தண்ணீர் தண்ணீர்!
நாகை பூம்பூகார் தொகுதி சின்னங்குடியில் ஐந்தரை கோடி ரூபாய் செலவில் மீன் இறக்குமதி தளத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அவருடன் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜும், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரும் வந்தனர்.
விழா முடிந்து புறப்பட்ட அவர்களை சின்னங்குடி சுனாமி குடியிருப்பு பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களோடு வழிமறித்தனர்.
ஒண்ணும் தெரியாதவர்போல, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ""என்னம்மா பிரச்சினை?'' என்று கேட்டு முடிப்பதற்குள் வேகமாக இறங்கிவந்த எம்.எல்.ஏ. பவுன்ராஜ், ""உங்க மண்டையில ஏதாச்சும் இருக்கா? தண்ணிப் பிரச்சினைனு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உடனே செஞ்சு கொடுக்கப்போறேன். சரி... வழிவிட்டு வீடுகளுக்குப் போங்க... போங்க'' அதட்டலாய்ச் சொன்னார்.
வழிமறித்த பெண்களோ, ""ரெண்டாவது முறையா எம்.எல்.ஏ. ஆயிட்டீங்க. நீங்க ஓட்டுக்கேட்டு வரும்போதே தண்ணிப் பிரச்சினையை சொன்னோம். எம்.எல்.ஏ. ஆனதும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்னு சொன்னீங்க. இப்பவும் பலதடவை மனு குடுத்தோம்; சொன்னோம். எங்களுக்கு நீங்க செய்யலை. ஆனால் நீங்க இன்னிக்கு பல ஆயிரம் கோடிக்கு அதிபதி..'' கொந்தளித்தார்கள்.
எம்.எல்.ஏ. ஆவேசமாக ஏதோ சொல்ல... மாவட்ட ஆட்சியர் உடனே, ""நீங்க போங்க! இவங்ககிட்ட நான் பேசிக்கொள்கிறேன்'' என்று எம்.எல்.ஏ.வை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அங்கு நின்றபடி குடிநீர் வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டார்.
""சின்னங்குடியில் உடனே தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்'' உத்தரவிட்டார். பிறகு தாய்மார்களைச் சமாதானப்படுத்திவிட்டுக் கிளம்பினார். அவர் பின்னால் எம்.எல்.ஏ.வும் அமைச்சரும் கிளம்பினார்கள்.
-க.செல்வகுமார்
டீலிங் ரெடி!
பங்குனி அனலைக் காட்டிலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரம் புதுச்சேரி அரசியலை வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறது. ""பிப்ரவரி இறுதியில் புதுச்சேரி வந்த பிரமர் மோடி, "மத்திய அரசு நியமித்த நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றக் கடமையாற்றாமல் தடுப்பது நியாயம்தானா?' எனக் காட்டமாகவே பேசினார். அந்தப் பேச்சிலிருந்தே முதலமைச்சர் நாராயணசாமி புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?'' என்கிறார்கள் புதுச்சேரி பா.ஜ.க.வினர்.
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, தனது சகாக்களுடன் டில்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, பா.ஜ.க. மற்றும் ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகள் குறித்து புகார் கூறியிருக்கிறார். அதற்கு ராகுல், ""ஒழுங்கா தேசிய அரசியலிலேயே இருந்திருக்கலாம். சரி... உங்களுக்குத் தெரியாததா? பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றாராம்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அழைத்ததால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி டில்லி சென்றார். இவரிடம் "ஆட்சியை முடக்கினால் ஆட்சி மாற்றத்தை உண்டாக்க முடியுமா?' எனக் கேட்டாராம் அமித்ஷா. ""எங்க கட்சி 8, அ.தி.மு.க. 4, உங்க கட்சி 3 என இப்ப 15 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். காங்கிரஸிலிருந்து மூன்று, நான்குபேர் வருவார்கள்'' என்றாராம். யோசனையில் இருக்கிறது அ.தி.மு.க. தலைமை.
30-3-18 அன்று டில்லி சென்ற ஆளுநர் கிரண்பேடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து, நியமன எல்.எல்.ஏ.க்கள் விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். இதையெல்லாம் சேர்த்துப் பிடித்து யோசித்த முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்தி லிங்கத்திடம், நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாமே?'' என்றாராம். நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவரில் பா.ஜ.க. 2, காங்கிரஸ் 1 என்ற அடிப்படையில் டீலிங் நடக்கிறதாம்.
-சுந்தரபாண்டியன்
ஏப்ரல் ஃபூல்!
ரிஷிவந்தியம் தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் போட்டியிட்டபோது, "மணலூர்பேட்டை அருகே பெண்ணையாற்றில் பாலம் கட்டித் தருவேன்' என உறுதியளித்தார்.
வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனதும், சட்டமன்றத்தில் பாலம் வேண்டிக் கேட்டார். "இருபது கோடி செலவு செய்து அந்த இடத்தில் பாலம் கட்டவேண்டியதில்லை' என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது. அனைத்துக் கட்சியினரோடு காவிரிப் பிரச்சினைக்காக டெல்லி சென்ற கேப்டன், மணலூர்பேட்டையில் பாலம் கட்ட நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். சாலைப் போக்குவரத்துத்துறை மூலம் 20 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு.
நிதி ஒதுக்கப்பட்டும்கூட பாலம் கட்டும் பணிகளைத் தொடங்கவில்லை. ""நிறைவேறுமா கேப்டன் வாக்குறுதி?'' என்று நக்கீரனில் செய்தி வெளியிட்ட பின், மணலூர்பேட்டையில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. மூன்றாண்டுகள் நடந்த பணி சமீபத்தில்தான் நிறைவுபெற்றது.
"கேப்டனை அழைத்து பாராட்டுவிழா நடத்துவோமா?' என்று ஆலோசனை செய்வதற்காக, கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் நடத்தினார் தே.மு.தி.க. மா.செ. வெங்கடேசன்.
இதையறிந்த அ.தி.மு.க. மா.செ. குமரகுரு, ஓடிவந்து பாலத்தைப் பார்வையிட்டார். விஷயத்தை முதலமைச்சர் எடப்பாடியிடம் சொன்னார். எந்த அறிவிப்பும் இன்றி கடந்த வாரம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாலத்தை திறந்துவிட்டார் முதலமைச்சர்.
தே.மு.தி.க. சார்பில் 1-4-18 அன்று பாராட்டு விழா தொடங்கியது. கேப்டனும் பிரேமலதாவும் வந்தனர். கேப்டன் சில வார்த்தைகள் பேசினார். அடுத்து மைக் பிடித்த பிரேமலதா, எடுத்த எடுப்பில் ""காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தார் முதல்வர் எடப்பாடி. அதனால் கோபமான மத்திய அரசு, எடப்பாடி அரசை சற்றுமுன் கவிழ்த்துவிட்டது'' என்று நிறுத்தினார். உண்மையென நம்பிய கூட்டம் விண்ணைப் பிளக்கும் கரவொலி எழுப்பியது. சத்தம் குறைந்ததும்... ""சும்மா... ஏப்ரல் முதல்தேதி... முட்டாள்கள் தினமல்லவா... அதனால் சொன்னேன்'' என்றார். கூட்டம் முடிந்ததும் தே.மு.தி.க. நிர்வாகிகள் சொன்னார்கள், ""கேப்டன் 20 கோடி வாங்கிக்கொடுத்தார். அ.தி.மு.க.வினர், கமிஷன் பலன் அடைந்தார்கள்.
-எஸ்.பி.சேகர்