சாதி சர்ச்சை!

caste

""அம்மா, அந்தத் தெருவுல என் ப்ரெண்ட பாக்க போனேம்மா. அவுங்க வரக்கூடாதுன்னு விரட்டுறாங்கம்மா... ஏம்மா?''’’

"ஏழு வயது அருந்ததியக் குழந்தை இப்படிக் கேட்டால், தாய் என்ன பதில் சொல்ல முடியும்.? அதிலும் விரட்டுகிறவர்கள் ஆதிதிராவிடர்களே என்றால் எங்கேபோய் முட்டுவது?' என்கிறார் காளீஸ்வரி.

Advertisment

மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ளது சந்தையூர். இங்கு "ஆதிதிராவிடர்களுக்கான இந்திரா காலனியில் காளியம்மன் கோயிலில் அருந்ததியர் வழிபட, ஆதிதிராவிடர் அனுமதிக்கவில்லை' என்று தொடங்கியது பிரச்சினை.

அனுமதிக்க மறுத்ததுடன், கோயிலைச் சுற்றி சுவரையும் எழுப்பியுள்ளனர். "அந்தச் சுற்றுச்சுவரை இடித்து பொது பயன்பாட்டுக்கு விடவேண்டும்' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. "நான்கு மாதங்களுக்குள் சுவரை அகற்றி, சுமுகமான முடிவு எட்டப்பட வேண்டும்' என்று நீதிமன்றம் விதித்த கெடு ஜனவரி 19-ஆம் தேதி முடிவுற்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அருந்ததிய மக்கள் குடும்பத்தோடு, அருகில் உள்ள மலைக்குச் சென்று கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினையைக் கேட்க, மலைக்குச் சென்றோம்…

""ரெண்டு சாதியும் ஊருக்கு ஒதுக்குப்புறமாத்தான் இருக்கோம். ரெண்டு பேரையுமே ஆதிக்க சாதிக்காரங்க ஒதுக்கித்தான் வச்சிருக்காங்க. இதுல, எங்கள அவங்க ஒதுக்கி வக்கிறது நாயமாங்க?''’என்கிறார் காளீஸ்வரி.

Advertisment

""குடியானவுங்க பண்ண கொடுமையை இவுங்களும் பண்றது சரியா? எங்களோட இந்தக் கொடுமை முடியணும். எங்க பேரப்பிள்ளைகளுக்கும் தொடரணுமா?''’என்கிறார் சந்தையூர் சின்னம்மா.

""தீண்டாமை கொடுமைக்கு எதிராகப் போராடும் விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்தப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வுகாண முன்வர வேண்டும். ஆர்.டி.ஓ.வோ நிச்சயமாக சுவரை அகற்றி பொதுப்பாதைக்கு வழிவிடுவதாகவும் உறுதி அளித்தார். ஆனால், போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலையிலேயே கவனமாக இருக்கார்''’என்கிறார் அருந்ததிய வகுப்பைச் சேர்ந்த பழனிமுருகன்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக அறிக்கை தயாரித்துவரும், தீண்டாமை எதிர்ப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு,… ""தலித் சமுதாயப் பிரிவுகளுக்குள் தீண்டாமை இருப்பது உண்மைதான். கண்கூடாக பார்த்தோம். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை''’என்றார்.

சந்தையூரில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாரும் பேச முன்வராத நிலையில், வி.சி.க. மாநிலப் பொறுப்பாளர் செல்லப்பாண்டி, ""இங்கே தீண்டாமை எதுவும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக போராடுகிறார்கள். பேசிப்பார்த்தும் பலனில்லை. கோயிலின் சுற்றுச்சுவரை எடுக்கணும் என்றால் எப்படி ஸார்?’’ என்றார்.

சாதிப்படிநிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள சமுதாய அமைப்பில் எப்போது மறுமலர்ச்சி ஏற்படுமோ!

மத ஆதிக்கம்!

religion

மதுரையில் பகிரங்கமாகவே கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலை இந்து முன்னணியினர் தொடங்கி பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.எச்.பி., இந்து முன்னணி உள்ளிட்ட மதவாத அமைப்புகள் வடமாநிலங்களில் பிற மதத்தினர் மீதான தாக்குதலை தொடுப்பது வழக்கம். இப்போது மதுரைவரை வந்திருக்கிறது.

கூடல்புதூர் காவல்நிலையத்தில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் புகார் கொடுக்க காத்திருப்பதை அறிந்து அங்கே சென்றபோது பாதிரியார்கள் நிறைந்திருந்தனர்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த பாதிரியார் ரவி ஜேக்கப்பிடம் விசாரித்தோம்.

""கூடல்புதூர் சர்ச்சில் கூட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம். அப்போது 50 பேர் துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வந்தனர். சர்ச்சில் இருந்தவர்களை ஆபாசமாகத் திட்டி, பொருட்களை அடித்து நொறுக்கினர். எனது மனைவியை நெருங்கி "மஞ்சள்புடவை கட்டி, பொட்டு வைப்போம்' என்று மிரட்டினார்கள். "இனி யாரும் கிறிஸ்தவராக முடியாது. நடப்பது எங்கள் மோடி ஆட்சி' என்றார்கள். புகார் கொடுக்க வந்தபோதுதான் சுற்றியிருக்கும் சர்ச்சுகளிலும் இதுபோன்ற தாக்குதல் நடந்திருப்பது தெரிந்தது''’என்றார்.

""மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள சர்ச்சில் ஆயுதங்களுடன் புகுந்த இந்து முன்னணியினர் மைக்செட்டை பிடுங்கி உடைத்தனர். எங்களால் தடுக்கக்கூட முடியவில்லை'' என்று இமானுவேல் என்ற பாதிரியார் கூறினார்.

""தமிழ்நாட்டில் தங்களால் காலூன்ற முடியாது என்று நினைக்கும் பா.ஜ.க.வினர், இதுபோல மதக்கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்'' என்று ஜெபஸ்டின் என்பவர் தெரிவித்தார்.

கலவரம் நடந்த மறுநாள், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரவி ஜேக்கப்பின் மனைவி பெர்ஸியாவை சந்தித்து ஆறுதல் கூறினார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. பின்னர் நிருபர்களிடம் பேசினார்…

""சர்ச்சை அடித்து நொறுக்கிய தங்கம் வெங்கடேஷ் என்பவனை ஆதாரத்துடன் படம்பிடித்து கொடுத்தும், அவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது ஏன்?''’என்றார்.

""நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக சர்ச் கட்டியுள்ளனர். அதை அகற்ற வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறோம்''’என்கிறார் இந்து முன்னணி மாநிலத் தலைவர் வெங்கடேஷ்வர சுப்பிரமணியன்.

கூடல்புதூர் பகுதியில் சர்ச்சுகள் திறக்கப்படாமல் கிடக்கின்றன.

-அண்ணல்