"சென்னை அண்ணா நகர் கிழக்கை தற்போதைய முகவரியாகவும், முதுகுளத்தூர் திருவரங்கத்தை நிரந்தர முகவரியாகவும் கொண்ட ஆரோக்கிய ஜான் போஸ்கோ என்கிற திருடனை, நாங்கள்தான் கைது செய்தோம்' என திண்டுக்கல் மாவட்ட போலீஸாரும், நீலகிரி மாவட்ட போலீஸாரும் போட்டிபோட்டு கெத்து காட்டினர். இதேவேளையில், "திருடப்பட்டு திண்டுக் கல்லில் விற்பனை செய்த நகை மட்டும் 80 பவுன். ஆனால் மீட்பில் காண்பிக்கப்பட்டது ஒன்பதரை பவுன் மட்டுமே. மீதம் எங்கே?' என்கிற புதிய கேள்வியால் சிக்கியுள்ளனர்... இரு மாவட்டப் போலீஸாரும்!

Advertisment

ஊட்டி, பாட்னா ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பெண் மருத்துவரின் மகள், பெங்களூருவில் பயிற்சி மருத்துவராயிருக்கிறார். அவருக்கு உதவியாக கடந்த இரண்டு மாதங்களாக கணவரும் மனைவியும் பெங்க ளூரு சென்ற நிலையில், ஊட்டியில் வீடு பூட்டப்பட்டேயிருந்துள்ளது. இதனை ஆரோக்கிய ஜான்போஸ்கோ நோட்டமிட்டு, ஜூலை 24ஆம் தேதி, இரவு 8 மணியளவில் கதவை உடைத்து நுழைந்து, நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அதிகாலையில், வீட்டருகிலுள்ள  ஓட்டலில் பார்ட் டைமாக பணியாற்றிவந்த கல்லூரி மாணவர் பூபதியின் பைக்கையும் திருடிச் சென்றிருக்கிறார்.

"அதிகாலை 5 மணிக்கு நான் பார்க்கையில் மோட்டார் பைக் காணாமல் போனது தெரிந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி.க்களை ஆராய்கையில், முந்தின நாள் மாலையே அந்த திருடன், பாட்னா ஹவுஸ் பகுதிக்கு வந்து பல்வேறு வீடுகளுக்கு மாடி வழியாக ஏறிச் செல்வதும், டாக்டரின் வீட்டில் கதவை உடைத்து நுழைவதும், பைக்கை திருடு             வதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கொண்டு, காலை 6.30 மணிக்கே ஊட்டி மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தேன். 9 மணிக்கு மேல் வாங்கன்னு சாதாரணமா சொல்லி அனுப்பிட்டாங்க'' என்றார் மாணவர் பூபதி.

thief-police1

Advertisment

பைக்குடன் தப்பிய திருடன், நீலகிரி மாவட்ட எல்லையான பார்லியார் பகுதியை சுமார் 9 மணியளவில் கடந்துசென்ற நிலை யில், "முன்னதாக காலை 8 மணியளவிலேயே பைக்கை திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவிட்டது. புகாரளிக்க வந்தபோதே போலீசார் சோதனைச் சாவடிகளை உஷார்படுத்தியிருந்தால் திருடனை பிடித்திருக்கலாம்' என மாவட்ட காவல்துறை ஊட்டி மத்திய போலீஸிற்கு டோஸ் விட்டது தனிக்கதை.

"இந்த திருட்டு எங்களுக்கு சவாலாக இருந்தது. பெண் மருத்துவருக்கு சொந்தமான அந்த பங்களாவில் முதல் நாள் அவருடைய மகளும், தோழியும் தங்கியிருந்து சென்றிருக்கிறார்கள். சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தபோது முகமூடி போட்டுத்தான் திருட்டில் ஈடுபட்டிருந்தான். டாக்டர் வீட்டில் பணம் நகைகளை தேடியவன், வெளியில் நிலவிய குளிரால் அங்கேயே கம்பளிப் போர்வை போர்த்திக் கொண்டு தூங்கியிருக்கிறான். அதிகாலையில் பைக்கை திருடியிருக்கிறான். பைக்கை சாவியில்லாமல் திருடியவன், மீண்டும் அதே இடத்தில் சாவியைத் தேடியதும் பதிவாகி யுள்ளது. 

திருடனை, ஏ.டி.சி., குன்னூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஈரோடு வழியாகத் தேடியும் துப்புத் துலங்காததால் வெறுங்கையோடு திரும்பினோம்'' என்றார் நீலகிரி மாவட்ட தனிப்படை அதிகாரி ஒருவர்.

Advertisment

இது இப்படியிருக்க, ஊட்டியில் திருடிய பைக்கைக் கொண்டு சென்னை மற்றும் திண்டுக்கல்லில் கொள்ளையடித்துள்ளான் என்கிற தகவல் பரவ, தானாக முன்வந்து திண்டுக்கல் போலீஸ் டீமோடு இணைந்தது நீலகிரி மாவட்ட தனிப்படை டீம். "ஊட்டி               யில் திருடிய பைக்கை உளுந்தூர்பேட்டை தனியார் பார்க்கிங்கில் நிறுத்திய திருடன், அங்கிருந்து ரயில் மூலம் சென்னை சென்றி ருக்கின்றான். 

மனைவியுடன் திண்டுக்கல்லிற்கு வந்தவன், தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் திண்டுக்கல் தனிப்படை டீமால் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட பிறகு தான் அவனது பெயர் ஆரோக்கிய ஜான்போஸ்கோ என்றும், அவனது மனைவி பெயர் ரேஷ்மா என்றும் தெரியவந்தது. இதில் அவனது மனைவி தப்பிச் சென்றுவிட்டார். அவளை பிடிக்க முயற்சிகள் நடக்கிறது'' என்றது திண்டுக்கல் மாவட்ட தனிப்படை. "எங்களுடைய லீடால்தான் அவன் கண்டுபிடிக்கப்பட்டான்' என திருடன்         கைதிற்கு தாங்களும் காரணம் என்றது நீலகிரி மாவட்ட காவல்துறை.

திண்டுக்கல் மாவட்ட தனிப்பிரிவு காவலர் ஒருவரோ, "பதிவான புகார்களின் அடிப்படையில் ஊட்டி, உளுந்தூர்பேட்டை, சென்னை மற்றும் திண்டுக்கல்லில் கொள்ளை யடித்த நகைகள் 80 பவுனைத் தாண்டும். அதுபோக, வெள்ளிப்பொருட்கள் கிலோக் கணக்கில் இருக்கும். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் திண்டுக்கல்லிலுள்ள ஒரு நகைக்கடையில் தான் விற்பனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் செயல் பட்டவர்கள் மீட்ட நகைகளென்று ஒன்பதரை பவுன் நகைகளை மட்டுமே காட்டினர். மீதம் என்னவானது? ஏன் இந்த வழக்கில் திருட்டு நகைகளை வாங்கியவரை சேர்க்க                                     வில்லை? மீதமுள்ள நகைகளும், வெள்ளிப் பொருட்களும் எங்கே? யாருக்கு எவ்வளவு பங்கு? என்ற கேள்விகளும் ஆரோக்கிய ஜான்போஸ்கோ கைதில் இருக்கு'' என்றார் அவர். 

கைதில் தாங்களும் இருக்கின்றோம் எனக் கெத்துகாட்டிய இரு மாவட்ட காவல்துறையும், கொள்ளையடித்த நகைகள் யாரிடம் இருக்கின்றது என அறிவிப்பார்களா?