முழுக் கதை!
தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே உச்சநடிகரான விஜய்யுடன் ஜோடி போட்டு பிரலமானவர் மீனாட்சி சௌத்ரி. தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் அவரை மீண்டும் தமிழில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. "அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ள நிலையில், இதில் தனுஷுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியை நடிக்கவைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இன்னும் க்ரீன் சிக்னல் வரவில்லை. காரணம், விஜய் படத்தில் நடித்தும் தனக்கு பெரிய ஸ்கோப் இல்லாத காரணத்தால் பெரிய நடிகர் படம் என்றாலே அதில் தனது கதாபாத்திரத்திற்கு எந்தளவு ஸ்கோப் என தீர ஆராய்ந்துதான் முடிவு சொல்கிறார். அதனால் ராஜ்குமார் பெரிய சாமியிடம் முழுக் கதையையும் சொல்லும்படி கேட்டிருக் கிறாராம்.
கதையின் நாயகி!
பெரிய வெற்றிப் படங்களை கொடுக்காவிட்டாலும் தொடர்ச்சியாக பட வாய்ப்புகளை பெற்றுவருகிறார் அதிதி ஷங்கர். கடைசியாக "கருடன்' பட தெலுங்கு ரீமேக் மூலம் டோலிவுட்டில் காலடி வைத்தார். அந்த படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது கைவசம் "ஒன்ஸ்மோர்'’என்ற தமிழ் படத்தை வைத்துள்ள அவர், யாரும் எதிர்பாராத விதமாக அடுத்து லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். "ஈரம்'’அறிவழகன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை "குற்றம் 23'’படத் தயாரிப்பு நிறுவனமான ‘ரெதான் தி சினிமா பீப்பிள்’ தயாரிக்கிறது. இப்படம் தனக்கு வெற்றிப்படமாக அமையும் எனச் சொல்லும் அதிதி ஷங்கர், நாயகியாக பெறாத வெற்றியை கதையின் நாயகியாக பெறுவேன் என கூறி வருகிறார். இப்படத்தின் இயக்குநர் அறிவழகன், அதிதி ஷங்கரின் தந்தையான ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
பதிலடி!
மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்த படம் "சால்பாஸ்.' 1989ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ரீமேக்காகிறது. 2021ஆம் ஆண்டு ஷ்ரதா கபூர் நடிப்பில் உருவாவதாக அறிவிக்கப்பட்டு, தொடங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் நடிக்க கமிட்டாகியுள்ளார். அம்மா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால் ஜான்வி கபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அம்மா பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தை திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்து நடிப்பு பயிற்சி பெற்று வரும் அவர், தன்னுடைய கரியரில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமையும் எனவும் நம்புகிறார். ஏற்கனவே ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘"பரம் சுந்தரி'’ படம், மலையாள கதாபாத்திரத்திற்கு ஏன் இந்தி நடிகையை தேர்வு செய்தீர்கள் என்ற விமர்சனங்கள் கேரள நடிகைகளிடம் எழ, அதைக் கண்டுகொள் ளாமல் கடந்துவிட்ட ஜான்வி கபூர், அந்த விமர்சனங்களுக் குத் தனது நடிப்பு மூலம் பதிலடி கொடுக்க வுள்ளாராம்.
நல்ல நேரம்!
தொடர்ச்சியாக படங்கள் நடித்துவந்தாலும் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் இருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘"ஆர்யன்'’ படம் ஒரு வழியாக அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதோடு ரவி மோகனின் முதல் தயாரிப்பான ‘"ப்ரோ கோட்'’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் லீட் ரோலில் அவர் நடித்த ‘"தி கேம்'’ என்ற வெப் தொடர் அக்டோபர் 2ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. தொடர்ந்து தனது படங்கள் ரிலீஸாவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இனிமேல் தனக்கு நல்ல நேரம் தான் என அடித்துக்கூறும் அவர், இந்த படங்கள் அனைத்தும் தன்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறாராம்.
-கவிதாசன் ஜெ.