"ஒரு பெரும் மழையால் மனிதர்களே,…நான் உங்களை என்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறேன். என்னை சுற்றுலாத்தலம் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் என்மீது செய்த, செய்கிற தாக்குதல்களை, நானும் எத்தனை நாள்தான் பொறுத்துக்கொண்டு, வலிக்காதது போல நடிக்க முடியும்?

"அப்படியென்ன உனக்கு தீங்கு விளைத்துவிட்டோம்'’எனக் கேட்கிறீர்களா? காயம்பட்டு நிற்கும் மலைகளின் அரசியான நீலகிரி நான் சொல்கிறேன் கேளுங்கள்...…

bb

என் நகரத்து மண்ணில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டீர்களே. அவ்வளவு பெரிய குற்றமாகத் தோன்றவில்லைதானே உங்களுக்கு? எழில்மிகு காடுகளில் காட்டேஜுகளைக் கட்டிக்கொண்டதில் எந்தவித உறுத்தலும் இல்லைதானே? என் விலங்குகளின் வலசைப் பாதைகளை மாற்றிவிட்டதிலும் சிறிதளவேனும் குற்றவுணர்வு இல்லைதானே? என் வனத்தை கொள்ளையடிப்பதும், சதுப்புக் காடுகளை கொன்றழிப்பதும், புல்வெளிகளை நாசம் செய்வதும் உங்களுக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டதுதானே?

பொக்லைன் கொண்டு பாறைகளைப் பிளந்தீர்கள். போர்வெல் போட்டு என்னுடலைத் துளைத்தீர்கள். விவசாயம் என்ற பெயரில் பணப்பயிர்களை நட்டீர்கள். இதெல்லாம் உங்களுக்கு நியாயமாகப்படுகிறதா? ரியல் எஸ்டேட் என்ற பெயரில் என் உடலைக் கூறுபோட்டீர்களே. அதில் ரத்தம் வழிவதை நீங்கள் கண்ணுறாததுபோல இருப்பதுதான் மனிதத்தன்மையா?

என் உறவுகளான புலிகளும், சிறுத்தைகளும், யானைகளும், மான்களும், மரங்களும், அருவிகளும் உயிர்விட்டதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தீர்களே? இதை எல்லாம் எப்படி உங்களால் சகித்துக்கொள்ள முடிகிறது? அதனால்தான் ஆலகால விஷத்தைப் போல மழையை உங்களுக்குத் தருவிக்கவேண்டிய மனநிலைக்கு ஆளானேன்.

விடிய விடிய மழையை பெய்யச்செய்து 50 கிராமங்களை வெள்ளநீரால் சூழவைத்தேன். 2,400-க்கும் மேற்பட்ட மனிதர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றினேன். நூறு ஆண்டுக்கும் சேர்த்தே மழையைக் கொட்டித் தீர்த்தேன். மரங்களைச் சாய்த்து, சாலைகளைப் பிளக்கச் செய்தேன்.

இதில் புவியியல் ஆச்சர்யம் என்னவென்றால் பள்ளத்தாக்குகளையும், மலைச்சரிவுகளையும் என்னுள்ளே வைத்திருந்தும், இந்த மழைநீரை முழுக்க என்னால் குடிக்க முடியவில்லை. நதிவழி அனைத்தையும் கான்கிரீட் கட்டடங்கள் தடுத்து நிற்பதே அதற்குக் காரணம் தெரியுமா?

இனியும் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், என்னைச் சரித்துக் கொள்வதையும், என் உடலைப் பிளந்து கொள்வதையும் தவிர வேறு வழியில்லை எனக்கு.

நான் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நீங்கள் நினைப்பது எவ்வளவு பெரிய சுயநலம் தெரியுமா? இங்குள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மரங்களுக்கும் ஏன் பூக்களுக்குமேகூட நான் சொந்தம்தான் என்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்?

சுற்றுலா என்ற பெயரில் உல்லாசமாக வருகிற உங்களின் எத்தனை வாகனங்களை நான் சுமப்பது? வாகனங்களின் கரும்புகையாலான ஆடையை அணிவது வேதனையிலும் வேதனை என்பதை அறிவீர்களா?

இருந்தாலும், இந்த அளவுக்கு மழையை பெய்யச் செய்துவிட்டேனே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமல் இல்லை. பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் புல்வெளிகளாலும், பெரு வனங்களாலும், சதுப்புக் காடுகளாலும் நான் ஓர் அழகிய, எழில்மிகு ராணியாக இருந்தேன். அதை வணிக நிலப்பரப்பாக மாற்ற இங்கே வந்தேறிகள் வரத்தொடங்கியதுதான், என் உடலெங்கும் நாற்றமெடுத்து, மெலிந்து போனதன் தொடக்கம்.

என்னுருவம் குன்றிப் போவதை, கண்ணீரோடு பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள், இத்தனை காலமாய் என்னை பத்திரமாய் கவனித்துவந்த பழங்குடி மக்கள். பாவம் அவர்களால் என்ன செய்யமுடியும்? தேயிலைத் தோட்டங்களில் தினக்கூலிகளாக அவர்கள் இருக்க, என் வனப்பைத் திருடி வளம் கொழிக்கும் செல்வந்தர்களாய் ஆகிவிட்டார்களே வந்தேறிகள்!

என்னால் வருவிக்கப்பட்ட மழையால், தினக்கூலிகளான பழங்குடிகள் வேலையிழந்து வெறும் வயிற்றோடு நிற்பதுதான் என் வேதனையைக் கூட்டுகிறது.

உல்லாச சுற்றுலா மண்டலமாக என்னை நீங்கள் பார்ப்பது ஆபத்தானது. ஆசியாவின் சூழல் மண்டலமாக போற்றுவதே அறிவுசார் மனிதர்களாய் நீங்கள் வாழ்வதற்கும், வரும் தலைமுறையினர் வளர்வதற்கும் உறுதுணையாய் இருக்கும்.

அழகிய ராணியான நான், நீர்வஞ்சி மரங்களால்தான் பூமிக்கடியில் வடியும் நீரை உறிஞ்சி உங்களுக்கு அளித்துவந்தேன். ஆனால், அந்த நீர்வஞ்சி மரங்களையே வனவேட்டை என்கிற பெயரில் அழித்துவிட்டீர்களே!

நகரங்களை உருவாக்குகிறோம் என்ற பெயரில், ஆள்வோர்கள் கொண்டுவரும் கவர்ச்சித் திட்டங்களால்தான், நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேன். சாலைகள் அமைக்க பலகோடிகளைக் கொட்டும் அரசு, சோலைகளை உருவாக்க ஏன் செலவிட மறுக்கிறது.

நீங்களெல்லாம் இதற்காக குரல் கொடுத்திருந்தால், நான் அழகிய ராணியாகவே இருந்திருப்பேன். அதைச் செய்யாமல் விட்டீர்களே...… இன்று நான் குப்பையில் வீசப்பட்ட இற்றுப்போன ஆடையணிந்த பிச்சைக்காரியாய் உருக்குலைந்து நிற்கிறேனே.

மனிதர்களே… இனி நான் அழகிய ராணியாக இருப்பதா? அலங்கோலமிக்க பிச்சைக்காரியாய் அலைவதா? முடிவு உங்கள் கைகளில்!

-அருள்குமார்