தைலாபுரம் தோட்டத்தில் 1999-ல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசின் மணிவிழாவாகத் தொடங்கி, அடுத்த மூன்றாம் ஆண்டிலிருந்து தமிழ்ப்புத்தாண்டு விழா, வீட்டுப் பொங்கல் விழா, மாட்டுப் பொங்கல் விழா என விரிந்து... கடந்த 19 ஆண்டுகளாக கொண்டாடப்படும் செம்மொழிக் குடும்ப விழாவிற்கு "தைக்கூடல்' என பெயர் சூட்டி, அந்தப் பெயருக்காக தன் அண்ணன் அன்புமணியிடம் ஐயாயிரம் ரூபாய் பரிசாகப் பெற்றிருக்கிறார் தங்கை கவிதா ஜெயகணேஷ்.
அந்த 19 ஆண்டு விழாக்களைப் பற்றிய கட்டுரைகளையும் அழகிய புகைப்படங்களையும் 424 பக்கங்களில் தொகுத்து நெஞ்சையள்ளும் ஒரு சிறப்பு மலரை தயாரித்து, குடும்ப உறவினர்கள் மட்டுமன்றி, மலரைக் கண்டோர் மனங்களையெல்லாம் திரும்பிப் பார்த்து வியப்படைய வைத்திருக்கிறார் மருமகள் சௌமியா அன்புமணி.
சென்னை, லீ ராயல் மெரிடியனில் 27-01-2018 அன்று நடந்த "தைக்கூடல்' சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசின் குடும்பத்தினருடன் சிறப்பு அழைப்பாளர்களாக நக்கீரன் ஆசிரியர், அன்புமணி ராமதாஸ், டாக்டர் பழனி பெரியசாமி, நல்லி குப்புசாமி, இயக்குநர் சுசிகணேசன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, ஐசரி கணேஷ், திருப்பூர் கிருஷ்ணன், கவிதா, தமிழ் இந்து ஆசிரியர் அசோகன், தயாரிப்பாளர் "கலைப்புலி' தாணு, பாடகர் கார்த்திக், இயக்குநர் தங்கர்பச்சான் உள்ளிட்ட திரையுலகினரும் பத்திரிகையாளர்களும் பங்கேற்றனர்.
தைலாபுரத் தைக்கூடல் திருவிழா, கரும்பாலே குடில் அமைத்து காய்கறிகளால் பந்தலமைத்து, கோலப் புதுப்பானையில் பால் பொங்கப் பொங்க கொண்டாடி மகிழும் விழாவாக மட்டுமே அமைந்துவிடாமல் கூத்து, கெக்கிலி ஆட்டம், புலி ஆட்டம், காவடியாட்டம், பச்சைக்காளி, பவளக்காளி, பொம்மலாட்டம், மௌனமொழி நாடகம், இருள்ஒளி நடனம், நுண்கலைகள், சிலம்பாட்டம், பூக்கள் சேகரிக்கும் போட்டி என குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற இலக்கிய விழாவாக, இசைவிழாவாக கொண்டாடப்பட்டிருப்பதை உரைகளில் படித்தும், படங்களில் பார்த்தும் புகழ்ந்துரைத்தார்கள் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள்.
""அருமையான தாய், தந்தையரைப் பெற்ற நாங்கள் பாக்கியசாலிகள். எங்கள் தாய், தந்தையைப் போலவே எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் விளங்குவோம்'' சௌமியா அன்புமணியின் சொற்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மந்திரம்.
"தைப்பொங்கல் வந்தது
பாலும் பொங்குது
கூடி வாருங்களே!
தைப்பொங்கல் வந்தது
பாலும் பொங்குது
சேர்ந்து வாழ்த்துங்களே!'
ஒவ்வோர் ஆண்டும் தைக்கூடலில் ஒலித்த பாடல் இது. தமிழகமெங்கும் ஒலிக்கவேண்டிய பாடல் இது.
-கீரன்