/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/students.jpg)
அவர்களுக்கு ரயில் பயணமே அரிதானது. அப்படிப்பட்டவர்கள் விமானத்தில் பறக்கிறார்கள் என்றால் நம்பமுடியுமா? அந்த மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோரும் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக்கொண்டனர். கனவல்ல.. நிஜம்தான். திருவாரூர் "அறநெறி' லயன்ஸ் சங்கம் அந்த மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த 21 மாணவ-மாணவிகளை 7 நாள் அறிவுசார் பயணமாக விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று பல இடங்களை காணச்செய்து, இதனை சாத்தியமாக்கியது.
தமிழகத் தலைநகர் சென்னையின் மெரினா கடற்கரை, எல்லோர் கண்களையும் விரிய வைக்க, அண்ணா நூற்றாண்டு நூலகம் அறிவின் விலாசத்தை அவர்களுக்குக் காட்டியது. மெட்ரோ ரயில், பிர்லா கோளரங்கம், வணிக மால்கள் என சென்னையின் முகத்தையும் அகத்தையும் கிராமப்புற மாணவர்கள் அறிந்துகொண்டதுடன், ஆளுமைகளையும் சந்தித்து உரையாடி, தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/students1.jpg)
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்., "அகரம்' அறக்கட்டளை மூலம் உதவிவரும் நடிகர் சூர்யா, இளம் நடிகர் சிவகார்த்திகேயன், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்கள், திறன்மேம்பாட்டாளர்கள் என 6 நாள் பயணத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
பத்திரிகை அலுவலகத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்பிய மாணவர்களுக்கு அரைநாள் ஒதுக்கி, முழுமையாக அவர்களுடன் செலவிட்டார் நக்கீரன் ஆசிரியர். ஆசிரியர்குழு -அச்சுப்பணி -இணையதளம் எனப் பல பகுதிகளையும் அவர்களுக்கு விளக்கியதுடன், "என்-ஸ்டூடியோ' படப்பிடிப்புத்தளத்தை காட்டி, பரிசுகள் அளித்து மகிழ்வூட்டினார்.
பயண நிறைவுநாளில் சமூகசெயற்பாட்டாளர் செந்தூர்பாரி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியருடன் கவிஞர் யுகபாரதியும் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினர். பயணத்தின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்டதையும் அதன்மூலம் தங்களுக்கு கிடைத்துள்ள ஊக்கத்தையும் தங்களின் எதிர்கால நோக்கங்களையும் மாணவர்கள் மிகச்சிறப்பாக எடுத்துக் கூறினர்.
திருவாரூரிலிருந்து புறப்படும்போது பேசுவதற்கே கூச்சப்பட்ட மாணவ-மாணவியர், சென்னை அனுபவத்தின் மூலம் மைக்கை தாங்களே வாங்கிப் பேசுகிற அளவிற்குத் தன்னம்பிக்கையை வளர்த்திருப்பதைக் கண்டு இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த லயன்ஸ் சங்கத்தின் ராஜ்குமார், அரவிந்த், கலா உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழ்ந்தனர். ஒருவருக்கு 14 ஆயிரம் ரூபாய்க்கான செலவை "அறநெறி' லயன்ஸ் சங்கமும் அதற்கு பக்கபலமாக இருப்பவர்களும் ஏற்றுக்கொண்டு செலவிட, கிடைத்த பயனோ... "வானமே எல்லையாகக் கொண்ட தன்னம்பிக்கைச் சிறகுகள்' என்பதைக் காட்டியது திருவாரூர் திரும்பிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா.
-க.செல்வகுமார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-12/students-n.jpg)