/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thali.jpg)
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்குழந்தைகளின் திருமணத்திற்கு உதவி செய்யும் நோக்கத்தில் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்'. 1989ஆம் ஆண்டு திட்டம் தொடங்கியபோது 5 ஆயிரம் ரூபாய்தான் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இப்போது, தாலிக்கு அரைபவுன் தங்கத்தோடு, பட்டதாரிப் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிளஸ்டூ முடித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த உதவித் திட்டத்தை பெறுவதற்கான மனுக்கள் சமூக நலத்துறை அலுவலகங்களில் குவிந்து கிடக்கின்றன.
ஆனால், இந்த நிதியை பாதிக்குப் பாதி அதிகாரிகள் கையாடல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழல் தடுப்பு அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த விஷயம் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட சுதன் என்பவரிடம் பேசினோம்.…
""பட்டப்படிப்பு முடித்த என் தங்கைக்கு திருமண உதவித்தொகைக்காக தோவாளை தாலுகா அலுவலகத்தில் 3-1-2016ல் மனுக் கொடுத்தோம். மூன்று மாதத்தில் உதவித்தொகை கிடைக்கும் என்றார்கள். ஆனால், எனது தங்கையின் திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் நிதி கிடைக்கவில்லை. அலையோ அலையென்று அலைந்தாலும், "எங்கள் கையிலிருந்தா கொடுக்க முடியும்?' என்று சொல்லி இரக்கமில்லாமல் அலைய விட்டார்கள்.
ஒன்றரை ஆண்டுகள் கழித்து 30-6-2017ல்தான் அரைபவுன் தங்கத்தை கொடுத்த அதிகாரிகள், 25 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்தார்கள். பாக்கியை பணம் வரும்போது கொடுப்பதாக கூறி அனுப்பினார்கள். மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பதிலும் பல சாக்குப் போக்குகளை கூறினார்கள். வங்கிக் கணக்கில் போட்டுவிட்டதாக ஏமாற்றினார்கள். நான் தொடர்ந்து அலைந்து அவர்களை தொந்தரவு செய்ததால், 19-1-2018ல் 25 ஆயிரம் ரூபாயை கணக்கில் போட்டனர். அரசு கொடுக்கும் நிதியுதவியை பெற சரியாக 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஏழைக் குடும்பங்கள் திருமணத்திற்கு சிரமப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை சமயத்திற்கு உதவும் வகையில் செயல்படுத்த அதிகாரிகள் மறுக்கிறார்கள்''’என்றார் சுதன். இவர் குமரி மாவட்டம் இறச்சக்குளத்தைச் சேர்ந்தவர்.
மாவட்ட சமூகநலத் துறையில் என்னதான் நடக்கிறது என்று பா.ஜ.க. பிரமுகர் காளியப்பனிடம் பேசினோம்.…
""திருமண உதவி கேட்டு விண்ணப்பிக்கிறவர்களை அலைக்கழிக்கிறார்கள். அலுவலகத்துக்கு நடையாய் நடந்து உதவியைப் பெறுவதற்குள் வெறுத்துப் போய்விடுகிறார்கள். திருமணத்துக்கான உதவித்தொகையை நம்பி கடன் வாங்குகிறவர்கள், வட்டி கட்டமுடியாமல் திணறுகிறார்கள்''’என்றார்.
அரசு கொடுக்கும் திருமண உதவித்தொகையை ஒரே தவணையில் கொடுக்க வேண்டும். ஆனால், ஓரளவு அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஒரே தவணையில் பெறுகிறார்கள். அப்பாவி கிராமத்து ஜனங்களுக்கு தங்கத்தை மட்டும் கொடுத்துவிட்டு, உதவித் தொகையில் பாதியை மட்டுமே கொடுக்கிறார்கள். வங்கிக் கணக்கில் போடப்படும் பாதிப் பணத்துக்குப் பிறகு, மீதிப் பணத்தைப் பெறுவதற்குள் வெறுத்துப்போய் பலர் முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்ட அப்பாவி மக்களின் பணத்தை அதிகாரிகள் விழுங்கிவிடுகிறார்கள். இந்த அதிகாரிகளுக்கு உடந்தையாக சில வங்கி அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் உதவித்தொகையைக் கேட்டு அலையும் இரண்டு பெண்களிடம் பேசினோம். அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த பெண் கூறியது...
""எனது மகளுக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரைப்பவுன் தங்கமும், 25 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார்கள். அதை வாங்குவதற்கே நிறைமாத கர்ப்பிணியான எனது மகளை இரண்டுமுறை அலுவலகத்துக்கு அழைத்து வரச்சொல்லி அலைக்கழிச்சாங்க. பாக்கி 25 ஆயிரம் ரூபாயை கேட்டு வந்தால், எரிச்சலாய் பேசி வெறுப்பேற்றுகிறார்கள்''’என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thali2.jpg)
சுசீந்திரத்தைச் சேர்ந்த பெண் நம்மிடம் பேசியபோது கூறியது... ""மகளின் கல்யாணத்துக்குமுன் உதவித்தொகை கிடைக்கும் என்று நினைத்தோம். இரண்டு வருடம் கழித்து தங்கமும், 25 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார்கள். அந்த ரூபாயிலும் 15 ஆயிரத்தை மகளோட மாமியார் வாங்கிட்டுப் போயிட்டாங்க. மீதம் 25 ஆயிரம் ரூபாய்க்காக இப்போ அலையுறேன்''’என்கிறார் சங்கடத்துடன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டி ரமணியிடம் பேசும்போது, ""திருமண உதவி என்பது திருமணத்துக்கு முன்பே கொடுக்கவேண்டும். ஆனால், திருமணம் முடிந்து பேரப்பிள்ளைகள் வந்த பிறகும் பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் பயனாளிகளை அலைக்கழித்த பிறகு ஒரே தவணையில் உதவித்தொகையை கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்.
எல்லாம் முடிந்து வங்கியில்போய் பணம் எடுக்கப்போனால், உங்கள் கணக்கில் இருப்புத் தொகை வைக்காமல் இருந்தீர்கள். ஆதார் எண் இணைக்கவில்லை என்று பல காரணங்களைக் கூறி அந்தப் பணத்தை எடுக்கவிடாமல் செய்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.
சமூகநல அலுவலர் செல்வி பியூலாவிடம் பேசியபோது, ""இந்தத் திட்டத்தில் பயனாளிகளின் பணத்தை யாரும் எடுத்துவிட முடியாது. சில சமயங்களில் கவனக்குறைவால் கணக்கு மாறிவிடும். மற்றபடி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் தவறு''’என்றார்.
ஊரறிந்த ரகசியத்தை யாரால் மறைக்க முடியும்?
-மணிகண்டன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/thali2.jpg)