2014-ஆம் ஆண்டு. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் மைக்கேல் டி.குன்ஹா ஜெ. குற்றாவளி என அறிவிக்க, பெங்களூரு சிறைசென்றார் ஜெயலலிதா. மேல்முறையீட்டு வழக்கில் அவர் நிரபராதி என தீர்ப்பு வந்தாலும் மீண்டும் ஜெ. முதல்வராக பதவி ஏற்கமுடியுமா எனும் விவாதம் நாடெங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அ.தி.மு.க. மீதும், ஜெ.மீதும் அதீத பற்றுக்கொண்ட தொண்டர்கள் மனஉளைச்சலில் தத்தளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகிலுள்ள குளமங்கலம் வடக்கு கிராமம். காலைநேரம், டீக்கடையொன்றில் ஜெ. பதவி ஏற்கமுடியுமா- முடியாதா என விவாதம் போய்க்கொண்டிருந்தது. அந்த விவாதத்தை நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்த முருகனுக்கு திடீரென நெஞ்சுவலி. அனைவருமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் முருகன் இறந்துவிட்டார் என்றனர்.
முருகன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிழைப்புக்காக எலக்ட்ரீசியன் வேலைபார்த்தவர். முருகனுக்கு சித்ரா என்ற மனைவியும், சத்தியா, ராஜா, ராஜலெட்சுமி என மூன்று குழந்தைகளும் இருந்தனர். அ.தி.மு.க.வினர் கட்சிக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார்கள். குழந்தைகளின் படிப்பையும் கட்சி பார்த்துக்கொள்ளும் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சொன்னது உறவினர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
2019-ஆம் ஆண்டு. குளமங்கலம் வடக்கு கிராமம், கொத்தமங்கலம் செல்லும் சாலை. வறட்சியால் செடி கொடிகள்கூட கருகிய நிலத்தில் 20-க்கு 10 அளவில் உடைந்த ஆஸ்பட்டாஸ் மேல்கூரையுடன் கிழிந்த சேலைகளே சுவர்களாக நிற்கிறது ஒரு வீடு. அதுதான் ஜெ.வுக்காக உயிரைக் கொடுத்த முருகன் வீடு என்றார்கள். ஒரு பழைய இரும்புக் கட்டிலில் வீட்டுப் பொருட்கள். கதவுகள் உடைந்த தகர பீரோ திறந்துகொள்ளாமல் சேலையால் கட்டப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் தண்ணீர்க் குடங்கள், சோற்றுப்பானைகள். அவர்கள் குடியிருப்பதால்தான் அதை வீடு என்று சொல்லவேண்டும்.
முருகனின் மனைவி சித்ரா... ""ஜெ. பதவி ஏற்கமுடியாமல் போச்சேன்னு நினைச்சு நினைச்சே மாரடைப்பு வந்து எங்களை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டார். கொஞ்சம் நிலம் கிடந்தாலும் தண்ணீர் இல்ல. விவசாயம் செய்யமுடியாது. கட்சிக்காரங்க வந்து "அம்மா உங்களுக்கு ரூ.3 லட்சம் அறிவிச்சிருக்காங்க. பணம் சீக்கிரம் வந்திடும். குழந்தைகள் படிப்பையும் கட்சி கவனிச்சுக்கிடும்'னு சொன்னாங்க. வருஷம் 4 ஆச்சு. இதுவரை ஒரு காசு வரல.
கஜா புயல் வந்தப்ப இந்த வீட்லதான் நாலுபேரும் ஒரு மூலையில, கட்டிப்புடிச்சு உட்கார்ந்திருந்தோம். 3 மாசம் வரைக்கும் வீட்டை மறுபடி மூடமுடியல. சீட் வாங்க காசு இல்ல. அப்பறம் ஒரு தொண்டு நிறுவனம் வந்து பார்த்துட்டு 10 சிமெண்ட் சீட்டு வாங்கிக் கொடுத்துச்சு. இப்ப அதைத்தான் மேல அடுக்கிட்டு கிழிஞ்ச சேலைகளை சுற்றிக் கட்டி தங்கியிருக்கிறோம்.
மூத்த மகள் சத்தியா கொத்தமங்கலம் அரசுப் பள்ளியில் படிச்சு பிளஸ் டூவுல 404 மார்க் வாங்கியிருக்கா. மேல படிக்க அவளுக்கும் ஆசை, எந்த வசதியும் இல்லை. கூலிவேலை செஞ்சாதான் வீட்ல சாப்பாடு.
சத்தியா அக்ரி படிச்சா வேலை கிடைக்கும்னு சொல்றாங்க. தனியார் கல்லூரியில மட்டுமில்ல அரசுக் கல்லூரியில படிக்க இடம்கிடைச்சாலும் பீஸ் கட்ட வசதியில்லை. சத்தியா படிப்புக்காக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு ஆசிரியர்களே எழுதிப்போட்டாங்க. அவங்களும் வந்து பார்த்துட்டுப் போனாங்க. படிச்சு முடிச்ச உடனே அரசோ தனியார்லயோ வேலை கிடைக்கிற மாதிரியான படிப்புக்கு அனுப்புங்கன்னு சொல்லிருக்கிறேன். என் கணவர் உயிரோட இருந்திருந்தா எங்களுக்குக் கவலையில்லை. அவர் இல்லாததால நாங்க இப்படி கஷ்டப்படுறோம்''’என்று கண்கலங்கினார்.
மாணவி சத்தியாவோ, “""இதுவரைக்கும் அரசு பள்ளியில படிச்சுட்டேன். என் அம்மாவுக்கு செலவு வைக்கல. இனி பட்டப் படிப்பு படிக்க வெளியே போனால் தம்பி தங்கைகளைப் பார்த்துக்க அம்மா இருக்கணும். ஆனா அக்ரி போன்ற படிப்புக்கு உதவிசெஞ்சா நல்லா படிச்சு எனக்கு உதவி செய்றவங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பேன்''’என்கிறார் நம்பிக்கையுடன்.
கட்சியின் உண்மை விசுவாசிகளுக்கு அ.தி.மு.க. தலைமை கொடுக்கும் மதிப்பு இதுதானா?
-இரா.பகத்சிங்
___________
அறிவிப்பு மட்டும்தான்!
ஆலங்குடி தொகுதி அரயப்பட்டி சுசீலா, கருவன்குடியிருப்பு கருப்பையா மகன் சக்திவேல் இருவரும் கஜா புயலில் சாய்ந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கு புயல் நிவாரணம் ரூ. 10 லட்சமும், கருணை அடிப்படையில் அரசு வேலையும் வழங்குவதாக ஆட்சியர் ஒப்புதலுடன் அறிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ரூ.3 லட்சம் நிதி அறிவித்தார். ஆனால் அந்த குடும்பங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இதில் சுசீலாவின் கணவர் முத்துச்சாமி அ.தி.மு.க. கி.செ. என்பது கூடுதல் சுவாரஸ்யம்.