பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் தமிழக புலனாய்வு இதழியல் துறைக்கு வித்திட்ட முன்னோடிகளில் முக்கியமானவர் "விசிட்டர்' அனந்து. இவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே இலக்கியத்திலும், பத்திரிகை துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.
1960-களிலும், எழுபதுகளிலும் வெகுஜன ஊடகத்துறையில் அரசுக்கு எதிரான ஒரு செய்தியையோ, விமர்சனத்தையோ பார்க்க முடியாது. பெரும்பாலும் பொழுதுபோக்கு இதழ்கள்தான். இந்தச்சூழலில் அனந்து, அரசியல் நையாண்டிப் பார்வையுடனும், விமர்சனக் கண்ணோட்டத்துடனும் "கிண்டல்' என்றொரு இருவார இதழை கொண்டுவந்தார். தமிழக இதழியலுக்கு முற்றிலும் புதிய
பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் தமிழக புலனாய்வு இதழியல் துறைக்கு வித்திட்ட முன்னோடிகளில் முக்கியமானவர் "விசிட்டர்' அனந்து. இவர் பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே இலக்கியத்திலும், பத்திரிகை துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.
1960-களிலும், எழுபதுகளிலும் வெகுஜன ஊடகத்துறையில் அரசுக்கு எதிரான ஒரு செய்தியையோ, விமர்சனத்தையோ பார்க்க முடியாது. பெரும்பாலும் பொழுதுபோக்கு இதழ்கள்தான். இந்தச்சூழலில் அனந்து, அரசியல் நையாண்டிப் பார்வையுடனும், விமர்சனக் கண்ணோட்டத்துடனும் "கிண்டல்' என்றொரு இருவார இதழை கொண்டுவந்தார். தமிழக இதழியலுக்கு முற்றிலும் புதிய அந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
எப்போதும் எளிய மனிதர்களால் முன்னெடுக்கப்படும் சிற்றிதழ் முயற்சிகள் நல்ல வரவேற்பு பெறும்போது, அதை வெகுஜனதளத்தில் இயங்கும் பெரிய ஊடக நிறுவனங்கள் அப்படியே உள்வாங்கி வியாபார வெற்றியை ஈட்டிவிடுகின்றன. இலக்கியம், சிறுவர் இதழியல், மகளிர் இதழியல், விவசாயம்,.... என்பவற்றிலும் இதை நாம் பார்க்கலாம். அதுபோலத்தான் "கிண்டல்' இதழைப் போலவே "சோ'வை ஆசிரியராகக் கொண்டு "துக்ளக்' வெளியானது, விகடன் நிறுவனத்திலிருந்து. இதனால் கிண்டல் இதழ் தடுமாறியது, நின்றுபோனது. துக்ளக்கிலிருந்தே அனந்துக்கு அழைப்பு வந்தது. அவர் துக்ளக்கில் இயங்கிய அந்த காலகட்டத்தில் பொதுவிநியோகத்துறையில் அரிசி கடத்தப்பட்டது, மாநகராட்சியில் நடந்த மஸ்டர்ரோல் ஊழல்.. என அடுக்கடுக்காக பெரும்அதிர்வுகளை ஏற்படுத்தின அவரது எழுத்துகள்.
1970-களில் இந்திய அரசியல் தளத்தில் செயல்பட்ட மிகப்பெரிய ஆளுமைகளை... குறிப்பாக இந்திராகாந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜார்ஜ் பெர்னான்டஸ், சரண்சிங் போன்றவர்களை நேர்காணல் செய்துள்ளார்.
துக்ளக் இதழின் சகல பொறுப்புகளையும் அனந்துவே ஏற்று திறம்பட நிர்வகித்தார். ஆனாலும் துக்ளக் என்பது "சோ' என்ற ஓர் ஒற்றை மனிதரின் அரசியல் பார்வைகள், விமர்சனங்களை மட்டுமே கொண்டு இயங்கியதால் பரந்துபட்ட தன் இதழியல் செயல்பாட்டுக்கு உகந்த இடம் அதுவல்ல என வெளியேறினார்.
பிறகு 1980-ல் அவர் "விசிட்டர்' என்றொரு அரசியல் சமூக புலனாய்வு இதழை கொண்டுவந்தார். அது மிக நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், வெளியீட்டாளரின் பொருளாதார குளறுபடியால் நின்றுபோனது. அதுநின்ற சிறிது காலத்திற்குள்ளாகவே அதையே ரோல்மாடலாகக் கொண்டு வெளியானது "ஜூனியர் விகடன்.' அதன்பிறகு சிறிது இடைவெளிவிட்டு "விசிட்டர் லென்ஸ்' என மீண்டும் சில முயற்சிகள் செய்தார். பல புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் "எழுத்தாற்றல்' என்ற ஒரே மதிப்பீட்டைவைத்து நிறையவே வாய்ப்பளித்தார் அனந்து. அப்படியான வாய்ப்புகளை 1980-களில் பெற்றவர்களில் நானும் ஒருவன். எனக்கும் முன்பே மாலன், ஞாநி, சத்யா, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களுக்கும்... சக்தி, ராணா போன்ற ஆர்டிஸ்ட்களுக்கும் வாய்ப்பளித்தவர்.
அண்மைக்காலமாக உடல்நலமின்றி கஷ்டப்பட்டுவந்த அவர் ஏப்ரல் 8-ந் தேதி இயற்கை எய்தினார். அவருடைய மரணத்துக்கு சிலவாரங்கள் முன்பாக அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் ஆசிரியர் நக்கீரன்கோபால். அதன்விளைவாக, இந்திராகாந்தியின் நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவெங்கும் பயணப்பட்டு, விசிட்டர் அனந்து எழுதிய அரிய பதிவுகளை மீண்டும் ஒரு மீள்பதிவாக கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது நக்கீரன் குழுமம்.