வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திவரும் குருவிகள் அவ்வப்போது கையும் களவுமாக சிக்குகின்றனர். அவர் களை கழுகுப் பார்வையுடன் கண்காணித்துப் பிடிக்கவேண்டிய அதிகாரிகளே, இந்தக் குருவிகளுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டு விமானசேவை இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்துசெல்லும் இந்த விமான நிலை யத்தில், தமிழகத்தில் வேறெந்த பகுதியை விடவும் குருவிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது அத்தனையும் அதிகாரிகளின் துணையின்றி நடக்காது என்பதை உறுதிசெய்த மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி கள், திருச்சி, கோவை, மதுரை, சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து 40 அதிகாரிகளுடன் திருச்சி விமானநிலையத்தில் குவிந்தனர். மலே சியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த நான்கு விமானங்களில் பயணித்த 150 பேரை விடிய விடிய விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 கோடி மதிப்பிலான 33 கிலோ தங்கம், ரூ.3கோடி மதிப்புள்ள விலை யுயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதில் தங்கம் கடத்திவந்த 25 பேரிடம் தனியாக நடத்திய விசாரணையில், அனைவருமே குருவிகள் என்பதை ஒப்புக்கொண் டனர். அவர்களில் 12 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள். குருவிகள் கொண்டுவரும் தங்கத்தை வாங்குவதற்காக வெளியே காத் திருந்த 15 வியாபாரிகளையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
மத்திய புலனாய்வுப் பிரிவினரின் எண்ணம்போலவே, இதற்கு உடந்தையாக இருந்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர், உயரதிகாரிகள் 2 பேர் வசமாக சிக்கியிருக்கிறார்கள். தினந்தோறும் சிக்கிய தங்கம் தொடர்பாக பிரஸ் ரிலீஸ் அனுப்பு பவர்களே இவர்கள்தான் என்பதுதான் கொடுமை யிலும் கொடுமை. தங்க வியாபாரிகளோடு மேற்கொண்ட வங்கிப் பரிவர்த்தனைதான் அவர்களை சிக்க வைத்திருக்கிறது.
திருச்சியைச் சேர்ந்த 4 குருவிகள், "ஆளுங் கட்சி பிரமுகர் ஒருவருக்காகத்தான் இதைச் செய்தோம்' என ஒப்புக்கொண்டுள்ள நிலையில்... அவரைப் பற்றியும் விசாரணையில் இறங்கியிருக் கிறது அதிகாரிகள் தரப்பு. அ.தி.மு.க.வில் பகுதிச் செயலாளராக இருக்கும் வெல்லமண்டி சண் முகம்தான் அவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பர்மாபஜாரில் தங்க பிசினஸ் செய்துவரும் இவர், அமைச்சர் வளர்மதிக்கு நெருக்கமாக இருந்து பல்வேறு விஷ யங்களில் சாதித்தவர். நான்கு திருச்சி குருவிகளில் ஒருவரான முருகேஷன், இந்த வெல்லமண்டி சண்முகத்திடம் டிரைவராக இருந்ததும், அவரிடம்தான் அதிகளவு தங்கம் சிக்கியதாகவும் சொல்கிறார்கள். “தங்க வியாபாரத் துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தன்னிடம் முருகேஷன் டிரைவராக இருந்தார். இப்போது அவர் தொடர்பில் இல்லை'' என்று வெல்லமண்டி சண்முகம் மறுப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர்.
2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதேபோல் சி.பி.ஐ. திடீரென நடத்திய அதிரடி சோதனையில் திருச்சி விமானநிலைய சுங்கத்துறை ஆணையர் எம்.வெங்கடேசலு, கண்காணிப்பாளர் கள் கழுகாசலமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் எஸ்.அனீஸ் பாத்திமா, பிரசாந்த் கௌதம், சுங்கத்துறை ஊழியர் ஃப்ரெட்டி எட்வர்டு மற்றும் சில பயணிகள் உள்ளிட்ட 19 பேர் கைதாகினர்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை திருச்சி விமானநிலையத் தில் மட்டுமே ரூ.14.10 கோடி மதிப்பிலான 47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி கணக் கில்வராத ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் சிக்கின. சி.பி.ஐ.க்கு சந்தேகம் ஏற்படா மல் இருக்கவே, காவல்துறையில் வழக்குப்பதிவு செய்வதுபோல, சுங்கத்துறையினரும் பெயரளவுக்கு பறி முதல் நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளனர். அந்தவகையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கமே 47 கிலோ என்றால், அதிகாரிகள் மூலம் தப்பவிடப்பட்ட தங்கம் எத்தனை கிலோ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் திகைத்தனர்.
அந்த வழக்கு நிலவரம் என்னவென்றே இன்னமும் முடிவு தெரியாத நிலையில்தான், மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள், திடீர் சோதனையை நடத்தி இருக்கின்றனர்.
-ஜெ.டி.ஆர்.
__________
இத்தனை பேர் சிக்கியது எப்படி?
கடந்தவாரம் லஞ்சம் ஊழல் எதிர்ப்பு வாரமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது வெளிநாடுகளில் இருந்து கிளம்பவிருந்த குருவிகளுக்கு ஒருவாரம் கழித்து இந்தத் தேதியில் வந்தால்போதும் என சிக்னல் கொடுத்திருக்கிறார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள். இதனை ஸ்மெல் செய்துதான் குருவிகள் கூட்டத்தை கூண்டோடு பிடித்திருக் கிறார்கள் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்.
குருவிகளின் தலைவன் கைது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகி லுள்ள வெள்ளையபுரத்தைச் சேர்ந்தவர் அலிபாய் என்கிற ராவுத்தர் நயினார் முகமது(40). இவருக்குக் கீழ் நிறையபேர் குருவிகளாக செயல்படுகின்றனர். அவர்களில் சிலர் கடந்தவாரம் அளவுக்கு அதிகமாக தங்கம் கடத்தியதால், சுங்க அதிகாரி இன்ஸ். விஜய குமார், ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார். இதனால், ஆத்திரமடைந்த அலிபாய், இன்ஸ்.விஜயகுமாருக்கு கொலைமிரட்டல் விடுத்து சிக்கிக்கொண்டார். அந்தப் புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.