சேலத்தில் மேயருக்கும், மாவட்ட அமைச்சருக்கும் உரசல் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே கசிந்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் முன்னிலையிலேயே, மேயரை பதவியிலிருந்து தூக்கும்படி கட்சியின் அவைத்தலைவர் பேசியது தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், அம்மாபேட்டையில் ஜூலை 2-ஆம் தேதி, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. மத்திய மா.செ.வும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் மேடைக்கு வருவதற்கு முன்னதாகவே, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் அங்கிருந்து விருட்டென்று கிளம்பிச் சென்றுவிட்டார். 

இந்நிலையில், மைக் பிடித்த கட்சியின் அவைத்தலைவர் ஜி.கே.சுபாஷ், "தி.மு.க. ஆட்சியில் குறைசொல்வதற்கு ஒன்றுமே இல்லை. நம்முடைய அமைச்சர், ஏற்காடுக்கு ரோப் கார் கொண்டுவரப்போகிறார்'' என அமைச்சரைத் தொட்டு பேச்சைத் தொடங்கியவர், திடீரென்று மேயர்மீது அட்டாக்கை ஆரம்பித்தார்.  

Advertisment

"கட்சியில் செயல்பட முடியாத நிர்வாகிகளை இப்போதாவது களையெடுங்கள். நம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மக்களுடைய குறைகளை நிவர்த்திசெய்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. அமைச்சர் பேச்சைக் கேட்கிறாரா என்பதும் சந்தேகம். இன்னும் 8 மாதத்தில் தேர்தல் வர உள்ளது. அந்தக் கவலை மேயருக்கும் இருக்கவேண்டும். செயல்படாத அவரை பதவியிலிருந்து நீக்குங்கள்'' என அதிரடித்தார். 

அவைத்தலைவரின் பேச்சுக்கு அமைச்சரிடமிருந்து எந்தவித ரியாக்சனும் இல்லை. இதனால் அமைச்சரே, ஜி.கே.சுபாஷ் மூலமாக பேசவிட்டு ஆழம்பார்க்கிறாரோ என்ற பேச்சு கட்சிக்குள் பரபரக்கத் தொடங்கியது. 

"மேயருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பிரச்சனை?,'' என்று ஜி.கே.சுபாஷிடம் கேட்டோம்.

Advertisment

"சேலம் மாநகராட்சியில், ஒரு வார்டில்கூட வேலை நடக்கவில்லை. இப்படியிருந்தால் தேர்தல் நேரத்தில் எப்படி நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்டுச் செல்லமுடியும்? எப்ப பார்த்தாலும் மேயர் தன்னைச் சுத்திலும் லேடி கவுன்சிலர்கள் கூட்டத்தை வெச்சிக்கிட்டிருக்காரு. கட்சியின் பெயரைக் காப்பாத்தணும் இல்லையா?. 

"ஓரணியில் தமிழ்நாடு' பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் வருவதற்கு முன்பு திடீர்னு எங்கோ கிளம்பிப் போய்ட்டாரு. ஊர்வலம், மேடையிலும் காணோம். இந்த கட்சிக்கு மானம், மரியாதை இருக்கு.  இப்படில்லாம் பேசியிருக்கக்கூடாதுனு அமைச்சரும் என்னிடம் சங்கப்பட்டு சொன்னாரு. அதேநேரம், கட்சிக்காரர்கள் நான் நல்லா பேசினதா பாராட்டினாங்க. 

நான், அண்ணா காலத்து ஆளு. எனக்கு 88 வயசு ஆச்சு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மேயர், ஆண், பெண் கவுன்சிலர்களை, அரசின் அனுமதியின்றி கேரளாவுக்கு டூர் கூட்டிட்டுப் போயிட்டாரு. அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்னாவது? கேட்டால், அண்ணனிடம் (மா.செ.) சொல்லிவிட்டுப் போனேன் என்றார். மேயர்     "அந்த' ஒரு விஷயத்துல மட்டுமில்லை... பொலிட்டிக்கலாவே "வீக்'தான். 

கவுன்சிலர்கள் கோரிக்கையோடு வந்தால் அதைச் செய்வதில்லை. கடந்த ஆண்டே இந்த மேயரை மாற்றுவது குறித்து பேச்சு வந்தது. ஆரம்பத்திலேயே இந்த ஆள் சரியாக வரமாட்டார் என்று அமைச்சரிடம் சொன்னேன். இப்போது அமைச்சரும் அந்த எண்ணத்திற்கு வந்துவிட்டார்'' என சரவெடியாக வெடித்தார். 

இந்த விவகாரம் குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் விளக்கம் பெற்றோம். "சுற்றுலாத்துறை அமைச்சருடன் நெருக்கமாக உள்ள செவ்வாய்ப்பேட்டை ப.செ. பிரகாஷ், கவுன்சிலர் தமிழரசன் உள்ளிட்ட நாலைந்து பேர் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். மேடையில் அமைச்சர் மவுனமாக இருந்தது எனக்கும் வருத்தம்தான். பொதுக்கூட்டம் நடந்த அன்று ஒரு இறப்பு காரியம் குறித்த தகவல் வந்ததால் அவசரமாக போகவேண்டிய நிலை. இதுகுறித்து மாநகரச் செயலாளரிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றேன். 

அமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் சில கவுன்சிலர்கள் தவிர மற்ற கவுன்சிலர்கள், பொதுமக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு, ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் ஆகியேரும் என்னைப் பாராட்டியுள்ளனர். 

அவைத்தலைவர் பேசியதை நான் பெரிசா எடுத்துக்கல. இந்த பதவியைப் பயன்படுத்தி நான் ஒண்ணும் சம்பாதிக்கவில்லை. பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்தபோது, பெண் கவுன்சிலர்களும், சில பெண்களும் என்னிடம் வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார் கள். அதை யெல்லாம் பார்த்து பொறாமையால் ஜி.கே.சுபாஷ் அப்படி பேசியிருப்பார்'' என சிரித்தபடியே சொன்னார்.  

தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரோ, ''சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் டெண்டர் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திரனின் தலை உருட்டப்பட, மேயரின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்கிற பேச்சிருக்கிறது. அமைச்சர் ஓரங்கட்டிய சிலருடன் மேயர் நெருக்கமாக இருப்பதை அவர் ரசிக்கவில்லை. 

அமைச்சருக்கு நெருக்கமான சில கவுன்சிலர்கள், 80 வயதான மேயரை அவர் காதுபடவே கண்ணியக்குறைவாகப் பேசுகின்றனர். இதை அமைச்சரும் கண்டிப்பதில்லை. இந்த பின்னணியில்தான் அவைத்தலைவர், மேயரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பேசியிருக்கிறார்'' என உள் விவகாரங்களை கூறுகின்றனர். 

மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டலக்குழுத் தலைவர்களையும் ராஜினாமா செய்யும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்த ஆக்ஷன் சேலத்தின் மீது பாயுமோ என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் மாங்கனி மாவட்ட மாநகராட்சி வட்டாரத்தில் கிளம்பியிருக்கிறது.