாசனை பற்றிப் படித்திருந்தாலும் அந்த சாரத்தை இப்படி இறக்கி இருக்க முடியாது. 30 புத்தகங்களின் சாரத்தை ஒரு கட்டு ரையில் கொடுத்து இருக்கிறீர்கள் என்று அவர் சொன்னபோது, “எனக்குப் பளிச்சென்று மூளையில் ஒரு மின்னல் வெட்டியது” நிகழ் காலத் தமிழர்கள் படிப்பதற்குரிய வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். தேடிச் சென்று குறிப்பு எடுக்கக் கூடிய வசதியை இழந்திருக்கிறார்கள். வாழ்வு அவ்வளவு விரைவாக நகர் கிறது. எதிர்காலத் தமிழன் எல்லா நூல்களையும் தேடிப் படித்தால்தான், ஒரு மறைமலை அடிகளைப் பற்றி, உ.வே.சாவைப் பற்றி, தொல்காப்பிய ரைப் பற்றி, கபிலர் பற்றி, ஔவையாரைப் பற்றி, கலைஞர் பற்றி, கண்ணதாசன் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். அதை நான் ஏன் ஒரு தொண்டாகச் செய்யக் கூடாது. 30 நூல்களையும் நானே படித்து, அதன் சாரம் பிழிந்து தமிழர்களுக் குக் கொடுத்தால் அது ஒரு கொடை யல்லவா என்று கருதினேன். அந்தச் சிந்தனைதான் “தொல்காப்பியர் முதல் அப்துல் ரகுமான் வரை ஒரு பருந்துப் பார்வை, பரந்த பார்வை, பார்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. எனவே இன்று தினமணி என்னோடு முரண்பட்டு இருந்தாலும் தினமணிக்கு நன்றி சொல்கிறேன்.

vv

நாட்படு தேறல் என்ற சாதனை வடிவம் எப்படிப் பிறந்தது?

எனக்கு ஒரு கனவு இருந் தது. திரைப்படப் பாடல்கள் இவ்வளவு எழுதி இருக்கிறோம். ஆயிரக்கணக்கான இந்தப் பாடல் களில் ஒரு 10 அல்லது 12 பாடல்கள் தவிர அத்தனையும் மெட்டுக்கு எழுதப்பட்டவை. எல்லா இசை அமைப்பாளர்களும் மெட்டுக் கொடுப்பார்கள். அந்த மெட்டில் கிழித்துப்போட்ட சப்தங்களை நான் தமிழால் தைத்துக் கொடுப் பதுதான் மெட்டுக்குப் பாட்டு எழுதுவது. அதை நான் செய்து கொண்டிருந்தேன். எனக்கு ஒரு விருப்பம் இருந்தது. நான் எழுதிக் கொடுத்து இந்த இசையமைப் பாளர்கள் இசையமைத்தால் இன்னும் தமிழுக்கு விரிவு கிடைக்குமே, செறிவு கிடைக்குமே, சுதந்திரம் கிடைக்குமே, அழகழ கான பல்லவிகளை அள்ளிக் கொடுக்கலாமே, நம் சிந்தனைக்கு விலங்குகள் பூட்டப்பட மாட் டாதே என்றெல்லாம் நினைத்த பொழுது, நானே பாடல்களைத் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தேன். திரைப்படத்தைத் தாண்டித் தனிப்பாடல்களின் பெருவெளிகளுக்குத் தமிழைக் கொண்டு செல்ல வேண்டும் என்று துடித்தேன். முக்கியமான செய்தி என்னவென்றால், முதலீடு வேண் டும். சில கோடி ரூபாய்கள் முதலீடு இல்லாமல் இந்தச் செயலைச் செய்ய முடியாது. அந்த சில கோடி ரூபாய் முதலீடுதான் எனக்கு மிகப் பெரிய அறைகூவலாக இருந்தது. அதையும் நான் ஏற்படுத்திக் கொண்டு இந்த வெளிகளுக்கு வந்தேன். இப்போது நாட்படு தேறலுக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பைப் பார்த்தால், நூறு பாடல்களோடு கூட நிறுத்த முடியாது போலிருக்கிறது. வாழ்நாளெல்லாம் இந்தப் பணியைச் செய்துகொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. உடல்நலம், மனநலம், சூழ்நிலை, வாழ்நிலை எல்லாம் ஒன்று கூடி வந்தால் வாழ்நாளெல்லாம் இந்த நாட்படு தேறலை நான் படைத்துக்கொண்டே இருக்கலாம் என்று உள்ளிருந்து ஒரு குரல் சொல்கிறது. அந்தக் குரலைக் காலம் கேட்கும் என்று நம்புகிறேன்.

கலைஞரின் பாதிப்பு இப்போதும் இருக்கிறதா?

என் தந்தையின் இழப்பைக் கூட நான் சில நேரங்களில் மறந்திருக்க முடிகிறது. ஆனால் கலைஞரின் இழப்பை என்னால் மறக்க முடியவில்லை. அவர் நினைவுகள் வந்து செல்லாத நாட்கள் இல்லை. ஒரு அரங்கத்தை பார்க்கிறேன்; காமராசர் அரங்கத்தை கடக்கிறேன்; மியூசிக் அகாடமியைக் கடக்கிறேன்; அண்ணா சாலையில் பயணிக்கிறேன்; சில மேம்பாலங்களில் ஏறி இறங்குகிறேன்; எல்லாவற்றிலும் கலைஞரோடு பயணித்திருக்கிறேன்.

முரசொலியைப் பார்க்கிறேன், முரசொலிக் கும் கலைஞருக்கும் உள்ள உறவு, எனக்கும் முரசொலிக்கும் உள்ள உறவு, முரசொலிக்கும் கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவு, மறக்க முடியவில்லை. திரைப்படம் பார்க்கிறேன், அங்கேயும் கலைஞர் இருக்கிறார். அவரின் நினைவுகள் தப்பிச் செல்லக்கூடிய இடங்களே இல்லை. நான் என் அதிகாலையை இழந் திருக்கிறேன். தொலைபேசியை இழந்திருக்கிறேன். அதிகாலைச் சிரிப்பை இழந்து இருக்கிறேன். என்னைச் சுற்றிப் பறவைகள் மட்டும் பாடுகின்றன. அந்த பறவைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்த தலைவன் இல்லை. அதனால் கலைஞரை என்னால் மறக்க முடியவில்லை. வாழும் காலம் வரைக்கும் கலைஞருடைய புகழ் சொல்லும் ஒரு அன்பனாகவே நான் வாழ்ந்து விட வேண் டும் என்று ஆசைப் படுகிறேன்.

பேரன் பேத்தி யோடு நேரம் செல வழிக்கிறீர்களா?

மிக ஆசையாகச் செலவழிக்கிறேன். அண்மையில் என்னுடைய பேத்தி “மெட்டூரி” எனக்கு ஒரு நகைச்சுவை சொன்னாள். என்னிடம் கேட்டாள்; "தாத்தா நீங்கள் சொல்லுங்கள். “இந்தியாவில் அதிகமாகச் சம்பாதிக்கிறவர்கள் யார்?”நான் அம்பானியா என்று கேட்டேன்; இல்லை. அதானியா என்று கேட்டேன்; இல்லை. வேறு பில்கேட்ஸா என்றேன்; இல்லை. என் பேத்தி எனக்குத் திரும்பச் சொன்னாள் : “"பல் டாக்டர்கள்தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள்'’என்று. “எப்படி” என்றேன். அதற்கு மெட்டூரி சொன்னாள்: “"அவர்கள்தானே நம் “சொத்தை” எல்லாம் பிடுங்குகிறார்கள்'..,” கேட்டுச் சிரித்தேன். இந்த நகைச்சுவைக்கும், இந்தச் சிரிப்புக்கும், இந்தக் குலுங்கலுக்கும் பிள்ளைகள் பெரும் காரணமாக இருக்கிறார்கள். இப்படி நேரத்தைச் செலவழித்தால் அவர்களிடம் பெறுவதற்கு நிறைய இருக்கிறது. நம்மிடம் கொடுப்பதற்குப் பொருள் இருக்கிறது; அவர்களிடம் கொடுப்பதற்கு மகிழ்ச்சி இருக்கிறது.

இலக்கியத்தில் 50 ஆண்டுகள். இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறீர்களே! சலிக்க வில்லையா?

பறப்பது சலிக்குமா பறவைக்கு! நீந்துவது சலிக்குமா மீனுக்கு! வீசுவது சலிக்குமா காற்றுக்கு! உதிப்பது சலிக்குமா சூரியனுக்கு! ஒளிர்வது சலிக்குமா நிலவுக்கு! அதிகமாகப் பேசப்பட்டு விட்டோம் என்பதற்காகச் சலிக்குமா மொழிக்கு! நான் இவைகளாக இருக்க விரும்புகிறேன். ஒன்று சலிக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்வு பூரணம் ஆகிவிட்டது என்று வெறுப்பு வந்துவிடும். அந்த வெறுப்பு வராமல் இருப்பதற்குச் சலிப்பு ஏற்படக்கூடாது. இன்னொன்று, எழுதாவிட்டால் என் இயக்கம் நின்று போகும். எழுதுகிற வரை, பேசுகிற வரை, சிந்திக்கிற வரை, ஓடிக் கொண்டிருக்கிற வரைதான் நம்முடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ஓடிக்கொண்டே இருப்பது நதி! உலவிக்கொண்டே இருப்பது காற்று! உழைத்துக் கொண்டே இருப்பவன் மனிதன். என் புலன்கள் எனக்குச் சம்மதிக்கும் காலம் வரை, என் கல்லீரலும், என் இருதயமும், என் சிறுநீரகமும், என் மூளையும், என்னுடைய கணையமும், எனக்கு ஒத்துழைக்கிற காலம் வரை நான் ஓடிக்கொண்டே இருப்பேன். நான் ஓடிக்கொண்டே இருப்பது முக்கியமல்ல, என் இரு பக்கங்களிலும் தமிழர்களை இழுத்துக்கொண்டே ஓடிக்கொண்டே இருப்பேன்.

சந்திப்பு: முனைவர் பழமொழி பாலன்