"வேதாந்தம்' என்றாலே சிக்கல்தான் போலும்.…அது ஆன்மிகமாக இருந்தாலும்… தொழில்நிறுவனமாக இருந்தாலும்... தூத்துக்குடியில் 1994-ல் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க ரிப்பன் வெட்டும்போதே, அதன் எதிர்கால விரிவாக்கத்துக்கு வழிசெய்யும்வகையில் 640 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வழிவகை செய்தவர் ஜெயலலிதா.
ஆலை தொடங்கியது முதல் தற்போது வரை 22 ஆண்டுகளாக தூத்துக்குடி நகர மக்கள் சிறிதும்பெரிதுமாக விடாமல் போராட்டங்களை நடத்தியபடிதான் இருக்கிறார்கள்.
தொடங்கியது முதலே ஸ்டெர்லைட் ஆலையின் லாபவெறிக்கு ஆலைக்குள்ளும் வெளியிலும் உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. 1997-ல், சிம்னியிலிருந்து வெப்பக்காற்று வெளியேறும்போது, அதன் பாதிப்புக்குள்ளாகி இறந்தார்கள் நடராஜன், பாண்டியன் எனும் ஊழியர்கள். 98-ல் நாற்பது டன் ஆயில் கொதிநிலை கடந்து வெடித்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2009-ல் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒருவர் பலியானார். 2010-ல் ஆசிட் வெடிப்பால் வடஇந்தியப் பணியாளர் ஒருவரின் கண்பார்வை பறிபோனது. அ
"வேதாந்தம்' என்றாலே சிக்கல்தான் போலும்.…அது ஆன்மிகமாக இருந்தாலும்… தொழில்நிறுவனமாக இருந்தாலும்... தூத்துக்குடியில் 1994-ல் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்க ரிப்பன் வெட்டும்போதே, அதன் எதிர்கால விரிவாக்கத்துக்கு வழிசெய்யும்வகையில் 640 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வழிவகை செய்தவர் ஜெயலலிதா.
ஆலை தொடங்கியது முதல் தற்போது வரை 22 ஆண்டுகளாக தூத்துக்குடி நகர மக்கள் சிறிதும்பெரிதுமாக விடாமல் போராட்டங்களை நடத்தியபடிதான் இருக்கிறார்கள்.
தொடங்கியது முதலே ஸ்டெர்லைட் ஆலையின் லாபவெறிக்கு ஆலைக்குள்ளும் வெளியிலும் உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. 1997-ல், சிம்னியிலிருந்து வெப்பக்காற்று வெளியேறும்போது, அதன் பாதிப்புக்குள்ளாகி இறந்தார்கள் நடராஜன், பாண்டியன் எனும் ஊழியர்கள். 98-ல் நாற்பது டன் ஆயில் கொதிநிலை கடந்து வெடித்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 2009-ல் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒருவர் பலியானார். 2010-ல் ஆசிட் வெடிப்பால் வடஇந்தியப் பணியாளர் ஒருவரின் கண்பார்வை பறிபோனது. அதே ஆண்டில் சல்ஃப்யூரிக் ஆசிட்டால் முத்துக்கிருஷ்ணன் எனும் பணியாளர் மரணமடைந்தார்.
2013-ல் நடு இரவில் ஓவர்ஷிப்டின்போது வெளியேறிய நச்சுப்புகையை அதிகாலையில் திறந்துவிட்டதில் தூத்துக்குடி நகரமே கண்ணெரிச்சல், பார்வை மங்கல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு அமளிதுமளியானது. இவைதவிர, உள்ளுக்குள்ளேயே பல மரணங்கள் மூடிமறைக்கப்பட்டதாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவை வழக்காக உருவெடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் பேரம் பேசியும், அதிகாரத்திலுள்ளவர்களை கரன்சியால் வாயடைத்தும் மூடப்பட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
1998-ல் ஆலைப் பணியாளர்களான பெருமாள், சங்கர் இருவரும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவும் அஜாக்கிரதையாலும் மரணமடைந்தனர். இந்த வழக்கை இருபது வருடங்களாக இழுத்தடித்து வருகிறது ஆலை நிர்வாகம். இருக்கும் ஆலையையே மூடவேண்டுமென தூத்துக்குடி மக்கள் போராடி வரும் நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கு மத்திய, மாநில அரசின் அனுமதியையும் பெற்றிருக்கிறது ஸ்டெர்லைட். இதையடுத்து தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் கொதித்தெழுந்து மார்ச் 24 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் லட்சக்கணக்கான பேர் திரண்டனர். "உயிரை விலையாகக் கொடுத்து அடையும் முன்னேற்றம் தேவையில்லை' என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
இதையடுத்து ஊடகங்கள்வழியாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தன்னிலை விளக்கமளித்தது. ஆலைநிர்வாக அறிவிப்பின்படி பார்த்தாலே, தினசரி 1100 டன் தாமிரமென ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தியாகிறது. ஒரு டன் தாமிர உற்பத்தியின்போது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு கழிவாக வெளியேறும். இதனால் சராசரியாக மாதத்துக்கு அறுபத்து ஏழு டன் கந்தக டை ஆக்சைடு காற்றில் கலக்கிறது. இதைத்தான் ஆண்டெல்லாம் நகர் மக்கள் சுவாசிக்கிறார்கள். இதில் புதிய விரிவாக்க ஆலை மூலமாக இன்னொரு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தியானால் மக்களின் கதி என்னவாகும்?
ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு, விவசாய பாதிப்புடன் மக்களின் உடல்நலமும் பெரிதும் சீர்கெடுகிறது. இதனால்தான் மக்கள் தன்னிச்சையாக பொங்கியெழுந்து போராட்டக் களத்துக்கு வந்தார்கள். ஆனால், அரசோ ஆலை நிர்வாகத்துக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் ஆலையால் பாதிப்பில்லையென சத்தியம்செய்யாத குறை.
ஸ்டெர்லைட் வெளிவிடும் நச்சுக்கழிவுகள் எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தும் என ரசாயன நிபுணர்களின் கருத்தைக் கேட்டு, ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுசெல்வதற்கென ஓர் ஆய்வறிக்கையைத் தயார் செய்துவருகிறார் தி.மு.க. மாநில இளைஞரணி துணை அமைப்பாளரும் வழக்கறிஞருமான ஜோயல்.
“""தாமிர உற்பத்தியின்போது வெளிப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற நச்சு உலோகக் கழிவுகள் வெளியேறுவதால் அவை நிலத்தடி நீரையும் கடல்நீரையும் பாழ்படுத்துகின்றன. கந்தக டை ஆக்ஸைடு காற்றில் கலப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுகின்றது. ஆஸ்துமா, கேன்சர், மலட்டுத்தன்மை, சிறுநீரகக்கல் போன்ற எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன''’’ என்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையின் பி.ஆர்.ஓ. ஜிமோன் மேத்யூவிடம் ஆலையின் தரப்பு குறித்து அறிய தொடர்புகொண்டபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவேயில்லை.
உயிருடன் விளையாடும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தும் போராட்டங்களை பாதிக்கப்படும் மக்கள் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.
------------------------------
ஆலை மூடலின் பின்னணி
போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலைப் பணிகளை 15 நாட்களுக்கு நிறுத்திவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. போராட்டத்தினை தொய்வடையச் செய்வதற்காக ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் இதுவென ஒரு தரப்பு கூறுகிறது. "ஸ்டெர்லைட் ஆலைக்கான முக்கிய மூலப்பொருட்கள் காப்பர் மற்றும் ராக் பாஸ்பேட். இந்த மூலப்பொருட்களுடன் வந்த மோண்டா கப்பல், மக்களின் போராட்டம் காரணமாக 40 ஆயிரம் டன் மூலப்பொருட்களுடன் கடலிலே காத்திருக்கிறது. அதற்கான தடையில்லாச் சான்று, வரும் மார்ச் 30-டன் முடிகிறது. எனவே புதிய தடையில்லாச் சான்று கிடைத்தவுடன் மூலப்பொருட்களை கொண்டுவரலாமென பராமரிப்புப் பணி என்ற பெயரில் ஆலையை மூடி அமைதி காக்கிறது ஸ்டெர்லைட்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
-நாகேந்திரன்